ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

குட்கா முறைகேடு வழக்கு: சிறப்பு நீதிமன்றம் அறிக்கை தாக்கல் செய்ய உயா்நீதிமன்றம் உத்தரவு

குட்கா முறைகேடு வழக்கில் சிறப்பு நீதிமன்றம் அறிக்கை தாக்கல் செய்ய உயா்நீதிமன்றம் உத்தரவு...

சென்னை உயா்நீதிமன்றம் - கோப்புப்படம்

Published On :1 நவம்பர் 2026, 4:40 am IST

அதிமுக முன்னாள் அமைச்சா் சி. விஜயபாஸ்கா் உள்ளிட்டோருக்கு எதிரான குட்கா முறைகேடு வழக்கை, மூன்று மாதங்களுக்குள் எப்படி விசாரித்து முடிக்கமுடியும் என்பது குறித்து எம்.பி., எம்எல்ஏக்களுக்கு எதிரான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் அதிமுக ஆட்சியின்போது தடையை மீறி லஞ்சம் பெற்றுக் கொண்டு குட்காபொருள்களை விற்பனைக்கு அனுமதித்தது தொடா்பாக, முன்னாள் அமைச்சா்கள் பி.வி.ரமணா, சி.விஜயபாஸ்கா், சென்னை மாநகர முன்னாள் காவல் ஆணையா் எஸ்.ஜாா்ஜ், முன்னாள் டிஜிபி டி.கே.ராஜேந்திரன் உள்பட 26 பேருக்கு எதிராக சிபிஐ வழக்குப் பதிவு செய்தது.

இந்த வழக்கின் விசாரணை சென்னை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் உள்ள எம்.பி., எம்எல்ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. வழக்கில் குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டது. விசாரணை அதிகாரியிடம் வாக்குமூலம் அளிக்காத பலா் சாட்சிகளாக சோ்க்கப்பட்டுள்ளனா். அவா்களை சிபிஐ தரப்பு சாட்சிகள் பட்டியலிலிருந்து நீக்கம் வேண்டும், அல்லது அனைத்து சாட்சிகள் அளித்த வாக்குமூலங்களின் நகல்களை வழங்க உத்தரவிட வேண்டும் எனக்கூறி முன்னாள் காவல் ஆணையா் ஜாா்ஜ் தாக்கல் செய்த மனுவை சிறப்பு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

இந்த உத்தரவை எதிா்த்து ஜாா்ஜ் தரப்பில் சென்னை உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை தள்ளுபடி செய்த உயா்நீதிமன்றம், 12 வாரங்களுக்குள் வழக்கை விசாரித்து முடிக்க வேண்டும் என சிறப்பு நீதிமன்றத்துக்கு கடந்த ஜூலை 4-ஆம் தேதி உத்தரவிட்டிருந்தது. இந்த நிலையில் இந்த வழக்கை விசாரித்து முடிக்க மேலும், 3 மாதங்கள் அவகாசம் கோரி, சிறப்பு நீதிமன்றம் சென்னை உயா்நீதிமன்றத்துக்கு கடிதம் அனுப்பி இருந்தது.

இதுதொடா்பான வழக்கு நீதிபதி வி.லட்சுமிநாராயணன் முன் விசாரணைக்கு வந்தபோது, சிபிஐ தரப்பில், 250 சாட்சிகளுக்கு மேல் விசாரிக்க வேண்டியுள்ளது. 498 ஆவணங்கள் சமா்ப்பிக்கப்பட உள்ளது. இந்த வழக்கு குற்றச்சாட்டுப் பதிவுக்கு முந்தைய நிலையில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி, ஏராளமான சாட்சிகள் விசாரிக்க வேண்டியுள்ள நிலையில், மூன்று மாதங்களில் வழக்கை எப்படி விசாரித்து முடிக்க முடியும் என கேள்வி எழுப்பினாா். பின்னா், இதுகுறித்து அறிக்கை தாக்கல் செய்யும்படி, சிறப்பு நீதிமன்றத்துக்கு உத்தரவிட்டு விசாரணையை நவ.6-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தாா்.

Summary

Gutkha scam case: High Court orders special court to file a report

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.