கே.நடராஜன்
பிறவியிலேயே முதுகுத் தண்டுவடம் பாதிக்கப்பட்டு இளம் வயதிலேயே மேற்கொள்ளப்பட்ட 12 அறுவைச் சிகிச்சைகளால் சக்கர நாற்காலியில் நடமாடும் பத்தொன்பது வயதான கல்லூரி மாணவர் கௌதம், தனது ஓவியத் திறமையால் நூற்றுக்கணக்கான ஓவியங்களை வரைந்துள்ளார். இணையத்தில் அவருடைய பதிவுகள் வைரலாகி, வரவேற்பைப் பெற்றுவருகின்றன.
உடலில் ஊனம் இருந்தாலும், மனதில் உறுதியான லட்சியத்தோடு வாழ்க்கையில் போராடி வரும் கௌதம், வேலூர் மாவட்டத்துக்கு உள்பட்ட குடியாத்தம் பிச்சனூர் அண்ணா நகரைச் சேர்ந்த கைத்தறி நெசவுத் தொழிலாளி கண்ணையனின் மகன்.
'சாதித்தது எப்படி?' என்பது குறித்து கௌதமிடம் பேசியபோது:
'நான் பிறவியிலேயே முதுகுத் தண்டு வடம் பாதிக்கப்பட்டேன். வேலூர் சி.எம்.சி. மருத்துவமனையில் 9 அறுவைச் சிகிச்சைகள், சென்னை தனியார் மருத்துவமனையில் 3 அறுவைச் சிகிச்சைகள் என மொத்தம் 12 அறுவை சிகிச்சைகள் எனக்கு மேற்கொள்ளப்பட்டன. இதனால் சக்கர நாற்காலியில் அமர்ந்து எனது தேவைகளை நானே பூர்த்தி செய்து கொள்ளத் தொடங்கினேன்.
இதையெல்லாம் பொருள்படுத்தாது, மன தைரியத்துடன் பிச்சனூர் கங்காதரசுவாமி நடுநிலைப் பள்ளியில் எட்டாம் வகுப்பு வரையும், 9-ஆம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை குடியாத்தம் நகராட்சி மேல்நிலைப் பள்ளியிலும் முடித்தேன். தற்போது சென்னை சத்யபாமா பல்கலைக்கழகத்தில் பி.எஸ்சி பயோ இன்பர்மேஷன் & டேட்டா சயின்ஸ் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறேன்.
எனது மூன்று வயதில் பென்சிலால் ஓவியம் வரையத் தொடங்கினேன். படிப்படியாக வண்ண வண்ண எழுதுகோல்களால் ஓவியங்களை வரையத் தொடங்கினேன். இவ்வாறாக, நூற்றுக்கணக்கான ஓவியங்களை வரைந்துள்ளேன். அம்பேத்கர் உள்ளிட்ட தலைவர்கள், முதல்வர் சி.ஜோசப் விஜய், அஜித், சூர்யா உள்ளிட்ட பிரபலங்களை வரைந்துள்ளேன்.
காமராஜர் உருவப் படத்தை வண்ணப் பென்சில்களால் முந்நூறு முறை 'காமராஜர்' என்றே மாறி மாறி பெயரை எழுதி வரைந்துள்ளேன். 'திரெட் ஆர்ட்' என்ற முறையில் பலகையில் ஆணி அடித்து கருப்பு நூலால் குறுக்கும் நெடுக்குமாய் என 5 ஆயிரம் முறை பதிய வைத்து, அப்துல் கலாமின் உருவப் படத்தை வரைந்துள்ளேன். இதன் தொடர்ச்சியாக, பூதக் கண்ணாடியைப் பயன்படுத்தி வெயிலின் உச்சகட்ட வெப்பத்தில் எம்டிபி போர்டில் உருவப் படங்களை வரையும் முயற்சியை சில மாதங்களுக்கு முன் மேற்கொண்டேன்.
எனது வீட்டருகே தினமும் ஐந்து முதல் ஆறு மணி நேரம் வரையில் 7 நாள்கள் தொடர்ந்து முயற்சித்து நடிகர் அஜித் உருவப் படத்தை வரைந்தேன். இதுபோன்று, பூதக் கண்ணாடி மூலம் வெயிலில் உருவப் படங்களை வரையும் முயற்சியில் ஈடுபட்டுவருகிறேன்.
எனது ஓவியங்களை 'ஆர்ட்ஸ்ஆன்வீல்ஸ்' எனும் இன்ஸ்ட்ராகிராம் பக்கத்திலும், 'ஆர்ட்ஸ்ஆன்வீல் சேர்' எனும் யூடியூப் பக்கத்திலும் பதிவேற்றம் செய்துள்ளேன். எனது குடும்பம் பொருளாதார ரீதியில் பின்தங்கியிருந்தாலும், தன்னார்வலர்கள் சிலர் அறுவை சிகிச்சைகளுக்கு உதவினர். அரசின் கல்வி உதவித் தொகையால் கல்லூரிப் படிப்பைத் தொடர்கிறேன்.
எதிர்காலத்தில் கல்லூரிப் படிப்பை முடித்து, போட்டித் தேர்வுகள் எழுதி, அரசுப் பணிக்குச் செல்ல விரும்புகிறேன்'' என்கிறார் கௌதம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

அரசு மருத்துவமனையில் பெண்ணுக்கு முழங்கால் மூட்டு பாதுகாப்பு அறுவை சிகிச்சை

அக்னி தீா்த்தக் கடலில் பாரதிராஜா உருவப் படத்துக்கு தவெகவினா் மலரஞ்சலி

ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களில் கருணாநிதி படத்துக்கு திமுகவினா் மரியாதை

நாகை, மயிலாடுதுறையில் கருணாநிதி பிறந்த நாள் கொண்டாட்டம்
விடியோக்கள்

Balan: The boy Review | தாயைப் போல பிள்ளை! ஆனால்... | Chidambaram | Mollywood | Dinamani Talkies
தினமணி செய்திச் சேவை

மறுமணம் ஒரு குற்றமா? மனதை உலுக்கும் 'நூறு சாமி'
தினமணி செய்திச் சேவை

Samantha அதிரடி எப்படி இருக்கிறது? Engal Thangam Movie Review
தினமணி செய்திச் சேவை

ஹார்ட்டின் பட டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

