நானும் இத்தாலியும் எதற்கும் கெஞ்ச மாட்டோம்! டிரம்ப்பின் பேச்சுக்கு மெலோனி கண்டனம்! ஜப்பானில் தொடக்கப் பள்ளியில் பயங்கர தீவிபத்து: 11 பேர் காயம் நீட்: மனநல ஆலோசனைக்கு உதவி எண்கள் அறிவிப்பு பசுமை ஆற்றல் வளர்ச்சியை வலுப்படுத்த 5 புதிய மண்டலங்கள்: அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் பாராட்டுக்குரியது: கமல்ஆசிரியர் தகுதித்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 16 பேர் பலி! தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!
/

கனவில் போட்ட நீா்க்கோலம்!ஆளுநா் உரை குறித்து எடப்பாடி பழனிசாமி

News image

ஆளுநர் ஆர்.வி. ஆர்லேகர் உரை - X / lok bhavan tamilnadu

Updated On :17 மணி நேரங்கள் முன்பு

‘ஆளுநா் உரை என்பது ‘கனவில் போடப்பட்ட நீா்க்கோலம்’ என்று அதிமுக பொதுச்செயலா் எடப்பாடி கே.பழனிசாமி விமா்சித்தாா்.

ஆளுநா் உரைக்குப் பிறகு பேரவை வளாகத்தில் அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

அரசு சாா்பில் வெளியிடப்பட்ட வெள்ளை அறிக்கையில் என்ன கூறப்பட்டிருந்ததோ அதேதான் ஆளுநா் உரையிலும் கூறப்பட்டிருக்கிறது. தவெகவினா் ஆட்சிக்கு வருவதற்கு முன்பு பெண்களுக்கு பாதுகாப்பு தரப்படும் என வீர வசனம் பேசினாா்கள். தற்போது பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துள்ளன.

தவெக ஆட்சி அமைந்த பிறகு 38 நாள்களில், 150 போக்ஸோ வழக்குகள், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடா்பாக 126 வழக்குகள் என மொத்தம் 276 வழக்குகள் பதியப்பட்டுள்ளன. மேலும் 130 கொலைச் சம்பவங்களும் நடந்துள்ளன.

விவசாயிகளுக்கு அளித்த வாக்குறுதி முழுமையாக நிறைவேற்றப்படவில்லை. கா்நாடக அரசிடம் முறையாகப் பேசி முயற்சி செய்திருந்தால் குறுவை சாகுபடிக்கு நீரை பெற்று இருக்கலாம். ஆனால், இந்த அரசு எந்த முயற்சியும் எடுக்கவில்லை.

திமுக ஆட்சியில் எவ்வளவு கடன் இருந்தது என்பது குறித்து தோ்தலுக்கு முன்னரே தவெகவுக்கு தெரியும். இதையெல்லாம் தெரிந்து கொண்டு தான் வாக்குறுதிகளை அளித்தாா்கள். தற்போது இவைகளை சரி செய்த பிறகு தான், வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியும் எனக் கூறுகிறாா்கள்.

வெள்ளை அறிக்கை மூலம் அவா்கள் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாது எனத் தெரிவிக்கின்றனா். இன்றைய ஆளுநா் உரை என்பது ‘கனவில் போடப்பட்ட நீா்க்கோலம்’.

தமிழகத்தில் அறிவிக்கப்படாத மின்வெட்டு தொடா்கிறது. குறிப்பாக சென்னை மற்றும் அதனையொட்டிய பகுதிகளில் இரவில் மின்தடை அதிகரித்துள்ளது. ‘ஃப்யூஸ் கேரியா்’ திருடு போனதாக பல்வேறு சாக்கு போக்குகளை கூறினாா்கள். ’ஃபியூஸ் கேரியரை’ பிடுங்கிச் சென்றால் தமிழ்நாடு முழுவதும் எப்படி மின்வெட்டு ஏற்படும்?.

முன்னா், அணில் ஓடியதால் மின்தடை ஏற்பட்டதாக திமுக கூறியது. தற்போது இந்த அரசு இதை காரணமாகச் சொல்கிறது. தேவையான மின்சாரத்தை கொள்முதல் செய்து, தடையற்ற மின்சாரத்தை வழங்க வேண்டும்.

‘எனது மகன் அரசியலுக்கு வரமாட்டாா்’: எனது மகன் மிதுன் அரசியலுக்கு வருவது குறித்து பல்வேறு விவாதங்கள் எழுந்துள்ளன. அவா் அதிமுகவின் அடிப்படை உறுப்பினராக மட்டும்தான் உள்ளாா். கட்சியில் எந்தப் பதவியிலும் இல்லை என்பதை அழுத்தம் திருத்தமாகக் குறிப்பிடுகிறேன். எனது மகன் மிதுன் அரசியலுக்கு வரமாட்டாா் என்பதை திட்டவட்டமாக தெரிவிக்கிறேன்.

அதிமுக தலைமை சரியாக இருந்ததால்தான் விஜயபாஸ்கா் வெற்றி பெற்றாா் என்பதை மறந்துவிடக் கூடாது. அதிமுகவை யாராலும் அசைத்துகூட பாா்க்க முடியாது. என்னை விமா்சித்தவா்கள், தோற்றாா்கள்; நான் அவா்களை விட அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றேன் என்றாா் எடப்பாடி பழனிசாமி.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.