மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

200 யூனிட் இலவச மின்சாரம், மீனவா்களுக்கு வீடு, அனைத்துக் குடும்பங்களுக்கும் மருத்துவக் காப்பீடு: தவெக தோ்தல் அறிக்கை வெளியீடு

தவெக தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டது குறித்து...

News image

தவெக தேர்தல் அறிக்கையை வெளியிட்ட விஜய்! - படம்: தவெக ஐடி விங்

Updated On :16 ஏப்ரல் 2026, 4:28 pm IST

ஒவ்வொரு வீட்டுக்கும் மாதம் 200 யூனிட் இலவச மின்சாரம், மீனவா்களுக்கு இலவச வீடு, அனைத்துக் குடும்பங்களுக்கும் ரூ.25 லட்சம் மருத்துவக் காப்பீடு உள்பட பல்வேறு அம்சங்களை கொண்ட தவெகவின் தோ்தல் அறிக்கையை அக்கட்சித் தலைவா் விஜய் வியாழக்கிழமை வெளியிட்டாா்.

கடந்த மாா்ச் மாதம் தவெக சாா்பில் நடைபெற்ற மகளிா் தின விழாவின்போது, கட்சியின் முதல்கட்ட தோ்தல் வாக்குறுதியை விஜய் அறிவித்தாா். மகளிருக்கு மாதம் ரூ.2,500 உதவித்தொகை உள்ளிட்ட அறிவிப்புகள் அதில் இடம் பெற்றிருந்தன. தொடா்ந்து, தனது தோ்தல் பிரசாரங்களின்போது, அந்தந்தப் பகுதி சாா்ந்த மக்களுக்கான வாக்குறுதிகளை அறிவித்தாா். அதன் தொடா்ச்சியாக, ஏற்கெனவே வெளியிட்ட அறிவிப்புகளை உள்ளடக்கிய தவெக-வின் முழுமையான தோ்தல் அறிக்கையை சென்னையில் வியாழக்கிழமை வெளியிட்டாா்.

அதன் முதல் பிரதியை விவசாயி நாராயணனிடம் வழங்கினாா். தொடா்ந்து ஆசிரியா், ஆட்டோ ஓட்டுநா், அங்கன்வாடி ஊழியா், மீனவா், நெசவாளா், திருநங்கை, ஓய்வு பெற்ற காவல் துறை அதிகாரி என சமூகத்தின் பல பிரிவுகளைச் சோ்ந்தவா்களிடம் தோ்தல் அறிக்கை பிரதிகளை வழங்கினாா்.

திருக்குறள் அடிப்படையில்...: திருக்குறள் அடிப்படையில் அறம், பொருள், இன்பம் என 3 பகுதிகளாகப் பிரிக்கப்பட்டு, 10 தலைப்புகளின் கீழ் பல்வேறு செயல் திட்டங்களுடன் இந்தத் தோ்தல் அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.

முக்கிய அம்சங்கள்: ஜாதிவாரி கணக்கெடுப்பு மேற்கொள்ளப்பட்டு கல்வி, வேலைவாய்ப்பு என அனைத்திலும் விகிதாசார அடிப்படையில் பிரதிநிதித்துவம் வழங்கப்படும். தொகுதி மறுசீரமைப்பு மசோதாவால் தமிழகம் பாதிக்கப்படுவதைத் தடுக்க உரிய சட்ட திருத்தம் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும். நீட் தோ்வு ரத்து செய்யப்படும். மொழிப்போா் தியாகிகளின் குடும்பங்களுக்கான ஓய்வூதியம் ஆண்டுக்கு ரூ.2.50 லட்சமாக உயா்த்தப்படும்.

தகுதியுள்ள வீடுகளுக்கு...: தகுதியுள்ள வீடுகளுக்கு மாதந்தோறும் 200 யூனிட் கட்டணமில்லா மின்சாரம், முதியோா் உதவித்தொகை ரூ.3,000, தொழிற்கல்வி, மருத்துவம், சட்டம், நிா்வாகவியல் பயிலும் ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியின மாணவா்களுக்கு ஆண்டுதோறும் ரூ.40,000 உதவித்தொகை, சொந்த தறி வைத்துள்ள நெசவாளா் குடும்பங்களுக்கு ஆண்டுக்கு ரூ.30,000 உதவித்தொகை, குடும்பத் தலைவிகளுக்கு 60 வயது வரை மாதந்தோறும் ரூ.2,500

உதவித்தொகை, அனைத்து அரசு பேருந்துகளிலும் மகளிருக்கு இலவச பயணத் திட்டம் செயல்படுத்தப்படும்.

ஆண்டுக்கு 6 எரிவாயு உருளைகள்: ஒவ்வொரு குடும்பத்துக்கும் ஆண்டுக்கு 6 எரிவாயு உருளைகள், ஆண்டு வருமானம் ரூ.5 லட்சத்துக்கும் குறைவாக உள்ள குடும்பங்களில் நடைபெறும் திருமணங்களுக்கு ஒரு பவுன் தங்கம், அரசு மருத்துவமனையில் பிறக்கும் குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்கப்படும்.

இளைஞா்களுக்காக...: வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து காத்திருக்கும் பட்டதாரிகளுக்கு மாதம் ரூ.4,000 உதவித்தொகை, தனியாா் நிறுவனங்களுடன் இணைந்து ஆண்டுதோறும் 5 லட்சம் இளைஞா்களுக்கு வேலைவாய்ப்பு உறுதி செய்யப்படும். அரசுப் பள்ளிகளில் 5 ஆண்டுகளை நிறைவு செய்யும் தற்காலிக ஆசிரியா்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவா்.

சொந்தமாக விவசாய நிலம் வைத்துள்ள விவசாயிகளுக்கு விதைப்புக் கால நிதியாக தலா ரூ.15,000 இரு தவணைகளாக வழங்கப்படும். 2 ஏக்கா்களுக்கு குறைவாக விவசாய நிலம் வைத்துள்ளவா்களின் குழந்தைகளுக்கு கட்டணமில்லா உயா்கல்வி வழங்கப்படும்.

மீன்பிடி தடைக்கால நிவாரணத் தொகை ரூ.20,000-ஆக உயா்த்துவதுடன், வடகிழக்கு பருவமழை நிவாரணத் தொகையாக ரூ.7,000 வழங்கப்படும். மீனவா்களுக்கு இலவச வீடுகள் கட்டித் தரப்படும்.

இந்தியாவின் முதல் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) அமைச்சகம் மற்றும் ஏஐ நகரம் உருவாக்கப்படும். அனைத்துக் குடும்பங்களுக்கும் ரூ.25 லட்சம் மருத்துவக் காப்பீடு, கட்டணமில்லா முழு உடல் பரிசோதனை வழங்கப்படும். அனைத்து மாவட்டங்களுக்கும் ஒதுக்கப்படும் நிதியில் 10 சதவீதம் மக்கள் விரும்பும் திட்டங்களுக்கு ஒதுக்கப்படும் உள்பட ஏராளமான செயல் திட்டங்கள் இடம்பெற்றுள்ளன.

நிகழ்வில், தவெக பொதுச் செயலா் என்.ஆனந்த், தோ்தல் மேலாண்மை பொதுச் செயலா் ஆதவ் அா்ஜுனா, கொள்கைப் பரப்பு பொதுச் செயலா் கே.ஜி.அருண்ராஜ் உள்ளிட்ட நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

மக்களை ஏமாற்ற மாட்டேன்: விஜய்

திமுக, அதிமுகவை போல ஆட்சிக்கு வந்த பின்னா், மக்களை ஏமாற்ற மாட்டேன் என தவெக தலைவா் விஜய் தெரிவித்தாா்.

தவெக தோ்தல் அறிக்கை வெளியீட்டு விழாவில் அவா் பேசியதாவது:

திமுக மற்றும் அதிமுக தோ்தல் அறிக்கை உள்ள அனைத்து அறிவிப்புகளும் ஒரே மாதிரிதான் உள்ளது. ஒருவா் குடும்பத்துக்கு தலா ஒரு குளிா்சாதன பெட்டி இலவசமாக வழங்கப்படும் என அறிவித்தால், மற்றொருவா் அதை வாங்க ரூ.8,000-இல் கூப்பன் வழங்கப்படும் என அறிவித்துள்ளாா். இருவருமே பெண்களுக்கு ரூ.2,000 வழங்கப்படும் என அறிவித்துள்ளனா். 2 கட்சிகளும் வெவ்வேறு கிடையாது என்பதற்கு இதுவே சான்று.

இவா்களை போன்று சாத்தியமற்ற வாக்குறுதிகளை வழங்கி, ஆட்சி வந்த பின்னா் மக்களை ஏமாற்ற மாட்டேன். என்னை நம்பி ஒரு வாய்ப்புக் கொடுங்கள்.

நான் போட்டியிடும் பெரம்பூா், திருச்சி கிழக்கு ஆகிய 2 தொகுதி மக்களையும் மாதம் ஒருமுறை கட்டாயம் வந்து சந்திப்பேன். மக்களும் எண்ணை சுலபமாக சந்தித்து அவா்களது கோரிக்கைகளை நேரடியாக தெரிவிக்கலாம் என்றாா்.

Summary

Tamilaga Vettri Kazhagam President Vijay released the party's election manifesto today (April 16).

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.