/

வளைகுடாவில் நிற்கும் 20 இந்தியக் கப்பல்களும் பாதுகாப்பாக உள்ளன: மத்திய அரசு

அனைத்து இந்தியக் கப்பல்களும் பாதுகாப்பாக உள்ளன

News image

IANS

Updated On :24 மார்ச் 2026, 6:30 pm IST

வளைகுடா பகுதியில் இந்தியக் கப்பல்களுக்கு பாதிப்பில்லை. அவை பாதுகாப்பாக உள்ளதை மத்திய அரசு இன்று (மார்ச் 24) உறுதிபடுத்தியுள்ளது.

இது குறித்து, இன்று(மார்ச் 24) செய்தியாளர் சந்திப்பில் பேசிய கப்பல் போக்குவரத்து துறைச் சிறப்புச் செயலர் ராஜேஷ் சின்ஹா தெரிவித்திருப்பதாவது :

வளைகுடா பகுதியில் அனைத்து இந்திய கப்பல்களும் பாதுகாப்பாக உள்ளன. கப்பல்கள் மீதான அச்சுறுத்தல் சம்பவங்கள் ஏதும் கடந்த 24 மணிநேரத்தில் ஏற்படவில்லை. இந்தியாவுக்கான எல்பிஜி ஏற்றிக்கொண்டு இரண்டு சரக்குக் கப்பல்கள் - பைன் கேஸ் மற்றும் ஜக் வசந்த் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து தாயகம் நோக்கி வந்து கொண்டிருக்கின்றன.

பாரசீக வளைகுடாவிலிருந்து இரண்டு கப்பல்கள் புறப்பட்டுவிட்ட நிலையில், பாரசீக வளைகுடா பகுதிகளில் இன்னும் 20 இந்திய கப்பல்கள் நிற்கின்றன. அவற்றில் 540 இந்தியர்கள் உள்ளனர்.

ஹோர்முஸ் நீரிணையைக் கடக்க எந்த அனுமதியும் தேவையில்லை. அதுவொரு சர்வதேச நீரிணை. முன்பும் அனுமதி பெற்று அவ்வழித்தடத்தில் போக்குவரத்து நடைபெறவில்லை. அதேபோல இப்போதும் அனுமதி தேவையில்லை.

இந்நிலையில், அவ்வழித்தடத்தில் எப்படிச் செல்ல வேண்டுமென்பதைப் பற்றி நிலைமையைக் கண்காணித்தல் வேண்டும். அதனைத்தொடர்ந்து, எந்நேரத்தில் சென்றால் பாதுகாப்பு என்பதையும் கணிக்க வேண்டும். இதற்காக எவரொருவரிடமும் அனுமதி பெறத் தேவையில்லை.

ஹோர்முஸ் நீரிணை வழியைப் பயன்படுத்த சுங்கக்கட்டணம் விதிக்கப்படுமென்று எந்தத் தரப்பிலிருந்து அறிவித்தாலும் அவையெல்லாம் அடிப்படை ஆதாரமற்றவை. ஏனெனில், சர்வதேச அளவிலான முடிவுகளின்படி, அப்பகுதியில் சுதந்திரமான போக்குவரத்துக்கு உரிமை வழங்கப்பட்டிருக்கிறது. இந்தியாவுக்கு மொத்தம் 6 எல்பிஜி சரக்கு கப்பல்கள் வரத் தயாராக உள்ளன” என்றார்.

மேற்காசிய விவகாரம் குறித்தும் சர்வதேச பொருளாதாரத்தில் அதன் தாக்கம் குறித்தும் அமெரிக்க வெளியுறவு அமைச்சகத்துடன் மத்திய வெளியுறவு அமைச்சர் திங்கள்கிழமை (மார்ச் 23) விவாதித்தார். அதில் குறிப்பாக, எரிசக்தி பாதுகாப்பு குறித்து இருதலைவர்களும் கவலையை வெளிப்படுத்தினர் என்று வெளியுறவு அமைச்சகம் தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டது.

மேலும், இலங்கை வெளியுறவு அமைச்சர் விஜித் ஹெராத்துடனும் அமைச்சர் பேசினார். அப்போது, மேற்காசியாவில் சண்டையால் ஏற்பட்டுள்ள தாக்கம் குறித்து விவாதிக்கப்பட்டதுடன், இந்தியாவின் அண்டை நாடுகளுக்கே முதன்மை எனும் மகாசாகர் திட்டத்தில் இந்தியாவின் உறுதி நிலைப்பாட்டை அவர் இலங்கையிடம் மீண்டும் வலியுறுத்தினார்.

தில்லியில் வளைகுடா ஒத்துழைப்பு கவுன்சில் (ஜிசிசி) தூதர்களுடன் திங்கள்கிழமை சந்திப்பும் நடைபெற்றது. அப்போது, மேற்காசியாவில் இந்திய சமூகத்துக்கு அவர்கள் தரப்பிலிருந்து வழங்கப்பட்ட தொடர் ஆதரவுக்கு இந்தியா சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டதாகவும் வெளியுறவு அமைச்சகம் தரப்பிலிருந்து இன்று தெரிவிக்கப்பட்டது.

Summary

All Indian ships and sailors in the Gulf region are safe.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.