பூர்வீகச் சொத்து எதுவுமில்லாத தாயாரால் வளர்க்கப்பட்டு, பின்னாளில் பத்திரிகைகளுக்கு விளம்பரம் வாங்கிக் கொடுத்து , 1928-இல் ஆனந்த விகடனை 200 ரூபாய்க்கு விலைக்கு வாங்கிய எஸ். எஸ். வாசன் 'திரையுலகின் தந்தை' என அழைக்கப்பட்ட கே.சுப்பிரமணியத்திடம் ஜெமினி ஸ்டூடியோவை 1949-இல் வாங்கினார்.
'ஒளவையார்', 'வஞ்சிக்கோட்டை வாலிபன்', 'மோட்டார் சுந்தரம் பிள்ளை', 'இரும்புத்திரை' போன்ற பெயர் பெற்ற படங்களைத் தயாரித்தார். எல்லாவற்றுக்கும் உச்சமாக அந்தக் காலத்தில் ரூ. 35 லட்சம் செலவழித்து, 'சந்திரலேகா' என்ற படத்தைப் பல மொழிகளிலும் வெளியிட்டுப் பிரமிக்க வைத்து, பிரமாண்டங்களுக்கு பிள்ளையார் சுழி போட்டார்.
முதன் முதலாக ஜெமினி கலர் லேபரட்டரியைத் தொடங்கினார். இவர், தென்னிந்திய பிலிம் வர்த்தக சபைத் தலைவராகவும், பின்னர், அகில இந்திய திரைப்படத் தலைவராகவும், மாநிலங்களவை உறுப்பினராகவும் இருந்தார். அண்ணா முதலமைச்சரானதும் முதல் உலகத் தமிழ் மாநாட்டின் பேரணியை சிறப்பாக நடத்திக் கொடுத்து அவரால் பாராட்டப்பட்டார்.
இத்தனை புகழுக்கு சொந்தக்காரரான எஸ்.எஸ். வாசனின் மகன் பாலசுப்பிரமணியத்தையும், மாப்பிள்ளை மணியையும் நான் படங்களுக்கு உதவியாளனாக இருந்த 1969 முதல் அறிந்தது என் பாக்கியம்.
'சோப்பு சீப்பு கண்ணாடி' படத்துக்கு அவர் பொருளுதவி செய்தபோது கதை விவாதத்திலும் நான் கலந்துகொள்வேன். பிறகு நான் 1972-இல் கதை வசனகர்த்தவான பின் மூதறிஞர் ராஜாஜியின் 'திக்கற்ற பார்வதி' படத்துக்கு வசனம் எழுதியதைப் பார்த்துக் கூப்பிட்டு, ' இந்த ஜென்மத்தில் புண்ணியம் தேடினாய்' என்று பாராட்டினார்.
தன் சகோதரியின் திருமணத்துக்கு வாழ்த்துக் கூறிச்சென்றவர் ராஜாஜி. அவர் சினிமாவுக்குச் சம்பந்தமில்லாதவர். மதுவிலக்கின் அவசியத்தை அவர் வாதாடிய வழக்கைக் கதையாக எழுதி இருக்கிறார். அவரது ஒரே படம், நீ எழுதிய படம், அதை விநியோகஸ்தர்கள் வாங்க வரவில்லை என்று தெரிந்து, இவரே தமிழ்நாடு முழுக்க வெளியிட்டார். தேசிய விருது கிடைத்தது.
இவரைத் தேடிச் சென்று என் மகிழ்ச்சியைத் தெரிவித்தேன். எம்.ஜி.ஆர். திரைப்படக் கல்லூரி மாணவர்களுக்கு இதைக் கட்டாயப் பாடமாக்கினார்.
அப்போது ஒவ்வொரு படைப்பாளனுக்கும் சமுதாய அக்கறையை விட பெரிய விருது எதுவுமில்லை . விடுதலைப் போராட்ட வீரரும், தினமணி ஆசிரியருமாக இருந்த ஏ.என். சிவராமன், தான் ஒரு பத்திரிகையாளனாக இருப்பதற்கு அவருக்கு அறிவித்த பத்மஸ்ரீ விருதை நிராகரித்ததைச் சொன்னார்.
எளிமையாக வாழ்ந்த இவர் 'ஆனந்த விகடன்' இதழின் நிர்வாகியாகி, நடிகர், பத்திரிகையாளர் சோவை ஆசிரியராக்கி 'துக்ளக்' என்ற அரசியல் தூண்டாமணி விளக்கைத் தூண்டி விட்டார்.
எஸ். எஸ். வாசன் 'கல்கி' என்ற அவதாரப் புருஷரை அடையாளம் காட்டியது போல, இவர் மணியன், சுஜாதா, பாலகுமாரன் போன்ற பண்பட்ட எழுத்தாளர்களை உருவாக்கினார். ஏன் என்னையும் நான் எழுதி அன்பு வேலாயுதம் என்ற பத்திரிகையாளர் மூலமாக அனுப்பிய எம்.ஜி.ஆர். மழைகோட் என்ற சிறுகதையை வெளியிட்டு எனக்கு ஒரு கடிதத்துடன் 1999-இல் 750 ரூபாய் அனுப்பி வைத்தார்.
இவர் 'பிரீடம் ஆஃப் தி பிரஸ்' என்ற விவாதத்தில் கார்ட்டூன் போட்ட விவகாரத்தில் மூன்று மாதம் சிறையில் அடைக்கப்பட்டார். இவர் பல படங்களைத் தயாரித்தார். ஒரு காலத்தில் ஜெமினி எடுத்த 'அபூர்வ சகோதரர்கள்' படத்தை எம்.ஜி.ஆர். நடிக்க 'நீரும் நெருப்பும்' என்று மீண்டும் எடுக்கப்பட்டது. இவர் 'எல்லோரும் நல்லவரே' என்ற படத்தை பல மொழிகளில் எடுத்த போது, நான் மேஜர் சுந்தர்ராஜனுடன் மைசூருக்குச் சென்றிருந்தேன்.
அந்தப் படத்துக்கு ஒரு வீட்டையே கட்டினார். படப்படிப்பு முடிந்ததும் அந்த வீட்டை இடிக்காமல் கிராமத்துக்கே இருக்கட்டும் என்றார். அந்தப் படம் தோல்வி அடைந்ததும், சினிமாவுக்கே உள்ள நெளிவு சுழிவுகள் எனக்குத் தெரியவில்லை. அது தேவையுமில்லை என்று படம் எடுப்பதையே நிறுத்தினார்.
நேர்மை, கண்ணியத்துக்குச் சொந்தக்காரரான இவர் எஸ். எஸ். வாசனுக்கும் பட்டம்மாளுக்கும் சென்னையில் 1935, டிசம்பர் 28-இல் பிறந்தார். இதய நோயால் பாதிக்கப்பட்டு 2014, டிசம்பர் 19-இல் காலமானார்.
(தொடரும்)
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
பொறுமை அவசியம்...

பிரேம் நசீர் - நான் சந்தித்த பிரபலங்கள் - 55
எம். எஸ். விஸ்வநாதன் - நான் சந்தித்த பிரபலங்கள் - 54

சாவித்திரி - நான் சந்தித்த பிரபலங்கள் - 53
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு
