தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

கரடியின் ஆதிக்கம் எதிரொலி: சென்செக்ஸ் 1,635.67, நிஃப்டி 488.20 புள்ளிகளுடன் நிறைவு!

சென்செக்ஸ் குறியீடு 1,635.67 புள்ளிகள் சரிந்து 71,947.55 புள்ளிகளாவும், நிஃப்டி 488.20 புள்ளிகள் சரிந்து 22,331.40 புள்ளிகளாக நிலைபெற்றது.

News image

கோப்புப் படம்

Updated On :30 மார்ச் 2026, 6:13 pm IST

மும்பை: 2025-26 நிதியாண்டின் கடைசி வர்த்தக நாளென்ற இன்று, இந்திய பங்குச் சந்தையில் 'கரடிகள்' ஆதிக்கம் மீண்டும் தீவிரமடைந்தது.

மேற்கு ஆசியாவில் தொடர்ந்து நடைபெற்று வரும் போர், கச்சா எண்ணெய் விலை அதீத உயர்வு குறித்த நீடிக்கும் நிச்சயமற்ற நிலை, அனைத்துத் துறைகளிலும் பரவலான விற்பனை அழுத்தம் மற்றும் ரூபாயின் மதிப்பு தொடர் வீழ்ச்சி உள்ளிட்டவை, இந்திய பங்குச் சந்தைக் குறியீடுகளான சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி-யை தலா 2 சதவீதம் வரை சரிவுடன் நிறைவுபெற செய்தது.

ஆசிய சந்தைகளில் நிலவிய பலவீனமான போக்குகளும், வெளிநாட்டு நிதி தொடர்ந்து வெளியேற்றி வருவதும், உள்நாட்டுப் பங்குச் சந்தையின் சரிவுப் போக்கை மேலும் வலு பெற செய்ததது.

இன்றைய வர்த்தகத்தில், சென்செக்ஸ் 1,809.09 புள்ளிகள் சரிந்து 71,774.13 புள்ளிகளாக இருந்தது. வர்த்தக முடிவில், தொடர்ந்து 2வது நாளாகச் சரிவைக் கண்ட 30 பங்குகளைக் கொண்ட சென்செக்ஸ் குறியீடு 1,635.67 புள்ளிகள் சரிந்து 71,947.55 புள்ளிகளாவும், 50 பங்குகளைக் கொண்ட நிஃப்டி 488.20 புள்ளிகள் சரிந்து 22,331.40 புள்ளிகளாக நிலைபெற்றது. நிஃப்டி 50 குறியீடானது மார்ச் மாதத்தில் மட்டும் 11 சதவீதத்திற்கும் அதிகமாகச் சரிந்தது, மார்ச் 2020க்கு பிறகு பங்குச் சந்தை சந்தித்த மிகப்பெரிய மாத சரிவு இதுவேயாகும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

சென்செக்ஸில் பஜாஜ் ஃபைனான்ஸ், ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா, இன்டர்குளோப் ஏவியேஷன், பஜாஜ் ஃபின்சர்வ், ஆக்சிஸ் வங்கி மற்றும் கோடக் மஹிந்திரா வங்கி உள்ளிட்ட பங்குகள் அதிகபட்ச சரிவைச் சந்தித்தன. மறுபுறம் டெக் மஹிந்திரா மற்றும் பவர் கிரிட் ஆகிய நிறுவனங்களின் பங்குகள் உயர்ந்தன.

நிஃப்டி-யில் பஜாஜ் ஃபைனான்ஸ், ஆக்சிஸ் வங்கி, பஜாஜ் ஃபின்சர்வ், பாரத ஸ்டேட் வங்கி மற்றும் இன்டர்குளோப் ஏவியேஷன் ஆகிய பங்குகள் அதிகபட்ச சரிவைச் சந்தித்தன. மறுபுறம், ஹிண்டால்கோ இண்டஸ்ட்ரீஸ், கோல் இந்தியா, ஓ.என்.ஜி.சி மற்றும் பவர் கிரிட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா உள்ளிட்ட பங்குகள் உயர்ந்தன.

நிஃப்டி மிட்கேப் மற்றும் ஸ்மால்-கேப் குறியீடுகள் தலா சுமார் 2.6 சதவீதம் சரிந்தன.

மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட நிறுவனங்களின் சந்தை மூலதனம், வெள்ளிக்கிழமை நிலவரப்படி இருந்த ரூ. 422.15 லட்சம் கோடியிலிருந்து ரூ. 9.55 லட்சம் கோடி குறைந்து, ரூ. 412.59 லட்சம் கோடியாக உள்ளது.

வாகனத் துறை, நுகர்வோர் விரைவு நகர்வுப் பொருட்கள், மூலதனப் பொருட்கள், தொலைத்தொடர்பு, ரியல் எஸ்டேட், தனியார் வங்கிகள் மற்றும் பொதுத்துறை வங்கிகள் உள்ளிட்ட அனைத்துத் துறைகளும் 2 முதல் 4 சதவீதம் வரை சரிந்ன.

இந்திய ரூபாயின் மதிப்பு, வர்த்தகத் தொடக்கத்தில் 134 காசுகள் சரிந்து, வரலாற்றிலேயே முதன் முறையாக ரூ.95 என்ற அளவைத் கடந்து, பிறகு ரூ.94.78 என்ற புதிய குறைந்தபட்ச அளவை எட்டியது.

2025-26 நிதியாண்டில், சென்செக்ஸ் குறியீடு 5,467.37 புள்ளிகள் அதாவது 7 சதவீதம் சரிந்த நிலையில், நிஃப்டி 1,187.95 புள்ளிகள் அதாவது 5 சதவீதம் குறைந்தது.

ஆசியச் சந்தைகளைப் பொறுத்தவரை, தென் கொரியாவின் முக்கியக் குறியீடான கோஸ்பி மற்றும் ஜப்பானின் நிக்கி 225 குறியீடு ஆகியவை ஏறக்குறைய 3 சதவீதம் வரை சரிந்தன. ஹாங்காங்கின் ஹாங் செங் குறியீடும் சரிவுடன் நிறைவடைந்தது. அதே சமயம், ஷாங்காய் சந்தையின் எஸ்எஸ்இ காம்போசிட் குறியீடு மற்றும் ஐரோப்பியச் சந்தையும் சற்று உயர்வுடன் வர்த்தகமானது.

அமெரிக்கப் பங்குச் சந்தை வெள்ளிக்கிழமையன்று குறிப்பிடத்தக்க சரிவுடன் வர்த்தகத்தை நிறைவு செய்தது. நாஸ்டாக் காம்போசிட் குறியீடு 2.15 சதவீதமும், டவ் ஜோன்ஸ் இண்டஸ்ட்ரியல் ஆவரேஜ் 1.73 சதவீதமும், எஸ்&பி 500 குறியீடு 1.67 சதவீதமும் வரை சரிந்தன.

தரவுகளின் அடிப்படையில், வெள்ளிக்கிழமையன்று அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள் ரூ. 4,367.30 கோடி மதிப்பிலான பங்குகளை விற்பனை செய்த நிலையில் உள்நாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் ரூ. 3,566.15 கோடி மதிப்பிலான பங்குகளை வாங்கியுள்ளனர்.

மேற்கு ஆசியாவில் அதிகரித்து வரும் பதற்றங்கள், வலுவிழந்து வரும் ரூபாய் மதிப்பு மற்றும் உயர்ந்து வரும் கச்சா எண்ணெய் விலை ஆகியவை இந்திய பொருளாதார வளர்ச்சியில் ஏற்படுத்தும் தாக்கம் குறித்த அச்சத்தால், மார்ச் மாதத்தில் வெளிநாட்டு முதலீட்டாளர்கள், உள்நாட்டுப் பங்குச் சந்தையிலிருந்து ரூ. 1.14 லட்சம் கோடி அளவுக்கு முதலீட்டை திரும்பப் பெற்றனர்.

கிர்லோஸ்கர் பிரதர்ஸ், ஜூபிலன்ட் ஃபுட்வொர்க்ஸ், கோடக் மஹிந்திரா வங்கி, ஆதித்யா பிர்லா லைஃப்ஸ்டைல் ​​பிராண்ட்ஸ், நியூஜென் சாஃப்ட்வேர், சிஇ இன்ஃபோ சிஸ்டம்ஸ், சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா, இஐஹெச், தீபக் நைட்ரைட், அமரா ராஜா, மாஸ்டெக், ஸ்டெர்லிங் வில்சன், கொச்சின் ஷிப்யார்ட், ப்ளூ ஜெட், ஐசிஐசிஐ புருடென்ஷியல் மற்றும் யுகோ வங்கி உள்ளிட்ட 1,500 பங்குகள் இன்றைய மும்பை பங்குச் சந்தையில் 52 வார குறைந்தபட்ச விலையை எட்டியது.

உலகளாவிய பிரென்ட் கச்சா எண்ணெய், பேரல் ஒன்றுக்கு 2.18 சதவீதம் உயர்ந்து 115.1 அமெரிக்க டாலராக உள்ளது.

மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு, மார்ச் 31 (செவ்வாய்க்கிழமை) பங்குச் சந்தைக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.