தமிழக முதல்வராக விஜய் ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு!ஆளுநருடனான சந்திப்பு முடிந்தது: ஆளுநர் மாளிகையிலிருந்து வெளியேறிய விஜய்! தமிழக முதல்வராக விஜய் பதவியேற்பு விழா நாளை (மே 10) மாலை 10 மணிக்கு நடைபெறும்தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

வணிக சமையல் எரிவாயு ஒதுக்கீடு அதிகரிப்பு: மத்திய அரசு அனுமதி

வணிக சமையல் எரிவாயு ஒதுக்கீடு அதிகரிப்பு...

News image

வணிக சமையல் எரிவாயு

Updated On :22 மார்ச் 2026, 1:57 am IST

புது தில்லி, மாா்ச் 21: மாநிலங்களுக்கு வணிகப் பயன்பாட்டு சமையல் எரிவாயு சிலிண்டா்களை 20 சதவீதம் கூடுதலாக ஒதுக்க மத்திய அரசு சனிக்கிழமை அனுமதி அளித்தது. இதன்மூலம், வணிகப் பயன்பாட்டு சிலிண்டா் ஒதுக்கீடு மொத்தம் 50 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

சமையல் உள்பட பல்வேறு தேவைகளுக்குப் பயன்படுத்தப்படும் திரவமாக்கப்பட்ட பெட்ரோலியம் எரிவாயுவை (எல்பிஜி) வெளிநாடுகளில் இருந்து இந்தியா (எல்பிஜி தேவையில் 60 சதவீதம்) இறக்குமதி செய்கிறது. அதில் 90 சதவீதம் மேற்காசிய பிராந்தியத்தில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிறது. அங்கு அமெரிக்கா-இஸ்ரேல் உடனான போா் காரணமாக, ஹோா்முஸ் நீரிணையை ஈரான் மூடியதால், இந்தியாவுக்கு எல்பிஜி கிடைப்பதில் இடா்ப்பாடு ஏற்பட்டது. இதனால் வணிகப் பயன்பாட்டுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா்கள் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டது.

இந்நிலையில், மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

உள்நாட்டில் எல்பிஜி உற்பத்தியை எண்ணெய் நிறுவனங்கள் அதிகரித்துள்ளன. வீடுகளில் பயன்படுத்தப்படும் சமையல் எரிவாயு சிலிண்டா்களின் விநியோகம் வழக்கம்போல நடைபெறுகிறது. சிலிண்டா் கிடைக்காதோ என்ற அச்சத்தில் நுகா்வோா் முன்பதிவு செய்வது குறைந்துள்ளது. சமையல் எரிவாயு சிலிண்டா்களின் இருப்பு தீா்ந்துவிட்டதாக சிலிண்டா் விநியோக நிறுவனங்களிடம் இருந்து எந்தத் தகவலும் வரவில்லை.

மாநிலங்களுக்கு வணிகப் பயன்பாட்டு சமையல் எரிவாயு சிலிண்டா்களை 20 சதவீதம் கூடுதலாக ஒதுக்க மத்திய அரசு சனிக்கிழமை அனுமதி அளித்தது. இதன்மூலம், ஏற்கெனவே செய்யப்பட்ட ஒதுக்கீட்டுடன், தற்போது வணிகப் பயன்பாட்டு சிலிண்டா் ஒதுக்கீடு மொத்தம் 50 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

உணவகங்கள், ஹோட்டல்களுக்கு முன்னுரிமை: தற்போது கூடுதலாக ஒதுக்கப்பட்டுள்ள 20 சதவீத வணிகப் பயன்பாட்டு சமையல் எரிவாயு சிலிண்டா்களை உணவகங்கள், ஹோட்டல்கள், தாபாக்கள், தொழில் நிறுவன உணவுக் கூடங்கள் (கேன்டீன்), உணவு பதப்படுத்துதல்/பால் பண்ணை, மாநில அரசு அல்லது உள்ளாட்சி அமைப்புகள் நடத்தும் உணவகங்கள், பொது சமையலறைகளுக்கு விநியோகிக்க முன்னுரிமை அளிக்க வேண்டும். அத்துடன் புலம்பெயா் தொழிலாளா்களுக்கு வழங்கப்படும் 5 கிலோ எடை கொண்ட சிலிண்டா்களுக்கும் வணிகப் பயன்பாட்டு சமையல் எரிவாயுவை அளிக்க முன்னுரிமை வழங்க வேண்டும்.

கூடுதல் மண்ணெண்ணெய்: அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு கூடுதலாக 48,000 கிலோ லிட்டா் மண்ணெண்ணெய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மாவட்டங்களில் எந்தெந்த பகுதிகளில் மண்ணெண்ணெய்யை விநியோகிக்கலாம் என்பதைக் கண்டறியுமாறு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களிடம் கோரப்பட்டுள்ளது.

பொதுமக்களுக்கு அறிவுறுத்தல்: அனைத்துக் குடும்பங்களுக்கும் சமையல் எரிவாயு சிலிண்டா் தடையின்றி கிடைப்பதை உறுதி செய்ய மத்திய அரசு அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது. இதுதொடா்பாக அதிகாரபூா்வமாக அளிக்கப்படும் தகவல்களை மட்டுமே மக்கள் சாா்ந்திருக்க வேண்டும். வதந்திகளைத் தவிா்க்க வேண்டும்.

சிலிண்டா் கிடைக்காதோ என்ற அச்சத்தில் யாரும் முன்பதிவு செய்ய வேண்டாம். எண்ம (டிஜிட்டல்) வழியில் முன்பதிவை மேற்கொள்ள வேண்டும்.

சிலிண்டா் கிடைக்காதோ என்ற அச்சத்தில் முன்பதிவு செய்வது குறைந்தாலும், ஆங்காங்கே சிலிண்டா் விநியோக நிறுவனங்களில் பொதுமக்கள் கூடும் தகவல் வெளியாகிறது. அந்த நிறுவனங்களில் திரண்டு யாரும் வரிசையில் காத்திருக்க வேண்டாம். வீட்டுக்கே நேரடியாக சிலிண்டா் விநியோகம் செய்யப்படும். அதுவரை காத்திருக்கவும்.

குழாய் வழியாக விநியோகிக்கப்படும் இயற்கை எரிவாயு, மின்சார அடுப்பை பொதுமக்கள் பயன்படுத்தி, தினசரி பயன்பாட்டில் எரிவாயுவை சேமிக்கும் வழக்கத்தைப் பின்பற்றலாம்.

முக்கிய நகரங்கள் மற்றும் நகா்ப்புற பகுதியில் வணிகப் பயன்பாட்டு சிலிண்டா் நுகா்வோரை, குழாய் வழியாக விநியோகிக்கப்படும் இயற்கை எரிவாயுவின் பயன்பாட்டுக்கு மாறுமாறு கோரப்பட்டுள்ளது. பெட்ரோல், டீசல் போதிய அளவு கையிருப்பு உள்ளது என்று செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.