சட்டப்பேரவைத் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் போட்டியிடவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், திமுக கூட்டணிக்கு நிபந்தனையற்ற ஆதரவு அளிப்பதாகவும் தெரிவித்துள்ளது.
திமுக ஒதுக்குவதாகக் கூறிய தொகுதி எண்ணிக்கையும், உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட வேண்டும் என்ற பரிந்துரையும், மக்கள் நீதி மய்யத்தின் உறுப்பினர்களுக்கும் தனக்கும் ஏற்புடையதாக இல்லை என கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக கமல்ஹாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
கடந்த நாடாளுமன்றத் தேர்தலில், தேச நன்மைக்காக திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான கூட்டணியில் இணைந்தோம். கூட்டணியின் வெற்றிக்காக கடுமையாக உழைத்தோம். அதன் விளைவாக, மக்கள் நீதி மய்யத்தின் குரல் இந்திய நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையில் ஒலித்தது. அன்று முதல் இன்று வரை நம்முடைய தனித்துவத்தை விட்டுக்கொடுக்காமல், கூட்டணி தர்மத்தை பேணி வருகிறோம்.
2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான தொகுதி ஒதுக்கீடு பேச்சுவார்த்தை இரண்டு கட்டமாக நடைபெற்றது. அந்தப் பேச்சுவார்த்தையின் போது முதல்வர், துணை முதல்வர், திமுக பேச்சுவார்த்தை குழு உறுப்பினர்களும் அன்போடும் மரியாதையோடும் நட்புணர்வோடும் நடந்துகொண்டார்கள்.
எப்படியாவது தமிழ்நாட்டை கைப்பற்றிவிட வேண்டுமென மதவாத சக்திகள் சகல வழிகளிலும் சூழ்ச்சி செய்துகொண்டிருக்கும் சூழலில் கூட்டணியின் ஒட்டுமொத்த வெற்றி வாய்ப்பே முதன்மையானது. நியாயமானதும் கூட.
ஆனால், பேட்டரி டார்ச் சின்னத்துடனான மக்கள் நீதி மய்யம் தொண்டர்களின் பிணைப்பு உணர்வுப்பூர்வமானது. ஏனெனில், பேட்டரி டார்ச் என்பது எங்களுக்கு வெறும் சின்னமல்ல. அது எங்களின் அடையாளம்.
கடந்த ஒன்பது ஆண்டுகளாக எந்த ஆதாயமும் இன்றி என்னோடு பயணிக்கும் என் தொண்டர்களின் உணர்வுகளை என்னால் புறக்கணிக்க முடியாது; புறக்கணிக்கவும் மாட்டேன்.
தமிழ்நாட்டின் உரிமைகள் ஒவ்வொன்றாகப் பறிக்கப்பட்டு, தமிழ் மக்களின் நலன்கள் புறக்கணிக்கப்பட்டு வரும் ஒரு நெருக்கடியான சூழலில், எங்கே எங்கள் பங்கு என்று கேட்பது நல்ல சகோதரனின் அடையாளமாக இருக்கமுடியாது. இது தியாகம் அல்ல; கடமை. சுய நலம் அல்ல; பொறுமை.
தேர்தல் அரசியலில் யாருமே இப்படி செய்ததில்லையே என்று கேட்பீர்களானால், ஒரு புதிய அரசியல் நாகரீகத்தின் விதை நான் போட்டது என்று பணிவோடு சொல்வேன். முதல்வர் அவர்கள் அன்போடு அளிப்பதை பெருமையோடு மறுப்பதும் அன்பின் வடிவமே.
என்னையும் என் அரசியலையும் புரிந்துகொண்டு எந்த சுயநலமின்றி, ஒன்பது ஆண்டுகளாக என்னோடு தொடர்ந்து பயணிக்கும் மக்கள் நீதி மய்யத்தின் தொண்டர்களுக்கும், நிர்வாகிகளுக்கும் நெஞ்சின் ஆழத்திலிருந்து நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். நீங்கள் ஒவ்வொருவரும் சுயநலமற்ற அரசியலுக்கு ஆகச்சிறந்த முன்னுதாரணங்கள். இந்த முடிவு உங்கள் உணர்வுக்கும், உங்கள் நம்பிக்கைக்கும் நான் செலுத்தும் மரியாதை.
அரசியல் களத்தில் தேர்தல் ஒரு பகுதிதான். அதுவே இறுதி என்று ஆகாது. அரசியலில் முற்றுப்புள்ளி என்பதும் கிடையாது. மண்ணுக்கான, மக்களுக்கான, மொழிக்கான நமது போராட்டம் எப்போதும்போல் தீரத்துடன் தொடரும்.
மிக விரைவில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதவியேற்பு விழாவில் அவரை மகிழ்ச்சியோடு நாம் சந்தித்து வாழ்த்துவோம் எனும் நம்பிக்கை எனக்கு முழுமையாக இருக்கிறது என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Summary
Makkal Needhi Maiam not contesting the election
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தமிழகம் வளா்ச்சியடைய மீண்டும் திமுக ஆட்சி அமைய வேண்டும்: கமல்ஹாசன்

"தலைவன் இருக்கின்றான்" - கமல் தேர்தல் பிரசார பாடல் வெளியீடு!
“விருப்ப மனுக்கான ரூ. 50,000-ஐ திரும்ப பெற்றுக்கொள்க”.. - மக்கள் நீதி மய்யம் அறிவிப்பு!

விருப்ப மனுவுக்கு ரூ. 50,000! கமலிடம் பணத்தை திருப்பிக் கேட்கும் மக்கள் நீதி மய்ய நிர்வாகிகள்!!
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு
