
ரயிலில் ரீல்ஸ் பார்க்கிறார்களா? எங்கே புகார் செய்ய வேண்டும்?
ரயில்களில் பயணிக்கும்போதோ அல்லது ரயில் நிலையத்திலேயோ இடையூறு ஏற்பட்டால் புகார் அளிக்கும் வசதி பற்றி...

ரயில்களில் புகார் அளிக்கும் வசதி... - Gemini AI
ரயில்களில் பயணிக்கும்போதோ அல்லது ரயில் நிலையத்திலேயோ பயணிகளுக்கு இடையூறு ஏற்பட்டால் எங்கே புகார் அளிக்க வேண்டும்?
ரயில்களில் பயணிக்கும்போது பயணிகள் எவ்வித இடையூறும் இன்றி பயணிக்க சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு ஏற்கெனவே அமலில் இருக்கின்றன.
குறிப்பாக இரவு 10 மணிக்கு மேல் அதிக சத்தத்துடன் செல்போனில் பேசுவதோ, பாட்டு கேட்பதோ, ரீல்ஸ் பார்ப்பதோ கூடாது. போனில் பேசுவதாக இருந்தால்கூட மற்ற பயணிகளுக்கு தொந்தரவு இன்றி மெதுவாக பேச வேண்டும். ஆடியோ கேட்கும்போது, விடியோக்களை பார்க்கும்போதும் இயர்போன்களைப் பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதேபோல இரவு 10 மணிக்கு இரவு விளக்கு (லைட்) தவிர மற்ற அனைத்து லைட்களையும் அணைத்துவிட வேண்டும். ஸ்லீப்பர் இருக்கைகள் என்றால் 10 மணிக்கு மேல் மற்றவர்கள் தூங்குவதற்கு இருக்கைகளை கொடுத்துவிட வேண்டும். எந்தவிதத்திலும் மற்ற பயணிகளுக்கு இடையூறு ஏற்படுத்தாதவாறு பயணிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சப்தம் போட்டால் அபராதம்
இந்த விதிமுறைகளை மீறினால் ரயில்வே சட்டம் 1989 -ன்படி முதற்கட்டமாக ரூ. 1,000 அபராதம் விதிக்கப்படுகிறது.
ரயில்வே அதிகாரியின் எச்சரிக்கையை மீறி தொடர்ந்து விதிமுறைகளை மீறிச் செயல்பட்டால் ரூ. 5,000 வரை அபராதம் அல்லது 6 மாதங்கள் வரை சிறை அல்லது இரண்டும் சேர்த்து விதிக்கப்படலாம். மேலும் அவர்கள் ரயிலில் இருந்தும் இறக்கிவிடப்படுவார்கள்.
புகார் அளிப்பது எப்படி?
ரயிலில் பயணம் செய்யும்போது பாதுகாப்பு, மருத்துவம் தொடர்பான மற்றும் பொதுவான புகார்களுக்கு 139 என்ற தொலைபேசி எண்ணைத் தொடர்புகொள்ளலாம்.
ரயில்வே பாதுகாப்புப் படை தொடர்பான புகார்களுக்கு 182 என்ற எண்ணுக்கு தொடர்புகொண்டு பேசலாம்.
அனைத்திந்திய ரயில்வே பாதுகாப்பு மற்றும் அவசர உதவி எண் 1512 என்ற எண்ணையும் தொடர்புகொள்ளலாம்.
இதுதவிர பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான புகார்களுக்கு 1098 என்ற உதவி எண்ணும் பயன்பாட்டில் உள்ளது.

ரயில் மதாத்
இதுதவிர புகார்களுக்கு என்றே 'ரயில் மதாத்' என்ற இணையதளமும் செயலியும் உள்ளது. டிஜிட்டல் முறையில் 24/7 மணி நேரமும் புகார்கள் அளிக்க இந்த வசதி உள்ளது. இதன் மூலம் செல்போனில் இருந்த இடத்தில் இருந்தபடியே ஆன்லைன் மூலமாகவே புகார் அளிக்க முடியும்.
இந்திய ரயில்வேயின் அதிகாரபூர்வ 'ரயில் ஒன்' செயலியிலும் இந்த வசதி உள்ளது.
இதன்படி பயணிகள், ரயில் நிலையத்திலோ அல்லது பயணத்தின்போதோ உங்களுடைய அனைத்துவிதமான புகார்களையும் பதிவு செய்யலாம்.
ரயிலில் கழிவறை சுத்தமில்லை என்றாலோ, இரவு 10 மணிக்கு மேல் சக பயணி செல்போன் பார்த்துக்கொண்டு தொந்தரவு செய்தாலோ, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டாலோ, அவசர மருத்துவ வசதி, உணவின் தரம் குறைவு, டிக்கெட் பரிசோதகர் முறையாக நடந்துகொள்ளாதது என சகலவிதமான குறைகளுக்கும் புகார் அளிக்கலாம்.
புகார் வழிமுறை...
ரயில் ஒன் செயலியில் முகப்பு பக்கத்தில் 'Rail Madad' என்ற ஆப்ஷன் உள்ளது. அதை கிளிக் செய்து உள்ளே சென்றால், மேலே உங்களுடைய இருப்பிடத்தைத் (Location) தேர்வு செய்துகொள்ளலாம்.
உங்கள் புகாரை ஆடியோ, விடியோ, புகைப்படம் என எந்த வடிவில் பதிவு செய்கிறீர்கள் என்பதைத் தேர்வு செய்து அதனை உள்ளிட வேண்டும்.
அடுத்து ரயில் பயணத்திலா, ரயில் நிலையத்திலா என்பதைத் தேர்வு செய்து உங்களுடைய பிரச்னை குறித்த விவரங்களையும் பதிவிட வேண்டும்.
விரிவான தகவல்களையும் குறுஞ்செய்தியாக பதிவிடும் வசதியும் அதில் இருக்கிறது. அனைத்து தகவல்களையும் உள்ளிட்டு 'submit' செய்ய வேண்டும்.
இப்போது உங்களுக்கு ஒரு புகாரளித்த எண் ஒன்று கிடைக்கும். அதை வைத்து புகாரின் நடவடிக்கை குறித்து தெரிந்துகொள்ளவும் முடியும்.
அடுத்த சில நிமிடங்களில் உங்களுடைய புகாருக்கு நடவடிக்கை எடுக்கப்படும். சம்பந்தப்பட்ட ரயில்வே அதிகாரிகள் நேரில் வந்து ஆய்வு செய்வார்கள். 10 நிமிடங்களுக்குள் புகார்களுக்கு நடவடிக்கையோ அல்லது பதிலோ அளிக்கப்படுகிறது.
சமீபத்தில்கூட பிகாரில் பயணி ஒருவர் தன்னுடைய குழந்தைக்கு டயப்பர் தீர்ந்துவிட்டது என்று கேட்க, 10 நிமிடத்தில் பதில் வந்ததுடன், அடுத்த ரயில் நிலையத்தில் ரயில் உணவு நிலைய மேலாளர் மூலமாக டயப்பர் வழங்கப்பட்டது. சக பயணிகள் தொந்தரவு செய்வதாக வந்த புகார்களுக்கும் ரயில்வே அதிகாரிகள் / ரயில்வே போலீஸ் வந்து ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கிறார்கள். செயலி இல்லை என்றால் 'ரயில் மதாத்' இணையதளத்திலும் புகார் அளிக்கலாம்.
எனவே, ரயில்களில் செல்லும்போது இரவு 10 மணிக்கு மேல் செல்போனில் யாராவது விடியோ / ரீல்ஸ் பார்த்து / பாட்டுக் கேட்டு தொந்தரவு செய்கிறார்களா? புகார் அளிக்கத் தயங்க வேண்டாம்! உடனடி நடவடிக்கை உண்டு, தண்டம் கட்டுவார்கள் அல்லது இறக்கிவிடப்படுவார்கள். இனி சகித்துக் கொள்ள வேண்டியதில்லை.
Summary
Complaint numbers while traveling on trains or at railway stations
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







