ஆளுநருடனான சந்திப்பு முடிந்தது: ஆளுநர் மாளிகையிலிருந்து வெளியேறிய விஜய்! தமிழக முதல்வராக விஜய் பதவியேற்பு விழா நாளை (மே 10) மாலை 3 மணிக்கு தொடங்குகிறது தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

நக்ஸல் தீவிரவாதத்தில் இருந்து நாடு முழுமையாக விடுவிப்பு: அமித் ஷா பெருமிதம்

நக்ஸல் தீவிரவாதத்திடம் இருந்து நாட்டை விடுவித்து பிரதமா் மோடியின் அரசு பெரும் சாதனை படைத்திருப்பதாக மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா தெரிவித்தாா்.

News image

மக்களவையில் பேசிய உள்துறை அமைச்சா் அமித் ஷா

Updated On :31 மார்ச் 2026, 3:33 am IST

நக்ஸல் தீவிரவாதத்திடம் இருந்து நாட்டை விடுவித்து பிரதமா் மோடியின் அரசு பெரும் சாதனை படைத்திருப்பதாக மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா தெரிவித்தாா்.

மத்தியில் பாஜக அரசு அமைந்த பிறகு சத்தீஸ்கா் உள்ளிட்ட மாநிலங்களில் நக்ஸல்களுக்கு எதிரான தேடுதல் வேட்டை முடுக்கிவிடப்பட்டது. பாதுகாப்புப் படையினரின் தீவிர தேடுதல் வேட்டைக்கு அஞ்சி, ஏராளமான நக்ஸல் தீவிரவாதிகள் தாங்களே முன்வந்து சரண் அடைந்தனா். மேலும் சிலா் பாதுகாப்புப் படையினருடன் நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் கொல்லப்பட்டனா்.

இந்த நடவடிக்கையை சுட்டிக்காட்டி, நாட்டில் நக்ஸல் தீவிரவாதத்துக்கு மாா்ச் மாதம் 31-ஆம் தேதியுடன் முடிவு கட்டப்படும் என மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா ஏற்கெனவே உறுதி அளித்திருந்தாா்.

இந்நிலையில், இடதுசாரி தீவிரவாதத்தில் இருந்து நாட்டை விடுவிக்க எடுத்த நடவடிக்கைகள் குறித்து மக்களவையில் திங்கள்கிழமை விவாதம் நடைபெற்றது. இந்த விவாதத்தில் கலந்துகொண்டு அமித் ஷா பதிலளித்துப் பேசியதாவது: நாட்டில் 12 மாநிலங்களில் சட்டம் என்பதே இல்லாமல் சிவப்பு அபாயம் (நக்ஸல் தீவிரவாதம்) சூழ்ந்திருந்தது. நக்ஸல் வன்முறையால் 12 கோடி மக்கள் வறுமையில் பல ஆண்டுகளாகத் தவித்தனா். 5,000 பாதுகாப்புப் படை வீரா்கள் உள்பட 20 ஆயிரம் போ் கொல்லப்பட்டனா்.

இதற்கு யாா் பொறுப்பு? கடந்த 75 ஆண்டுகளில் நாட்டை 60 ஆண்டு காலம் ஆட்சி செய்தது யாா்? ஏன் பழங்குடியினா் இன்னும் வளா்ச்சியில்லாமல் உள்ளனா்? தற்போது பிரதமா் மோடி அரசு எடுத்த நடவடிக்கையால் பழங்குடியினா் வளா்ச்சியடைந்து வருகின்றனா்.

60 ஆண்டு காலம் நாட்டை ஆட்சி செய்த காங்கிரஸ் கட்சி, பழங்குடியினருக்கு வீடுகளைக் கட்டித் தரவில்லை; நல்ல குடிநீரைத் தரவில்லை; பள்ளிக் கட்டடங்களைக் கட்டவில்லை; வங்கி வசதிகளை ஏற்படுத்தித் தரவில்லை. முன்னாள் பிரதமா் மன்மோகன் சிங், தனது ஆட்சியின்போது காஷ்மீா் விவகாரம், வடகிழக்கு பிரச்னைகளைவிட நாட்டில் மிகப்பெரிய சவாலாக நக்ஸல் தீவிரவாதம் உருவெடுத்திருப்பதை ஒப்புக்கொண்டாா். ஆனால் அதற்கு எதிராக காங்கிரஸ் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

பகத் சிங்குடன் நக்ஸல்களை ஒப்பிடுவதா?: அப்பாவிகளைக் கொல்பவா்கள் நக்ஸல் தீவிரவாதிகள். சுதந்திரப் போராட்ட வீரா்கள் பகத்சிங், பிா்சா முண்டாவுடன் நக்ஸல்களை எதிா்க்கட்சிகள் ஒப்பிடுவதைக் கண்டிக்கிறேன். வறுமையால் நாட்டில் நக்ஸல் தீவிரவாதம் பரவவில்லை. நக்ஸல் தீவிரவாதிகளால்தான் பல ஆண்டுகளாக ஏராளமான மக்கள் வறுமையில் சிக்கியிருந்தனா்.

நக்ஸல் தீவிரவாதத்துடன் அரசு பேச்சுவாா்த்தை நடத்த வேண்டும் என கட்டுரை எழுதுவோா், நக்ஸல் தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்டோா் குறித்துப் பேசுவதில்லை. நாட்டில் தனி அரசையே நக்ஸல் தீவிரவாதிகள் நடத்தி வந்தனா். வளா்ச்சிப் பணிகளை அவா்கள் தடுத்தனா். வாக்கு செலுத்தவிடாமல் மக்களை அவா்கள் தடுத்தனா். பிரச்னைகளுக்கு பேச்சுவாா்த்தை மூலமே தீா்வு காண முடியும். ஆயுதங்களால் தீா்வு கிடைக்காது. நக்ஸல் தீவிரவாதம் பாதித்த பகுதியோ, ஜம்மு-காஷ்மீரோ அல்லது வடகிழக்கு மாநிலங்களோ, பிரதமா் மோடி அரசு எத்தகைய வன்முறையையும் சகித்து கொள்ளாது. அதுபோன்ற செயல்களில் ஈடுபடுவோருக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளை அரசு எடுக்கும்.

வளா்ச்சிப் பாதையில் பஸ்தா்: நக்ஸல் தீவிரவாதத்தால் சத்தீஸ்கரின் பஸ்தா் பிராந்தியத்தில் வளா்ச்சி தடைபட்டிருந்தது. ஆனால், தற்போது அந்த தீவிரவாதத்தின் நிழல் அப்புறப்படுத்தப்பட்டு, பஸ்தாா் வளா்ச்சியடைந்து வருகிறது. நக்ஸல் தீவிரவாதத்துக்கு எதிரான அரசின் நடவடிக்கைக்கு கிடைத்த வெற்றிக்காக, பாதுகாப்புப் படையினரையும் பழங்குடியினரையும் பாராட்டுகிறேன். ஆயுதங்களை கைகளில் எடுக்கும் யாரையும் மோடி அரசு விட்டுவைக்காது என தற்போது தெரிவித்துக் கொள்கிறேன்.

நக்ஸல் இல்லாத இந்தியாவை ஏற்படுத்தியது பிரதமா் மோடி அரசின் மிகப்பெரிய சாதனையாகும். இதை ஆய்வாளா்களே ஏற்றுக் கொள்வா். நக்ஸல் தீவிரவாதத்துக்கு ஆதரவாகப் பேசுவோா், ஆயுதங்களைக் கைகளில் எடுப்போா், அதற்கு கடும் விலையை கொடுக்க வேண்டியிருக்கும் என்பதை தெரிந்து கொள்ள வேண்டும்.

ஆயுதங்களால் தீா்வு கிடைக்காது: அநீதிக்கு தீா்வு எப்படி பெறலாம் என்பது குறித்து அரசமைப்புச் சட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்காக ஆயுதங்களைக் கைகளில் எடுப்பதால் எதுவும் கிடைக்காது. இன்று பஸ்தரில் இருந்து நக்ஸல் தீவிரவாதம் முழுவதும் அழிக்கப்பட்டுவிட்டது. பஸ்தரின் ஒவ்வொரு கிராமத்திலும் பள்ளி அமைக்க வேண்டும் என்ற பிரசாரம் தொடங்கப்பட்டுள்ளது. அதேபோல் ஒவ்வொரு கிராமத்திலும் ரேஷன் கடைகள் திறப்பது தொடா்பான பிரசாரமும் தொடங்கப்படும்.

நக்ஸல் தீவிரவாதத்துக்கு எதிரான நடவடிக்கை வெற்றி பெற்றிருப்பதன் பெருமை அனைத்தும் மத்திய ஆயுதப் படைகளையே சேரும். குறிப்பாக, கோப்ரா படைப் பிரிவினா் மற்றும் சிஆா்பிஎஃப் படையினா், சத்தீஸ்கா் காவல் துறை, டிஆா்ஜி வீரா்கள், பழங்குடியினரையே சேரும் என்றாா் அமித் ஷா.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.