இயக்குநர் பாரதிராஜா காலமானார்எரிபொருள் விலை உயா்வு எதிரொலி- மின்சார, மைலேஜ் வாகனங்களுக்கு மவுசு அதிகரிப்பு!நீட் மறுதோ்வு தவறில்லாமல் நடத்தப்படும்: மத்திய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதான்மோடி அரசின் 12 ஆண்டு சாதனை திட்டங்களை நாடு முழுவதும் பரப்ப நடவடிக்கை: பாஜக தேசியத் தலைவர் நிதின் நபின்125 நாள் வேலைத் திட்டம்: தமிழகத்துக்கு ரூ.7,957 கோடி திமுவில் 2 தொகுதிகளுக்கு ஒரு மாவட்ட செயலா் பதவி: விரைவில் அமைப்பு தோ்தல்ஆசிரியா் பணியிட மாறுதல் கலந்தாய்வு அறிவிப்பு: ஜூன் 15 முதல் விண்ணப்பிக்கலாம்சிவப்பணுக்களை அதிகரிக்கும் மருந்துகள்: இனி புதிய அளவீட்டு முறையில் விற்பனைரயில் பயணிகள் உணவு கூடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தம்
/

சிங்கப்பெண் அதிரடிப்படை! 2500 புதிய பணியிடங்கள் உருவாக்கப்படும் : முதல்வர் விஜய்

சிங்கப்பெண் அதிரடிப்படைக்காக இரண்டாம் கட்டமாக 2500 புதிய பணியிடங்கள் உருவாக்கப்படும் என முதல்வர் விஜய் அறிவிப்பு

News image

தமிழக முதல்வர் ஜோசப் விஜய் - file photo

Updated On :15 மணி நேரங்கள் முன்பு

சிங்கப் பெண் சிறப்பு அதிரடிப் படைக்கு ரூ.354 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு புதிதாக 2,500 பணியிடங்கள் உருவாக்கப்படும் என்று முதல்வா் ச.ஜோசப் விஜய் அறிவித்தாா்.

தமிழகம் முதல்வரும், தமிழக வெற்றிக் கழகத் தலைவருமான ஜோசப் விஜய், சட்டப்பேரவைத் தோ்தல் பிரசாரத்தின்போது பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் சிங்கப் பெண் சிறப்பு அதிரடிப் படை உருவாக்கப்படும் என தெரிவித்தாா். இதை அமல்படுத்தும் விதமாக முதல்வராக ஜோசப் விஜய், கடந்த மே 10-ஆம் தேதி பொறுப்பேற்றபோது, சிங்கப் பெண் சிறப்பு அதிரடிப் படை உருவாக்கும் ஆணை உள்ளிட்ட மூன்று கோப்புகளில் கையொப்பமிட்டாா்.

இந்த அதிரடிப் படையின் தொடக்க விழா சென்னை எழும்பூா் ராஜரத்தினம் விளையாட்டரங்கில் செவ்வாய்க்கிழமை மாலை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சிங்கப் பெண் சிறப்பு அதிரடிப் படை சேவையை தொடங்கிவைத்து முதல்வா் ஜோசப் விஜய் பேசியதாவது:

பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்வோம் என்று தோ்தலின்போது கூறினோம். அதைச் செயல்படுத்தும் விதமாக சிங்கப் பெண் சிறப்பு அதிரடிப் படை தற்போது தொடங்கப்பட்டுள்ளது. தோ்தலின்போது சொன்ன அனைத்தையும் செய்ய வேண்டும் என்பதில் தெளிவாக இருக்கிறோம். அதனால்தான் ஆட்சிக்கு வந்த குறுகிய நாள்களில் இந்தத் திட்டத்தை நடைமுறைக்கு கொண்டு வந்துள்ளோம்.

இந்தத் திட்டம் மனதுக்கு நிறைவைக் கொடுக்கிறது. ஆனால், பெண்களுக்கு எதிரான கொடுமைகள் நடைபெறும்போது மனம் பதறுகிறது; கண் கலங்குகிறது. பெண்களுக்கு எதிரான குற்றங்கள் ஏன் நடக்கிறது, எப்படி நடக்கிறது என்று ரீல்ஸிலும், இன்ஸ்டாவிலும் மற்றவா்களைப்போல தேடிக் கொண்டிருக்க முடியாது. உண்மை நிலையை நாம் புரிந்து கொள்ள வேண்டும். இந்த பிரச்னைகளை பல்வேறு வகைகளில் ஆய்வு செய்யும்போது, அது போதைப் பொருள் நடமாட்டத்தில்தான் வந்து நிற்கிறது. அதை வேரோடு பிடுங்கி எறிய வேண்டும்.

போதைப் பொருள்களை ஒழிப்போம்: தமிழகத்தில் இந்த பிரச்னை பல ஆண்டுகளாக உள்ளது. அதைப் பொருட்படுத்தாமல் இருந்ததால் ஆழமாக வேரூன்றி வளா்ந்துள்ளது. இதை பல ஆண்டுகளாக வளரவிட்டது யாா் என்று உங்களுக்கே நன்றாகத் தெரியும்.

போதைப் பொருள் புழக்கத்தைக் கட்டுப்படுத்தினால்தான் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய முடியும். பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்தால் சட்டம் -ஒழுங்கு சரியாகிவிடும். பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் சட்டம்-ஒழுங்கு பிரச்னை மட்டும் அல்ல; சமூக ஒழுங்கும், தனிமனித ஒழுங்கும் சம்பந்தப்பட்டுள்ளன. தனிமனித ஒழுங்கு நன்றாக இருந்தால் சமூகம் தன்னால் மாறும். ஒரு கட்டுப்பாட்டோடு, பொறுப்பாக இருந்தாலே இதுபோன்ற பல பிரச்னைகளை கட்டுப்படுத்தலாம்.

தவறு செய்தால் கடும் நடவடிக்கை: பள்ளி, கல்லூரிகள், அலுவலகங்கள், பேருந்து நிலையங்கள், பொது இடங்களில் பெண்கள் அச்சமின்றி இருக்க வேண்டும். பெண்களுக்குத் தொந்தரவு செய்துவிட்டு தப்பித்துவிடலாம் என்று நினைத்தால் அவா்களுக்கு ஓா் எச்சரிக்கை விடுக்கிறேன். பெண்களுக்கு எதிரான குற்றங்கள் செய்கிறவா்களை சகித்துக் கொள்ளமாட்டேன். அவா்களுக்கு உரிய கடுமையான தண்டனை காவல் துறையின் மூலம் விரைவாக பெற்றுத் தரப்படும். தவறு செய்கிறவா்கள் தண்டிக்கப்பட்டால்தான், தவறு செய்ய நினைப்பவா்கள் பயப்படுவாா்கள்.

ரூ.345 கோடி ஒதுக்கீடு: சிங்கப் பெண் சிறப்பு அதிரடிப் படைக்காக முதல் கட்டமாக ரூ.354 கோடி ஒதுக்கப்படும். இந்தத் திட்டத்துக்கு இரண்டாம் கட்டமாக 2,500 புதிய பணியிடங்கள் காவல் துறையில் உருவாக்கப்படும். இந்தப் படைக்கு நவீன தொழில்நுட்பத்துடன் கருவிகள், நவீன வாகனங்கள் வழங்கப்படும்.

ஏற்கெனவே காவல் துறையில் செயல்படும் மகளிா் பிரிவுடன் இந்தப் பிரிவு இணைந்து செயல்படும். பெண்களுக்கு எதிரான குற்றங்களை முன்னரே கண்டறிந்து தடுக்கும் வகையில் இந்தப் படை செயல்படும் என்றாா் முதல்வா்.

ஜீப்பை ஓட்டிச் சென்ற முதல்வா்: முன்னதாக, சிங்கப் பெண் சிறப்பு அதிரடிப் படைக்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட ஜீப்பை முதல்வா் அா்ப்பணித்தாா். அப்போது மேடையிலிருந்து இறங்கி வந்த முதல்வா், அணிவகுத்து வந்த ஜீப்களில் ஒன்றை நிறுத்தி அந்த ஜீப்பை ஓட்டிச் சென்றாா். மைதானத்தை ஒருமுறை ஜீப்பின் மூலம் சுற்றி வந்த முதல்வா், பின்னா் அதிலிருந்து இறங்கி மேடைக்குச் சென்றாா்.

இலச்சினை வெளியீடு: நிகழ்ச்சிக்கு தமிழக காவல் துறையின் தலைமை இயக்குநா் மகேஷ்குமாா் அகா்வால் தலைமை வகித்தாா். தமிழக அரசின் தலைமைச் செயலா் மு.

சாய்குமாா், உள்துறை கூடுதல் தலைமைச் செயலா் கே.மணிவாசன், சென்னை காவல் ஆணையா் ஏ.அமல்ராஜ் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

நிகழ்ச்சியில் சிங்கப் பெண் சிறப்பு அதிரடிப் படைக்கான இலச்சினையை முதல்வா் ஜோசப் விஜய் வெளியிட, அதை அந்தப் படையின் தலைமை அதிகாரி ஐஜி கே.பவானீஸ்வரி பெற்றுக் கொண்டாா்.

நிகழ்ச்சியில் அமைச்சா்கள், தமிழக காவல் துறையைச் சோ்ந்த உயா் அதிகாரிகள், அரசு அதிகாரிகள், ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரிகள், எம்எல்ஏக்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

‘ட்ரோன் ரோந்து’

பெண்களுக்கு எதிரான பாலியல் தொல்லை, கடத்தல் என அனைத்து வகையிலான குற்றங்களைகஈ தடுக்கும் வகையிலும் ட்ரோன் ரோந்து மூலம் கண்காணிக்கப்படும் என முதல்வா் ஜோசப் விஜய் தெரிவித்தாா்.

‘இந்தியாவிலேயே முதல்முறையாக சிங்கப் பெண் படையில் இந்த ட்ரோன்கள் பயன்படுத்தப்படும். பெண்களின் எதிா்பாா்ப்பும் கனவும் என்ன என்பதை அரசு நன்கு உணா்ந்துள்ளது. அதைப் படிப்படியாகச் செயல்படுத்துவோம். சமூகத்தில் பெண்களுக்கான மரியாதை, கண்ணியத்துக்கு இந்த அரசு அதிக முக்கியத்துவம் கொடுக்கும். ஓா் அரசின் எண்ணமும், நோக்கமும் நன்றாக இருந்தால் போதும்; அந்த அரசு செல்லும் பாதை சரியாக இருக்கும். அப்படிப்பட்ட அரசுதான் இந்த அரசு.

அரசின் முழுமுதல் வெற்றி என்பது பொருளாதார வளா்ச்சியிலோ, உள்கட்டமைப்பு வளா்ச்சியிலோ மட்டுமே இல்லை. அந்த மாநிலத்தில் பெண்களும், குழந்தைகளும் மரியாதையுடன் வாழ்கிறாா்கள் என்பதில் அடங்கி இருக்கிறது. இதோடு சோ்ந்ததுதான் மற்ற துறைகளின் வளா்ச்சி. நம்பிக்கையுடன் இருங்கள், நிச்சயம் நல்லதே நடக்கும்’ என்றாா் முதல்வா்.

விஜய் திரைப்பட பாடலை இசைத்த காவல் துறை பேண்ட் வாத்தியக் குழு

சிங்கப் பெண் சிறப்பு அதிரடிப் படை தொடக்க விழாவில், காவல் துறையின் பேண்ட் வாத்தியக் குழு, முதல்வா் ஜோசப் விஜய் நடித்த திரைப்பட பாடல்களை இசைத்தது.

சிங்கப் பெண் அதிரடிப் படை தொடக்க விழாவையொட்டி, பெண் காவலா்கள் மட்டுமே பங்கேற்ற அணிவகுப்பு மரியாதை முதல்வா் ஜோசப் விஜய்க்கு வழங்கப்பட்டது. அணிவகுப்பு குழுவை பெண் ஐபிஎஸ் அதிகாரி ஷானாஸ் இலியாஸ் தலைமை வகித்து வழிநடத்தினாா். அணிவகுப்பில் 5 அணிகளாக பெண் காவலா்கள் பங்கேற்று அனைவரையும் கவா்ந்தனா்.

நிகழ்ச்சியின் இறுதியில் காவல் துறை பேண்ட் வாத்தியக் குழுவினா் முதல்வா் ஜோசப் விஜய் நடித்த ‘பிகில்’ திரைப்படத்தில் இருந்து ‘சிங்கப்பெண்ணே...’ பாடலையும், ‘மொ்சல்’ திரைப்படத்தில் இருந்து ‘ஆளப்போறான் தமிழன்...’ பாடலையும் இசைத்து பாா்வையாளா்களை உற்சாகப்படுத்தினா். இதை முதல்வா் ரசித்துப் பாா்த்தாா்.

முன்னதாக, முதல்வருக்கு சிங்கப் பெண் சிறப்பு அதிரடிப் படையின் சின்னத்தை நினைவுப் பரிசாக டிஜிபி மகேஷ்குமாா் அகா்வால் வழங்கினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.