இருபத்து மூன்று ஆண்டு இடைவெளிக்குப் பிறகு 'ஞானபீடம்' விருதுக் குழுவின் பார்வை தமிழ் மீது விழுந்திருக்கிறது. அதற்கு நன்றி சொல்ல வேண்டும்.
2025-ஆம் ஆண்டுக்கான 60-ஆவது 'ஞானபீடம்' இலக்கிய விருது கவிஞர் வைரமுத்துக்கு வழங்கப்பட்டிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. 1975-இல் அகிலனுக்கும், 2002-இல் ஜெயகாந்தனுக்கும் பிறகு 'ஞானபீடம்' விருது பெறும் மூன்றாவது தமிழ் படைப்பாளி என்கிற பெருமையைப் பெறுகிறார் கவிஞர் வைரமுத்து.
கன்னடம் எட்டு முறையும், வங்காளமும் மலையாளமும் தலா ஆறு முறையும் 'ஞானபீடம்' விருது பெற்றிருக்கும்போது, தமிழுக்கு மூன்று முறைதான் 'ஞானபீடம்' பெற முடிந்திருக்கிறது. தலைசிறந்த பல தமிழ்ப் படைப்பாளிகள் இருந்தும்கூட அவர்கள் ஏன் ஞானபீடத்தின் பார்வையில் வருவதில்லை என்கிற ஆதங்கம் நீண்ட நாள்களாகவே இருந்து வந்தது. அந்தக் குறையைப் போக்கும் விதத்தில் அமைந்திருக்கிறது கவிஞர் வைரமுத்துக்கு வழங்கப்பட்டிருக்கும் ஞானபீட அங்கீகாரம்.
திரைப்படப் பாடலாசிரியர் என்பதைக் கடந்து, நிகழ்காலத் தமிழ் இலக்கியப் பரப்பில் குறிப்பிடத்தக்க படைப்பாளியாகவும், ஆளுமையாகவும் கவிஞர் வைரமுத்து வலம் வருகிறார் என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இருந்துவிட முடியாது. கவிதைகள், புதினங்கள், சிறுகதைகள் என்று அவர் யாத்தளித்திருக்கும் படைப்புகள் 37-க்கும் அதிகம். அவரது கள்ளிக்காட்டு இதிகாசம், கருவாச்சி காவியம், தண்ணீர் தேசம், மூன்றாம் உலகப் போர் உள்ளிட்ட படைப்புகள் வாசகர்கள் மத்தியில் மிகப் பெரிய வரவேற்பைப் பெற்றவை.
திரைப்படப் பாடல்களில் இலக்கியத்தை இணைத்த கவிஞர்களில் வைரமுத்துக்கு சிறப்பிடம் உண்டு. கடந்த நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாகத் தமிழ் திரையுலகிலும், இலக்கியப் பரப்பிலும் வெற்றி பவனி வந்து கொண்டிருக்கும் கவிஞர் வைரமுத்தின் கிரீடத்தில் 'ஞானபீடம்' என்கிற வைரக்கல் பதிக்கப்பட்டிருக்கிறது.
சென்னை பாடி திருவல்லீஸ்வரர் சிவாலயத்தின் திருநாவுக்கரசர் உழவாரப் பணி மன்றத்தின் சார்பில், நடத்தப்பட்ட முனைவர் தெ.ஞானசுந்தரத்தின் நினைவேந்தல் கூட்டத்தில் கலந்து கொள்ளச் சென்றிருந்தேன். சென்னைப் பல்கலைக்கழகத்தின் தமிழ்மொழித் துறையின் மேனாள் தலைவர் முனைவர் அரங்க. இராமலிங்கம் அன்பளிப்பாக என்னிடம் ஒரு புத்தகம் தந்தார்.
பச்சையப்பன் கல்லூரியில் தனக்குத் தமிழ் கற்பித்த பேராசிரியர் இராம. சுப்பிரமணியனின் 'தொல்காப்பியம்- எழுத்துப்படலப் பேருரை' என்கிற அந்தப் புத்தகத்தின் பல பிரதிகளை விலைகொடுத்து வாங்கி, தனக்கு நெருக்கமான பலருக்கும் அன்பளிப்பாக வழங்குவதாகத் தெரிவித்தார்.
அரை நூற்றாண்டுக்கும் முன்பு தனக்குத் தமிழ் கற்பித்த அந்தப் பேராசிரியரின் பேருரை மேலும் பலரைச் சென்றடைய வேண்டும், தனது பேராசிரியரின் பேராளுமை நிலைபெற வேண்டும் என்று விழையும் முனைவர் அரங்க.இராமலிங்கத்தின் குருபக்தி என்னை நெகிழ வைக்கிறது. அவர் மட்டுமல்ல, பேராசிரியர் இராம. சுப்பிரமணியனை அவரிடம் பாடம் கேட்ட அனைவருமே தங்கள் நெஞ்சில் நிறுத்திப் போற்றினார்கள், போற்றுகிறார்கள் என்பதுதான் உண்மை.
எட்டாம் வகுப்புவரை மட்டுமே வறுமை காரணமாகப் படிக்க முடிந்த இராம. சுப்பிரமணியன் தையற் கலைஞராகத் தனது வாழ்க்கையைத் தொடங்கியவர். பிறகு 'ஹையர் கிரேடு' ஆசிரியர் பயிற்சி பெற்று தொடக்கப் பள்ளி ஆசிரியராக வேலை பார்த்துக் கொண்டே தமிழில் 'வித்துவான்' பட்டம் பெற்று, சென்னை இந்து தியாலாஜிகல் உயர்நிலைப் பள்ளியில் தமிழாசிரியரானார்.
சென்னையில் தமிழ்க் கல்லூரி வேண்டும் என்கிற கனவுடன் அவரால் தமிழ் வளர்ச்சி மன்றம் தொடங்கப்பட்டது. மணலி தமிழ்க் கல்லூரியில் முதல்வர் பொறுப்பு, சர் தியாகராயர் கல்லூரி, சென்னை கந்தசாமி நாயுடு கல்லூரிகளில் பேராசிரியர் என்று கடந்து கடைசியில் தொடர்ந்து 15 ஆண்டுகள் சென்னைப் பச்சையப்பன் கல்லூரியில் பேராசிரியராக இயங்கிப் பணி ஓய்வு பெற்றவர் இராம. சுப்பிரமணியன்.
அதிகாலை நான்கு முதல் ஆறு மணி வரையில், இரவு எட்டு முதல் பத்து மணி வரையில் தமிழ் பயில வருபவர் எவராயினும் அவரிடம் எந்தக் கட்டணமும் பெறாமல் தமிழ்ப் பாடம் நடத்தி வந்த பெருமகனார் அவர். ஜார்ஜ் ஹார்ட், டோக்கியோ பல்கலைக்கழகப் பேராசிரியர் டாக்டர் நொபோரு காரஷிமா உள்ளிட்ட பல வெளிநாட்டவர்கள் அவரிடம் தமிழ் கற்றவர்கள். 'தீபம்' நா. பார்த்தசாரதி, ஒளவை நடராசன் உள்ளிட்ட பலரும் அவரது மாணாக்கர்கள்.
புலவர் பட்டம் பெறுவதற்காகப் பாடம் கேட்கப் பேராசிரியர் பெரிதும் இன்னலுற்றார், நல்ல ஆசிரியரைத் தேடி அலைந்திருக்கிறார். அப்படியும் முறையாகப் பாடம் கேட்க வாய்ப்பில்லாமல் இருந்தது. தனக்கு ஏற்பட்ட இன்னல்கள் தமிழ் பயில விரும்புபவர்களுக்கு ஏற்படக்கூடாது என்பதற்காக அவரால் தொடங்கப்பட்டதுதான் 'தமிழ் பயிற்சி மன்றம்'. நாற்பது ஆண்டுகள் பல்லாயிரக்கணக்கான மாணவர்களுக்கு இலவசமாக இலக்கண, இலக்கியப் பாடங்கள் நடத்துவதைத் தன் வாழ்நாள் கடமையாகக் கொண்டு செயல்பட்டவர் பேராசிரியர்.
அவருடைய கருத்துக்கள் சில நம்மை வியப்பில் ஆழ்த்தும்-தமிழ் மொழிச் சொற்களுள் நாலெழுத்துக்கு மேற்பட்டவை இல்லை. 'தொல்காப்பியம்', தொல்காப்பியர் போன்றவை தமிழ்ச் சொற்களல்ல; அவை நூலுக்கும் ஆசிரியருக்கும் உரிய உண்மைப் பெயர்களல்ல. அவை அறியப்படாமையால் பிற்காலத்தார் தோற்றுவித்தவையாகலாம்.
இலக்கியம், இலக்கணம் ஆகிய இரண்டும்கூடத் தமிழ்ச் சொற்களல்ல. 'கணக்கு, வழக்கு' என்பனவே அவற்றின் பழைய சொற்கள்.
'பாயிரம்' என்பது பிற்காலத்தே தோன்றித் தொல்காப்பியத்தில் இடம் பெற்றதென்பதும், அதனால் தொல்காப்பியத்தின் இறுதியில் சேர்க்கப்பட்டது என்பதும் தெரிகின்றன.
தொல்காப்பிய ஆய்வாளர்களுக்கு மட்டுமன்றி, இலக்கியத்தை முறையாய்ப் பயில விரும்புவோருக்கும் இது உள்ளங்கையில் கிட்டியிருக்கும் நெல்லிக்கனி. எழுத்துப் படலத்தைப் போலவே பிற படலங்களும் பேராசிரியர், இலக்கணச் செம்மல், தமிழவேள் இராம. சுப்பிரமணியனால் எழுதப்பட்டிருந்தால், அவையும் பதிப்பிக்கப்படுதல் வேண்டும்.
தமிழ் படிப்பதே பிறவிப் பயன் என்று நம்மிடையே வாழ்ந்து மறைந்த 'தமிழ்த் தொண்டர் புராணம்' ஒன்று உடனடியாகத் தொகுக்கப்படுதல் வேண்டும். காலம் கடந்து விட்டால் அவர்கள் குறித்த தகவல்கள் காணக் கிடைக்காமல் போய்விடும். முனைவர் அரங்க. இராமலிங்கம் போன்ற குருபக்தி மிக்க மாணவர்கள் முன்னெடுக்க வேண்டிய பணி அது.
ராஜபாளையம் அ.பேச்சியப்பன் என்று சொன்னால் சட்டென்று யாருக்கும் தெரியாது. ரஜினிகாந்த் நடித்த 'பாபா' திரைப்படத்தின் பஞ்ச் டயலாக் போட்டியில் வெற்றி பெற்ற, 'லேட்டா வந்தாலும் லேட்டஸ்டா வருவேன்' என்கிற வசனத்துக்குச் சொந்தக்காரர் என்று சொன்னால்'அட, அவரா?' என்று அடையாளம் காண முடியும். பல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்கு பெற்றவர்.
அ.பேச்சியப்பன் வெளிக்கொணர்ந்திருக்கும் கவிதைத் தொகுப்பு 'பன்னண்டு மணி'. அதில் வெளிவந்திருக்கிறது இந்தக் கவிதை
உறுத்தல்
மகனுக்கு
சாதிச் சான்றிதழ்
வாங்கச் செல்கையில்
தாசில்தார், விஏஓ,
ஆர். ஐ., ப்யூன் என
ஆளாளுக்கு
லஞ்சம் கேட்கையில்
நினைவுக்கு வந்தது..
ஓட்டுப் போடவாங்கிய
நூறு ரூபாய்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பாவேந்தரை மக்கள்மயப்படுத்துவது அவசியம்: கவிஞா் வைரமுத்து

இந்த வாரம் கலாரசிகன் - 26-04-2026

இந்த வாரம் கலாரசிகன் - 12-04-2026

இந்த வாரம் கலாரசிகன் - 05-04-2026
விடியோக்கள்

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

