'அறிவியல் ஆராய்ச்சியானது அறிவு சார்ந்தது. அறிவுசார் துறையில் மனித நேயத்தை முதன்மைப்படுத்த, மனித நேயத்துடன் அறிவியல் ஆராய்ச்சியில் இளம்தலைமுறையினர்
ஈடுபடவேண்டும்' என்கிறார் முனைவர் தி.ராமசாமி.
ஸ்ரீவில்லிபுத்தூரில் 1948 -ஆம் ஆண்டில் பிறந்தவர் திருமலாச்சாரி ராமசாமி. இளம்வயதிலேயே விஞ்ஞானியாக வேண்டும் என்ற வேட்கையோடு இருந்த இவர் தனது மணவாழ்வையும் துறந்து அறிவியல் ஆராய்ச்சி மணம் வீசுவதிலேயே மன மகிழ்வு கண்டார்.
அவரிடம் பேசியபோது:
'சொந்த ஊரில் பள்ளிப்படிப்பை முடித்தேன். திருச்சி ஜோசப் கல்லூரியிலும், பின்னர் சென்னை அழகப்பா தொழில்நுட்பக் கல்லூரியில் தோல் தொழில்நுட்பத்தில் பி.டெக் பட்டமும், சென்னைப் பல்கலைக்கழகத்தில் எம்.டெக். பட்டமும் பெற்றேன். 1973-இல் இங்கிலாந்தில் உள்ள லீட்ஸ் பல்கலைக்
கழகத்தில் வேதியியல் துறையில் ஆராய்ச்சியை இந்திய அரசின் உதவித் தொகையுடன் முடித்தேன். என்னுடைய தந்தைக்கு நான் தோல் துறை பயில்வதில் விருப்பம் இல்லை. ஆனால், எனது சகோதரனும், சகோதரியும் ஊக்கப்படுத்தினர்.
அமெரிக்காவின் ஏம்ஸ் எரிசக்தி ஆராய்ச்சி நிறுவனத்தில் ஆராய்ச்சிப் பணி, டெட்ராய்ட் நகரத்தில் உள்ள வய்னெஸ் ஸ்டேட் பல்கலைக்கழகத்தில் மின்னணு மாற்றம் சார்ந்த ஆராய்ச்சி, பின்னர் இங்கிலாந்தில் உள்ள நியூகேஸில் பல்கலைக்கழகத்தில் உயிர்கனிம வேதியியல் துறைகளில் பணிபுரிந்தேன்.
1984-இல் நாடு திரும்பி சென்னையில் உள்ள சி.எஸ்.ஐ.ஆர். மத்தியத் தோல் ஆராய்ச்சி நிறுவனத்தில் முதுநிலை அறிவியலாளராக 1996-ஆம் ஆண்டு வரையும், அதன் இயக்குநராக 2006-ஆம் ஆண்டு வரையும் பணியாற்றினேன். 2006 முதல் 2014 வரையில் புதுதில்லியில் மத்திய அரசின் அறிவியல், தொழில்நுட்பத்துறை செயலாளராகப் பணிபுரிந்தேன். தற்பொழுது அண்ணா பல்கலைக் கழகத்தில் கெளரவப் பேராசிரியராகப் பணியாற்றுகிறேன். 250-க்கும் மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகள், முப்பதுக்கும் மேற்பட்ட கண்டுபிடிப்புகளுக்கான காப்புரிமைகள், 8 புத்தகங்கள் என அறிவியல் துறையில் பங்களிப்பை மேற்கொண்டுள்ளேன்.
அறிவியல், தொழில்நுட்பத் துறையில் சாதனைகள்
நான் பணியில் இருந்தபோது, அறிவியல், தொழில்நுட்ப ஆராய்ச்சிகளை மேம்படுத்த அதற்கென வாரியம் உருவாக்கப்பட்டது. அதுவே 'அனுசந்தான் தேசிய ஆராய்ச்சிக் கழகம்' என்ற பெயரில் இயங்குகிறது. பெண்களுக்கான பிரத்யேகத் திட்டம், வடகிழக்கு மாநிலங்கள் பயன்பெறும் தனித்திட்டம், நானோ மிஷன், மாணவர்களுக்கு ஆய்வு உதவித்தொகை வழங்கும் இன்ஸ்பைர் திட்டம், வெளிநாடுகளுடன் இணைந்து கூட்டாராய்ச்சித் திட்டம், கிராமப்புற மாணவர்களுக்கெனத் தனித்திட்டம் உள்ளிட்ட பல திட்டங்கள் தொடங்க உறுதுணையாக இருந்தேன்.
'பத்மஸ்ரீ' , 'பத்ம பூஷண்', 'சாந்தி ஸ்வரூப் பட்நாகர் பரிசு' உள்ளிட்ட 72 விருதுகளைப் பெற்றுள்ளேன். தோல் தொழில்நுட்பவியலாளர்கள், வேதியியலாளர்கள் சங்கங்களின் பன்னாட்டு ஒன்றியம் உலக அளவில் தகுதிபெற்ற பங்களிப்புக்கான விருதையும் பெற்றுள்ளேன். 'லெதர் இன்டர்
நேஷனல்' என்கிற பன்னாட்டு இதழ் நடத்திய கணக்கெடுப்பில், கடந்த நூறு ஆண்டுகளில் தோல் துறையில் உலகளாவிய தாக்கத்தை ஏற்படுத்திய முதல் பத்துப் பேரில் எனது பெயரும் இடம்பெற்றிருந்தது.
நூற்றாண்டாகியும் நோபல் பரிசு இல்லையே, ஏன்?
100 ஆண்டுகளுக்கு முன் நோபல் பரிசு தனி மனிதர்களின் அறிவியல் சாதனைக்காகவே வழங்கப்பட்டது. சர் சி.வி. ராமன், சர் ஜெ.சி. போஸ் உள்ளிட்டோர் இவ்வாறே பரிசு பெற்றனர். ஐம்பது ஆண்டுகளாக ஆய்வகக் கட்டுமான அமைப்பின் பங்கு அதிகரித்துவிட்டது.
இருபது ஆண்டுகளுக்கான நோபல் பரிசுகளை ஆராய்ந்தால், புரட்சிகரமான கண்டுபிடிப்புகள் அதிக கவனம் பெறுகின்றன. ஆசிய கண்டமே 21-ஆம் நூற்றாண்டில்தான் அறிவியல் ஆராய்ச்சிக்குத் தேவையான முதலீடுகளைச் செய்யத் தொடங்கியது. நோபல் பரிசு வரவில்லையென்றால், சாதனையாளர்கள் இல்லை என்று அர்த்தமில்லை. நாட்டின் அறிவியல் பயணத்தை புரட்சிகரமான சாதனைகளை நோக்கி நடத்துவோம். விருதுகளும்,
பரிசுகளும் தானே வரும். இன்றைய இளைஞர்களிடம் சாதனைகள் புரியவேண்டும் என்ற ஆர்வம் உள்ளது.
ஆராய்ச்சி, ஆய்வுக் கட்டுரைகள்
அறிவியல் ஆராய்ச்சி தொழில்புரட்சிக்கு முன் உண்மையை மட்டுமே நாடிவந்தது. அறிவியல் வாயிலாக தொழில் நுட்ப ஆராய்ச்சியின் பலன் கண்டவுடன் வணிக கண்ணோட்டமும் தொற்றியது. அறிவியல் ஆராய்ச்சியில் உண்மையை மட்டுமே நாடிவரும் அறிவியலாளர்கள் இன்றும் இருக்கிறார்கள். உண்மை மட்டுமே ஆராய்ச்சியின் மகத்துவம், என்றும் நிற்கும் நிலையானது.
அந்நிய நாட்டின் தலையீடு இன்றைய தொழில்நுட்பம் சார்ந்த நாகரிகக் கட்டமைப்பில் இந்தியா போன்ற மக்கள் தொகை அதிகம் கொண்ட நாடுகள் எல்லாவற்றிலும் சுயசார்பு, தன்னிறைவு அடைவது என்பது கொள்கை அளவில் மேன்மையாகத் தோன்றும். அன்றாட வாழ்க்கையில் சாத்தியம் இல்லை. அறிதிறன்பேசியில் அறுபதுக்கும் மேலான மூலப்பொருள்கள் உள்ளன.
அவற்றில் பல நம் நாட்டில் கிடைப்பதில்லை. 'சுயசார்பு' என்ற நோக்கத்தின் முக்கியத்துவத்தை மக்கள் அறிய வேண்டும். இதற்கு நிலையான நுகர்வு சார்ந்த சமுதாய நோக்கம், தொழில்நுட்பத்திறன், குழு முயற்சி சார்ந்த ஆராய்ச்சித்திறன், கல்விச்சாலைகளின் சமுதாயக் கடமை, தொழிற்சாலைகளின் சுயசார்பு சார்ந்த உற்பத்தித் திறன், தொலைநோக்கு அடங்கிய வெளியுறவுக் கொள்கை ஆகியன முக்கியப் பங்காற்றுகின்றன.
மேற்படிப்பு, ஆராய்ச்சிக்காக வெளிநாடுகளுக்குச் செல்லும் மாணவர்கள் அங்கேயே தங்குவதைத் தவிர்க்க அவர்களுக்குத் தேசிய உணர்வையும், அப்துல் கலாம் போன்றோரின் போதனைகளையும் கொண்டு செல்ல வேண்டும்.
சுற்றுப்புறச் சூழல் பாதுகாப்பு
தமிழ்நாட்டில் 400-க்கும் மேற்பட்ட தோல் தொழிற்சாலைகளை மூடுமாறு 1990-களில் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. அப்போது மத்தியத் தோல்நுட்ப நிறுவனம் திட்டம் ஒன்றை திட்டி, அரசு, நீதிமன்ற ஒப்புதலுடன் 764 தொழிற்சாலைகளில் 9 மாதங்களுக்குள், மாசு கட்டுப்பாடு சார்ந்த தொழில்நுட்ப முறைகள் அமல்படுத்தப்பட்டது. அதன்பின்னர், படிப்படியாக திரவ வெளியேற்றம் அற்ற தொழிலாக தோல்துறையை தமிழ்நாட்டில் 2005-க்குள் மாற்ற முடிந்தது.
மிருதங்க ஆர்வம்
உமையாள்புரம் முனைவர் சிவராமன், சக அறிவியலாளர் முனைவர் நரேஷ் ஆகியோரின் உதவியுடன் மிருதங்க கலைக்கு அறிவியலை எவ்வாறு பயன்படுத்தலாம் என்ற நூலை எழுதினேன். கைவினைக் கலைகள் பொருளாதார ரீதியாக நலிவு அடையலாம்.
அறிவியல் சார்ந்த தொழில்நுட்பம் வழியாக மிருதங்கம் தயாரிக்கும் பணியில் தரக் கட்டுப்பாட்டையும் மரபுசார் அல்லாத வழிமுறைகளுக்கும் வழி அமைத்துக் கொள்ள வாய்ப்பு உண்டு. அறிவியல் பூர்வமாக மிருதங்க இசையின் சிறப்புத்தன்மையை நிரூபிக்க முடிந்தது. அறிவியல் துணையின்றி மிருதங்கம் என்ற மகத்தான இசைக் கருவியை நம் முன்னோர்கள் கண்டுபிடித்து, அபூர்வமான கலையை வளர்த்தனர்' என்கிறார் தி.ராமசாமி.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சென்னை ஐஐடி வெளியிட்ட மனித மூளைத்தண்டு ‘3டி’ அட்லஸ்

கேமராவுக்குள் மனித உணர்வுகளைப் படம்பிடித்த பாரதிராஜா!

‘சா்க்கரை நோய் குறித்த அச்சமின்றி அரிசியை சாப்பிட ஆராய்ச்சி’

ஒப்பந்ததாரா்களிடம் கமிஷன் கேட்கப்படாது: அமைச்சா் ஆதவ் ஆா்ஜுனா
விடியோக்கள்

அது என்ன திட்டம் என்றே யாருக்கும் தெரியவில்லை! நான் முதல்வன் திட்டம் குறித்து அமைச்சர் Nirmal Kumar
இணையதளச் செய்திப் பிரிவு

”தேர்தலுக்கு முன் ஆடினார் பாடினார்! இப்போது?”: நயினார் நாகேந்திரன்! | TVK | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

Balan: The boy Review | தாயைப் போல பிள்ளை! ஆனால்... | Chidambaram | Mollywood | Dinamani Talkies
தினமணி செய்திச் சேவை

மறுமணம் ஒரு குற்றமா? மனதை உலுக்கும் 'நூறு சாமி'
தினமணி செய்திச் சேவை
