ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

அப்போது புரியவில்லை!

சங்க இலக்கியப் பாடல்கள் ஒவ்வொன்றுமே ஒரு கதையைக் கூறுவதுபோல் இருக்கும். குறுந்தொகை 84-ஆம் பாடலில் ஒரு சிறுகதையைக் காணலாம்.

கோப்புப் படம்

Published On :1 நவம்பர் 2026, 1:06 pm IST

சங்க இலக்கியப் பாடல்கள் ஒவ்வொன்றுமே ஒரு கதையைக் கூறுவதுபோல் இருக்கும். குறுந்தொகை 84-ஆம் பாடலில் ஒரு சிறுகதையைக் காணலாம்.

அது ஒரு சிறிய வீடு. அதனுள்ளே தலைவி, செவிலித்தாய், நற்றாய், தோழி முதலானோர் வசித்து வருகிறார்கள். செவிலித்தாய் தலைவியின் அருகில் தூங்குவது வழக்கம்.

அப்போது, செவிலி தலைவியை அன்புடன் தழுவிக் கொள்ளலும் உண்டு. அப்படி ஒரு நாள் எல்லாரும் உறங்குகிறார்கள். மறுநாள் பொழுது விடுகிறது. வீட்டில் தலைவியைக் காணவில்லை.

தாய் அதிர்ச்சி அடைகிறாள்.

செவிலித்தாயிடம், "என் மகளைக் காணவில்லையே! அவள் எங்கே போயிருப்பாள்?, உனக்குத் தெரியுமா?' என்று கேட்கிறாள். செவிலிக்கும் அதிர்ச்சியாய் இருக்கிறது. "அப்படியா; அவளைக் காணவில்லையா?, எனக்குத் தெரியாதே' என்கிறாள்.

அப்போது, தோழி ஓடி வருகிறாள். தலைவியின் தாய், அவளிடமும் "என் மகளைக் காணவில்லையே; அவள் உன்னிடமாவது ஏதேனும் சொன்னாளா?, அவள் எங்கே இருக்கிறாள் என்று உனக்காவது தெரியுமா?' என்று கேட்கிறாள்.

தோழியோ, "எனக்கு இப்போதுதான் தெரியும்; நேற்றிரவு தலைவி தன் காதலனுடன் ஊரை விட்டுச் சென்றதாகவும், அவர்கள் இருவரும் செல்வதைச் சிலர் பார்த்ததாகவும் கேள்விப்பட்டேன். அதைச் சொல்லத்தான் ஓடோடி வந்தேன்' என்று கூறுகிறாள். தாய்க்கு ஒரே குழப்பம். செவிலியைப் பார்த்து, "நேற்றிரவு அவள் உன்னோடுதானே படுத்திருந்தாள்; அவள் போனது உனக்குத் தெரியாதா?' என்று கேட்கிறாள்.

செவிலி விளக்கமாகக் கூறுகிறாள்; "ஆமாம்; நேற்றிரவு அவள் என்னுடன்தான் படுத்திருந்தாள். நான் அவளைத் தழுவிக்கொண்டு படுத்திருந்தேன். அவளோ என்னை விட்டுத் தள்ளிப் படுத்தாள். நான் அவளை மீண்டும் தழுவினேன். அவள் "எனக்கு வியர்க்கிறது; தழுவாதே' என்று கூறினாள். அவள் சொன்னது ஏனென்று எனக்கு இப்போதுதான் புரிகிறது. வீட்டை விட்டுத் தலைவனுடன் போவதற்கு நான் அவளைத் தழுவியது இடையூறாக இருந்தது போலும்!'

பெயர்த்தனென் முயங்கயான்

வியர்த்தனென் என்றனள்

இனியறிந் தேனது துனியா குதலே

கழல்தொடி ஆஅய் மழைதவழ்

பொதியில்

வேங்கையும் காந்தளும் நாறி

ஆம்பல் மலரினும் தான்தண்

தணியளே.

(குறுந். - 84)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.