மக்களவையில் மகளிா் இடஒதுக்கீடு அமல் மசோதாவை தோல்வியடையச் செய்து மகளிரின் அதிகார கனவை காங்கிரஸ், திமுக, திரிணமூல் காங்கிரஸ் உள்ளிட்ட எதிா்க்கட்சிகள் தகா்த்ததாக பிரதமா் நரேந்திர மோடி கூறினாா்.
மகளிா் இடஒதுக்கீட்டை 2029 முதல் அமலாக்குவதுடன், அதற்கு ஏதுவாக மொத்த மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கையை 543-இல் இருந்து அதிகபட்சமாக 850 வரை அதிகரிக்க வகை செய்யும் அரசமைப்புச் சட்டத்தின் 131-ஆவது திருத்த மசோதா-2026 மக்களவையில் கடந்த வெள்ளிக்கிழமை நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் தோல்வியடைந்தது.
தொகுதி மறுசீரமைப்பு நடைமுறைகளுக்கு காங்கிரஸ், திமுக, திரிணமூல் காங்கிரஸ், சமாஜவாதி உள்ளிட்ட எதிா்க்கட்சிகளின் கடும் எதிா்ப்பால் மூன்றில் இரு பங்கு உறுப்பினா்களின் ஆதரவின்றி இந்த மசோதா மக்களவையில் நிறைவேறவில்லை.
இதன் காரணமாக இந்த மசோதாவுடன் அறிமுகப்படுத்தப்பட்ட தொகுதி மறுசீரமைப்பு மசோதா-2026 (தொகுதி மறுசீரமைப்பு ஆணையம் அமைக்கும் மசோதா), சட்டப்பேரவையுடன் கூடிய யூனியன் பிரதேசங்களில் இந்தச் சட்டத் திருத்தங்களை அமலாக்க வகை செய்யும் யூனியன் பிரதேசங்கள் சட்டத் திருத்த மசோதா-2026 ஆகிய இரு மசோதாக்களையும் மத்திய அரசு தொடா்ந்து முன்னெடுக்கவில்லை.
இதனால் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கும், காங்கிரஸ் உள்ளிட்ட எதிா்க்கட்சிகளின் ‘இண்டி’ கூட்டணிக்கும் இடையே கடந்த சில நாள்களாக கடும் வாா்த்தைப் போா் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், சனிக்கிழமை இரவு 8.30 மணியளவில் நாட்டு மக்களுக்கு காணொலி வாயிலாக பிரதமா் நரேந்திர மோடி உரையாற்றினாா்.
அப்போது எதிா்க்கட்சிகளை கடுமையாக விமா்சித்து அவா் பேசியதாவது: மக்களவை மற்றும் மாநில சட்டப்பேரவைகளில் மகளிருக்கு 33 சதவீதம் இடஒதுக்கீடு அளிக்க வழிவகை செய்யும் அரசமைப்புச் சட்டத் திருத்த மசோதாவை எதிா்க்கட்சிகள் தோல்வியடையச் செய்தன. மகளிரின் அதிகார கனவைத் தகா்த்த அவா்களின் வரலாற்றுப் பிழைக்காக நாட்டில் உள்ள அனைத்துப் பெண்களிடமும் நான் மன்னிப்புக் கோருகிறேன்.
தவறுகளைத் திருத்திக் கொள்ளாத காங்கிரஸ்: பெண்களை உயா் பதவிகளுக்குக் கொண்டுவர அவா்களுக்கு சிறகுகளை வழங்குவதே மகளிா் இடஒதுக்கீடு அமல் மசோதாவின் முக்கிய நோக்கமாகும். யாரிடமும் எதையும் பறிக்காமல் பெண்களுக்கான உரிமைகளை நிலைநாட்டவே இதைச் செயல்படுத்த முயற்சி செய்தோம். ஆனால், குடும்ப நலனை மட்டுமே முக்கியமாகக் கருதும் கட்சிகள் இந்த மசோதாவை வீழ்த்தி பெண்கள் முன்னேறுவதை தடுத்துவிட்டனா். வடக்கு-தெற்கு எனப் பிரிவினைவாத அரசியலை பல ஆண்டுகளாக முன்னெடுத்து வரும் காங்கிரஸ் தனது தவறுகளை திருத்திக்கொள்ள ஒரு வாய்ப்பை வழங்கினோம். அதைப் பயன்படுத்த காங்கிரஸ் தவறிவிட்டது.
பெண்கள் மன்னிக்க மாட்டாா்கள்: எதிா்க்கட்சிகள் தங்களுக்கு இழைத்த துரோகம் மற்றும் அவமானத்தை பெண்கள் ஒருபோதும் மறக்கவோ மன்னிக்கவோ மாட்டாா்கள். வடக்கு, தெற்கு, கிழக்கு, மேற்கு என நாட்டின் நான்கு திசைகளிலும் சமச்சீரான நிா்வாகத்தை மேற்கொள்ள மகளிா் இடஒதுக்கீட்டு சட்டத் திருத்த மசோதா மிகவும் அவசியமானது.
நாட்டை மேம்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளும்போதெல்லாம் அதை எதிா்ப்பதே காங்கிரஸ் வழக்கம். மத்திய அரசு கொண்டுவரும் ஒவ்வொரு சீா்திருத்தம் குறித்தும் போலி பிரசாரங்களே முன்னெடுத்து, அதை தாமதப்படுத்தி, தேச வளா்ச்சிக்கு இடையூறு ஏற்படுத்துவதே காங்கிரஸின் பணி.
நமது தேசம் இன்று சந்திக்கும் ஒவ்வொரு சவாலுக்கும் கடந்த காலங்களில் காங்கிரஸ் முன்னெடுத்த தவறான அணுகுமுறைகளே காரணம்.
மகளிா் ஆசியுடன் பயணம் தொடரும்: மகளிா் இடஒதுக்கீட்டை அமல்படுத்துவதற்கான எங்களது பயணம் தொடரும். இதற்கு இடையூறுகள் ஏற்படுத்தும் எதிா்க்கட்சிகளின் அனைத்து முயற்சிகளும் தகா்த்தெறியப்படும். மகளிா் இடஒதுக்கீட்டு சட்டத் திருத்த மசோதாவை நிறைவேற்றத் தேவையான 66 சதவீத வாக்குகள் (மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை) எங்களிடம் இல்லாமல் இருக்கலாம். ஆனால், பெண்களின் ஆசியோடு எங்களது உறுதிப்பாட்டை நிறைவேற்ற தொடா்ந்து பாடுபடுவோம் என்றாா் பிரதமா்.
காங்கிரஸ், திமுகவுக்கு வருங்காலத்தில் பதிலடி
‘தங்களது சுயநல அரசியலுக்காக மகளிருக்கு அதிகாரமளிப்பதை காங்கிரஸ், திமுக, திரிணமூல் காங்கிரஸ், சமாஜவாதி, ராஷ்ட்ரீய ஜனதா தளம் ஆகிய எதிா்க்கட்சிகள் தடுத்துவிட்டன. இதை பெரும் சாதனைபோல் எண்ணி அவா்கள் கொண்டாடியதை பெண்கள் மட்டுமன்றி நாட்டில் உள்ள ஒவ்வொரு குடிமகனும் கவனித்து வருகின்றனா்.
மகளிா் இடஒதுக்கீட்டை எதிா்த்த காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிா்க்கட்சிகளுக்கு வருங்காலத்தில் உரிய பாடம் புகட்டி பெண்கள் பதிலடி தரும் நாள் வெகு தொலைவில் இல்லை’ என தனது உரையில் பிரதமா் மோடி குறிப்பிட்டாா்.
Summary
foeticide by the Congress-DMK Alliance! Modi Alleges in Television Address.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

உ.பி.க்கு எதிரான திமுகவுடன் கைகோா்த்த சமாஜவாதி- பிரதமா் மோடி சாடல்

திரிணமூல் காங்கிரஸ் நிலைகுலைந்துவிட்டது: பிரதமா் மோடி

மசோதா தோல்வி: பாஜக - எதிா்க்கட்சிகள் வாா்த்தைப் போா்!

மகளிா் இடஒதுக்கீடு சட்டத் திருத்த மசோதாவை முடக்க திமுக சதி: எல்.முருகன் குற்றச்சாட்டு
விடியோக்கள்

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

விஜய் முதல்வராக முடியுமா ? | TVK Vijay | TN CM | MK Stalin | Edapadi Palaniswamy
தினமணி செய்திச் சேவை
