உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி, காவிரியில் இருந்து தமிழகத்துக்கு கர்நாடகம் மே மாதம் 2.5 டிஎம்சி தண்ணீர் திறந்து விட காவிரி நீர் மேலாண்மை ஆணையம் புதன்கிழமை உத்தரவிட்டது.
தமிழகத்துக்கு தண்ணீர் திறப்பது தொடர்பாக ஆலோசிக்க காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் 50ஆவது கூட்டம் தில்லியில் உள்ள அதன் அலுவலகத்தில் புதன்கிழமை காலை 11.30 மணிக்கு ஹைபிரிட் (ஆன்லைன் மற்றும் நேரடி பங்கேற்பு) முறையில் நடைபெற்றது .
இக்கூட்டத்தில் பங்கேற்குமாறு தமிழகம், கர்நாடகம், கேரளம், புதுச்சேரி மாநிலங்களின் நீர்வளத்துறை அதிகாரிகளுக்கு ஆணையம் அழைப்பு விடுத்திருந்த நிலையில், இம்மாநிலங்களின் பிரதிநிதிகள் இதில் பங்கேற்றனர்.
காவிரி வழக்கில் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின்படி கர்நாடகம் தமிழகத்துக்கு திறந்து விட வேண்டிய தண்ணீரை உறுதி செய்வதற்காக இக்கூட்டம் நடைபெற்றது.
ஆணையத்தின் தலைவர் எஸ்.கே.ஹல்தார் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், தமிழகத்தின் சார்பில் தமிழ்நாடு உறுப்பினரும் நீர்வளத் துறையின் செயலருமான ஜெயகாந்தன், காவிரி தொழில்நுட்பக் குழுமம் மற்றும் பன்மாநில நதிநீர்ப் பிரிவு தலைவர் இரா. சுப்ரமணியன் ஆகியோர் சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து காணொலி காட்சி வாயிலாக கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில் தமிழகம் தரப்பில் வலியுறுத்தப்பட்டதாவது:
தற்போது (28.04.2026) மேட்டூர் அணையின் நீர் இருப்பு 42.397 டி.எம்.சி ஆக உள்ளது. அணையிலிருந்து வினாடிக்கு 1503 கன அடி நீர் குடிநீர், தொழிற்சாலை பயன்பாட்டிற்கும் மற்றும் சுற்றுச்சூழல் நீர் ஓட்டத்துக்காகவும் திறந்துவிடப்படுகிறது.
நடப்பு நீர்ப்பாசன ஆண்டில் (2025-2026) 2025, ஜூன் 1 முதல், ஏப்ரல் 27-ஆம் தேதி வரை பில்லிகுண்டுலுவில் தமிழகத்துக்கு வழங்க வேண்டிய நீரின் அளவான 174.500 டி.எம்.சி.-க்கு பதிலாக மிகை நீர் உள்பட கிடைக்கப்பெற்ற நீரின் அளவு 326.945 டி.எம்.சி. ஆகும்.
இதை சுட்டிக்காட்டி, கர்நாடக உறுப்பினர், கர்நாடகம் அளித்துள்ள மிகை நீரையும் கணக்கில் கொள்ள வேண்டும் என்று தெரிவித்ததை ஏற்றுக்கொள்ள இயலாது. கர்நாடகம் அதன் நீர்த்தேக்கத்தில் தேக்க முடியாமல் வெளியேற்றிய நீரினை அது சொந்தம் கொண்டாட முடியாது .
கர்நாடக அணைகளின் நீர் இருப்பைக் கருத்தில்கொண்டு உச்சநீதிமன்ற ஆணையின்படி, தமிழகத்திற்கு மே மாதம் வழங்கப்பட வேண்டிய சுற்றுச்சூழல் நீர் அளவான 2.5 டி.எம்.சி நீரை பில்லிகுண்டுலுவில் கர்நாடகம் உறுதிசெய்ய ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூட்டத்தில் தமிழகம் வலியுறுத்தியது.
இதையடுத்து காவிரியில் இருந்து கர்நாடகம் தமிழகத்துக்கு மே மாதம் 2.5 டி.எம்.சி. (ஆயிரம் மில்லியன் கன அடி) தண்ணீர் திறந்துவிட காவிரி நீர் மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டது.
ஒரு டிஎம்சி என்பது வினாடிக்கு 11,574 கன அடி வீதம் 24 மணி நேரம் தொடர்ந்து நீரை வெளியேற்றும்போது கிடைக்கும் அளவாகும்.
பின்னணி: தமிழகம், கர்நாடகம் இடையேயான காவிரி நதி நீர்ப் பங்கீட்டு பிரச்னை தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றம் 2018 ஆம் ஆண்டு தீர்ப்பு வழங்கியது. கர்நாடகம் எந்தெந்த மாதங்களில் எவ்வளவு நீர் தமிழகத்துக்கு வழங்க வேண்டும் என்பதை அத்தீர்ப்பின் மூலம் உச்சநீதிமன்றம் நிர்ணயம் செய்திருந்தது.
அந்த தீர்ப்பை அமல்படுத்தவும், காவிரி நீர்ப் பங்கீட்டை கண்காணிக்கவும் காவிரி நீர் மேலாண்மை ஆணையம் மற்றும் காவிரி நீர் முறைப்படுத்தும் குழு ஆகிய இரு அமைப்புகளையும் உச்சநீதிமன்றம் அப்போது அமைத்தது.
அதன்படி, இந்த இரு அமைப்புகளும் அவ்வப்போது கூடி காவிரி நதி நீர் பங்கீடு தொடர்பாக உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் உத்தரவுகளை பிறப்பித்து வருகின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
காவிரியிலிருந்து தமிழ்நாட்டிற்கு 2.5 டிஎம்சி நீர் திறக்க உத்தரவு!

தமிழகம், மேற்கு வங்கத்தில் மறுவாக்குப்பதிவு இல்லை: தோ்தல் ஆணையம்

தமிழகம், மேற்கு வங்கத்தில் மட்டும் ரூ. 865 கோடி பறிமுதல்! தேர்தல் ஆணையம் அறிவிப்பு!

காவிரி ஆணையம் அடுத்த வாரம் கூட உள்ளது
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

