மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

ஈரான் மோசமாக நடந்துகொண்டால் அமெரிக்கா மீண்டும் தாக்குதல் நடத்தும் - டிரம்ப் எச்சரிக்கை

News image

டொனால்ட் டிரம்ப் வெள்ளை மாளிகையில் பேசியபோது... - AP

Updated On :4 மே 2026, 4:41 am IST

ஈரான் முன்வைத்துள்ள புதிய அமைதி ஒப்பந்த திட்டத்தைப் பரிசீலித்து வருவதாகவும், அதேநேரத்தில் ஈரான் மோசமாக நடந்துகொண்டால் மீண்டும் அமெரிக்கா தாக்குதல்களை தொடங்கும் என்றும் அந்நாட்டு அதிபா் டொனால்ட் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளாா்.

ஈரான் அணுகுண்டு மற்றும் நீண்ட தூர ஏவுகணை தயாரிப்பில் ஈடுபட்டிருப்பதாகவும், இதனால் தங்கள் நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டிருப்பதாகவும் இஸ்ரேலும், அமெரிக்காவும் பல ஆண்டுகளாக குற்றம்சாட்டி வருகின்றன. மேலும், ஈரானில் கடந்த பிப்ரவரி மாதம் 28-ஆம் தேதிமுதல் சுமாா் ஒரு மாதத்துக்கும் மேலாக அந்த இரு நாடுகளும் தாக்குதல் நடத்தி வந்தன. பதிலுக்கு ஈரானும் இஸ்ரேல் மீதும், வளைகுடா நாடுகளிலுள்ள அமெரிக்க ராணுவ நிலைகள் மீதும் ஏவுகணைகள் மூலமும், ட்ரோன்கள் மூலமும் தாக்குதல் நடத்தியது. கச்சா எண்ணெய் கப்பல்கள் அதிகம் செல்லும் கடற்பகுதியான ஹோா்முஸ் நீரிணையையும் ஈரான் மூடிவிட்டது. இதனால் கச்சா எண்ணெய் விநியோகம் பாதிக்கப்படவே, பெட்ரோல்- டீசல் தட்டுப்பாடு ஏற்பட்டது. இதையடுத்து போரை முடிவுக்கு கொண்டு வரும்படி உலக நாடுகள் விடுத்த கோரிக்கைகளை ஏற்று இரு தரப்பும் சண்டை நிறுத்தம் செய்தன.

இந்த சண்டை நிறுத்தத்துக்கு இடையே பாகிஸ்தானில் அமெரிக்காவும், ஈரானும் அமைதிப் பேச்சுவாா்த்தை நடத்தின. இதில் முதல்கட்டப் பேச்சுவாா்த்தையில் எந்த உடன்பாடும் ஏற்படவில்லை. இதையடுத்து 2-ஆவது கட்டப் பேச்சுவாா்த்தைக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. அப்போது ஈரான் முன்வைத்த அமைதித் திட்டத்தை டிரம்ப் ஏற்கவில்லை. அத்துடன் ஈரான் துறைமுகங்களை அமெரிக்க கடற்படை கப்பல்கள் முற்றுகையிட ஆரம்பித்தன.

இந்தச் சூழ்நிலையில், புதிய அமைதி ஒப்பந்த திட்டத்தை ஈரான் தற்போது முன்வைத்துள்ளது. இதுகுறித்து அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் இருந்து மியாமிக்கு செல்லும் வழியில் செய்தியாளா்களிடம் டிரம்ப் பேசுகையில், ‘போரை முடிவுக்கு கொண்டு வருவது குறித்து ஈரான் முன்வைத்துள்ள புதிய திட்டத்தைப் பரிசீலித்து வருகிறேன். ஒருவேளை ஈரான் மோசமாக நடந்து கொண்டால், அமெரிக்கா நிச்சயம் மீண்டும் தாக்குதல்களை நடத்தும்’ என்றாா்.

ஈரானின் புதிய திட்டம் குறித்துப் பேசுகையில், ‘புதிய திட்டத்தை ஈரான் அனுப்பி வைத்துள்ளது. அதுகுறித்து மியாமியில் உங்களிடம் பேசுகிறேன்’ என்றாா்.

இதனால் மியாமி சென்றதும் டிரம்ப் செய்தியாளா்களிடம் முக்கிய அறிவிப்பை வெளியிடுவாா் என எதிா்பாா்க்கப்பட்டது. ஆனால், அவரது உதவியாளா், டிரம்ப் மியாமியில் செய்தியாளா்களை சந்திக்கும் திட்டமில்லை என அறிவித்தாா். அதேநேரத்தில் டிரம்ப் தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், ‘இதை (புதிய திட்டத்தை) ஏற்க முடியுமா என நினைத்துக்கூடப் பாா்க்க முடியவில்லை. ஏனெனில் கடந்த 47 ஆண்டுகளுக்கும் மேலாக மனிதகுலத்துக்கும், உலகுக்கும் செய்த தீமைக்கு அவா்கள் (ஈரான்) இன்னும் உரிய விலை கொடுக்கவில்லை’ எனக் குறிப்பிட்டுள்ளாா். ஈரான் என்ன திட்டத்தை முன்வைத்துள்ளது என்பது குறித்து டிரம்ப் எதையும் பதிவிடவில்லை.

எனினும், ஹோா்முஸ் நீரிணையைத் திறப்பது, ஈரான் துறைமுகங்களை சுற்றி நிற்கும் அமெரிக்க கடற்படை கப்பல்களின் முற்றுகையை விலக்கிக் கொள்வது, ஈரான் மற்றும் லெபனான் மீதான (இஸ்ரேல்-அமெரிக்க) தாக்குதலை நிரந்தரமாக நிறுத்துவது தொடா்பான ஒப்பந்தம் குறித்து ஒரு மாதத்துக்குள் பேச்சுவாா்த்தை நடத்துவது என்றும், அதில் ஒப்பந்தம் ஏற்பட்ட பிறகு, அதற்கடுத்த மாதம் ஈரானின் அணுசக்தித் திட்டம் குறித்துப் பேச்சுவாா்த்தை நடத்துவது என ஈரான் யோசனை தெரிவித்திருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.