உலக அளவில் இளைஞர் மனித வளத்தில் இந்தியா முதன்மை வகிக்கிறது. ஆனால், அந்த இளைஞர்களின் வளம் பெருகியுள்ள அளவுக்கு நமது வளர்ச்சி மேம்பட்டுள்ளதா என்ற கேள்வியும் எழுகிறது. இளைஞர் வளத்தை நாம் முறையாகப் பயன்படுத்தியுள்ளோமா என்ற ஐயமும் எழுப்பப்படுகிறது.
இளந்தலைமுறை குறித்த கேள்விகளுக்கும், அவர்களது எதிர்காலம் குறித்த சந்தேகத்துக்கும் விடையளிப்பதாக அமைந்திருந்தது சென்னை மயிலாப்பூரில் உள்ள ராமகிருஷ்ணா மிஷன் விவேகானந்தர் கல்லூரி சார்பில் நடைபெற்ற ஞானத் திருவிழாவான விவேக தாரங்கம்.
நாட்டில் பண்டிகைக் காலம், கோயில்களில் திருவிழாக்கள் நடைபெறுகின்றன. ஆனால், அவை கலாசார, பண்பாட்டுத் திருவிழாக்களாகவே உள்ளன. இந்தநிலையில், அறிவுக்கான திருவிழாவாகவே முழுக்க முழுக்க இளந்தலைமுறையினரை மையப்படுத்தியதாக விவேக தாரங்கம் அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
'தாரங்கம்' என்றால் அலை என்று பொருள். விவேகானந்தரின் எண்ண அலைகளை இளைஞர்களுக்கு எடுத்துச் செல்லும் அலைகள் போலவே தொடர்ச்சியாக ஞானத்திருவிழா நடத்தப்படும் என்பதால், அந்தப் பெயர் சூட்டப்பட்டதாகக் கூறுகிறார் கல்லூரியின் செயலர் சுவாமி தியானகமயானந்தா.
இளைஞர்கள் என்றால் கல்லூரிக்குள் காலடி எடுத்துவைத்தவர்கள் மட்டுமல்ல... பள்ளிகளின் மேல்நிலை வகுப்பு மாணவர்களும் அதில் அடங்குவர் என்பதால், அவர்களின் பங்களிப்பும் முக்கியமானதாக இடம் பெற்றிருந்தது.
அறிவுச் சிந்தனைப் போட்டிகள், அனுபவம் வாய்ந்தவர்களது பகிர்வுகள், நிகழ்வில் பங்கேற்ற இளைஞர்களின் ஆதங்கங்கள், எதிர்கால வளர்ச்சிக்கான ஆலோசனைகள் என நிகழ்ச்சி முழுதும் வலிமையே வாழ்க்கை என்பதை வலியுறுத்துவதாக அமைந்திருந்தது.
அறிவுத்திருவிழா அதோடு முடியவில்லை. வாரந்தோறும் விவேகதாரங்கமாக அது தொடர்ந்து வருகிறது. அதன்படி கல்லூரி மாணவர்களுக்கான மனதை மென்மைப்படுத்தி, சவால்களைச் சமாளிக்கும் திறனை மேம்படுத்தும் வகையில், பிரபலமான நிறுவனங்களில் தலைமை அதிகாரிகளாக விளங்கி சாதித்தவர்கள் தங்கள் அனுபவங்களைப் பகிர்ந்தனர்.
சீனிவாச சுப்பிரமணியன் (ரானே நிறுவன குழுமத்தின் ஓய்வு பெற்ற தலைவர்)
நமது மனதில் பல விஷயங்கள் புதைந்து கிடக்கும். அதை நாம் அறிந்திருப்பது அவசியம். நம்மைப் பற்றி அடுத்தவருக்குத் தெரிந்த விஷயங்கள், நம்மைப் பற்றி நமக்குத் தெரியாத விஷயங்கள் என வாழ்க்கை என்பது குறிப்பிட்ட வட்டத்திலேயே சுழல்வதாக உள்ளது. ஆகவே, நம்மை பற்றிய மற்றவர்கள் கருத்தைவிட நம்மை பற்றிய நமது கருத்தையே முன்னிலைப்படுத்திச் செயல்படுவது அவசியம்.
வெங்கடேஷ்வரன்பாலா (பாங்க் ஆஃப் பரோடா ஓய்வு பெற்ற உதவி பொதுமேலாளர்)
வெற்றிக்கான பத்துக் கோட்பாடுகளை நாம் கடைப்பிடித்தால் வெற்றிக் கோட்டை எட்டுவது எளிதாகும். தலைமைப் பண்புக்கான தகுதிகளை அடையாளப்படுத்தவேண்டும். நாம் நமது எண்ணத்தை எடுத்துரைக்கும் போது எப்படி அதைக் கூறினால், அவர்கள் ஏற்பார்கள் என்பதும் முக்கியமாகும். அத்தகைய உரையாடல் திறனை மேம்படுத்திக் கொள்வதும் அவசியம். எந்த நிலையிலும் நாம் படபடப்பு இல்லாமலும், உணர்வுகளுக்கு ஆட்படாமல் பேசும் திறனையும் பெற்றிருப்பது வெற்றிக்கான பாதையாகும். நேர மேலாண்மையும் செயல்படும் திறனும் முன்னேற்றத்துக்கான முக்கிய வழிகள்.
சேஷசாயி (ஷெசல்ஸ் நாட்டு கெளரவ ஆலோசகர்)
நம் நாட்டில் தலைமைத்துவம், கருணை, ஒழுக்கம், அன்பு ஆகியவற்றால் நமது செயல்பாடு தனித்துவமாக வடிவமைக்கப்படுகிறது. ஆகவே, தலைமைத்துவம் என்பது அதிகாரத்தைத் தாண்டி சேவை மனப்பான்மையை மையமாகக் கொண்டது என்றும் வலியுறுத்தப்படுகிறது.
சுந்தர்ராம் (மேலாண்மை ஆலோசகர்)
பிரச்னைகளைத் தீர்க்க சாத்தியமான தீர்வுகளை நாமே உருவாக்கவேண்டும். அந்தத் தீர்வுகள் எப்படிப்பட்டதாக இருக்கிறது என்பதை நாமே மதிப்பீடு செய்யவேண்டும். அப்படிப்பட்ட பகுப்பாய்வுத் திறனே நம்மை வெற்றிக்கு அழைத்துச்செல்லும்.
மேலும் உதயசங்கர், எஸ்.என்.பாலசுப்பிரமணியன், ஷ்யாம் சுந்தர், சேயோன் முருகன் ஆகியோர் தங்கள் அனுபவங்களைப் பகிர்ந்தனர்.
விவேக தாரங்கம் எனும் பெயரில் அறிவொளித் தலைமை நிகழ்வை வாரந்தோறும் தொடர்ச்சியாக நடத்திவரும் கல்லூரிச் செயலர் சுவாமி தியானகமயானந்தா, 'தற்கால இளைஞர்களுக்கு வருவாய்க்கான கல்வியை விட வாழ்வியலுக்கான கல்வி மிகமிக அவசியம். ஒழுக்கம், பண்பாடு, தர்மத்தை கடைப்பிடித்தல் என்ற அடிப்படையிலான கல்வியே அவசியமாகிறது. அதன்படியே 14 வாரகால திட்டத்தை செயல்படுத்திவருகிறோம்.
கடந்த 1893-ஆம் ஆண்டு சுவாமி விவேகானந்தர் சிகாகோவில் நடைபெற்ற உலக மதங்களின் பேரவையில் சரித்திரப் புகழ்மிக்க உரையை வழங்கினார். அதன் 132- ஆவது ஆண்டு விழாவை தற்போது கொண்டாடி வருகிறோம். எழுமின், விழிமின், இலக்கை அடையும் வரை நில்லாது உழைமின் என்ற அவரது தாரக மந்திரத்தைச் செயலாக்கும் வகையில்தான் விவேக தாரங்கம் நடத்தப்பட்டு வருகிறது'' என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கனிவான இதயம்... துணிச்சலான சிந்தனை

தேர்தல் ஜனநாயகத்தில் காணாமல் போன குடிமக்கள்!

புத்தாண்டில் புதிய நம்பிக்கை

மகளிர் சக்தியை ஒன்றிணைந்து வலுப்படுத்துவோம்! பிரதமர் நரேந்திர மோடி
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு
