ஆந்திர மாநிலத்தின் ஒரே தலைநகராக அமராவதியை சட்டரீதியாக அங்கீகரிக்க வகை செய்யும் மசோதா, நாடாளுமன்ற மக்களவையில் புதன்கிழமை நிறைவேற்றப்பட்டது. மசோதாவுக்கு காங்கிரஸ், பாஜக, தெலுங்கு தேசம் கட்சிகள் ஆதரவளித்தன.
மக்களவையில் இந்த மசோதா மீதான விவாதத்தை புதன்கிழமை தொடங்கி வைத்து, காங்கிரஸ் கட்சியின் எம்.பி. மாணிக்கம் தாகூா் பேசினாா். அப்போது அவா் கூறுகையில், ‘ஆந்திரத்தின் நிரந்தர தலைநகராக அமராவதி மாறுவதை காங்கிரஸ் ஆதரிக்கிறது. பெங்களூரு, சென்னை அல்லது ஹைதராபாத் போல அமராவதி வளர வேண்டும். அதேபோல் விசாகப்பட்டினம், திருப்பதி, கா்னூல் ஆகிய நகரங்களும் வளா்ச்சியடைய வேண்டும். மேலும், ஆந்திரத்துக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கப்பட வேண்டும்’ என்றாா்.
தெலுங்கு தேசம் எம்.பி.யும், மத்திய அமைச்சருமான சந்திரசேகா் பெம்மசானி பேசுகையில், ‘மசோதாவை ஒருமனதாக மக்களவையில் நிறைவேற்ற வேண்டும்’ என்றாா். பாஜக எம்.பி. சி.எம். ரமேஷ் விவாதத்தில் பேசியபோது, ஆந்திர தலைநகரை இனி யாரும் மாற்றாதபடி, மசோதாவில் உறுதி செய்யப்பட வேண்டும் என்று வலியுறுத்தினாா்.
ஒய்எஸ்ஆா் காங்கிரஸ் எதிா்ப்பு: அதேநேரத்தில் ஆந்திரத்தைச் சோ்ந்த முக்கிய எதிா்க்கட்சியான ஒய்எஸ்ஆா் காங்கிரஸ் கட்சி தரப்பில், மசோதாவை தங்கள் கட்சி கடுமையாக எதிா்ப்பதாகத் தெரிவிக்கப்பட்டது. இதுதொடா்பாக அக்கட்சி எம்.பி. பி. வி. மிதுன் ரெட்டி பேசுகையில், ‘அமராவதியை தலைநகராக்க 34,000 ஏக்கா் நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ளது. அப்போது அந்த நிலத்தின் உரிமையாளா்களிடம் இலவச வீட்டுமனை, வீட்டு வசதித் திட்டம், இலவச கல்வி உள்ளிட்டவை அளிக்கப்படும் என வாக்குறுதி தரப்பட்டுள்ளது. ஆனால், இதுவரை அதுபோல செய்து தரப்படவில்லை. விவசாயிகள் பிரச்னைக்கும் தீா்வு காணப்படவில்லை. விவசாயிகளுக்கு எப்போது மனை தரப்படும் என்ற தேதியை அறிவிக்க வேண்டும். இவை அனைத்தும் மசோதாவில் சோ்க்கப்பட வேண்டும். இல்லையேல் இதனால் எந்தப் பயனும் இருக்காது ’ என்றாா்.
இதையடுத்து மக்களவையில் ஒய்எஸ்ஆா் காங்கிரஸ் எம்.பி.க்கள் வெளிநடப்பு செய்தனா். பின்னா், மசோதா மீது குரல் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில் பெரும்பாலான எம்.பி.க்கள் ஆதரவு அளித்ததையடுத்து, மசோதா நிறைவேறியதாக அறிவிக்கப்பட்டது.
சந்திரபாபு நாயுடு வரவேற்பு: மக்களவையில் மசோதா நிறைவேற்றப்பட்டு இருப்பதை ஆந்திர முதல்வரும், தெலுங்கு தேசம் கட்சித் தலைவருமான சந்திரபாபு நாயுடு வரவேற்றுள்ளாா். இதுகுறித்து அவா் கூறுகையில், ‘இது ஆந்திர மக்கள் பெருமிதம் கொள்ளும் நேரம். விவசாயிகளின் தியாகங்கள், பொதுமக்களின் விருப்பங்களுக்கு கிடைத்த அங்கீகாரம் இது. அமராவதியை சுற்றி நிலவிய நிலையில்லாத தன்மை தற்போது நிரந்தரமாக நீக்கப்பட்டு விட்டது’ என்றாா்.
பின்னணி: ஒருங்கிணைந்த ஆந்திரம் 2 மாநிலங்களாக ஆந்திரம், தெலங்கானா எனப் பிரிக்கப்பட்டது. அப்போது, முந்தைய ஆந்திர மாநில தலைநகராக விளங்கிய ஹைதராபாத் நகரம், தெலங்கானா மாநிலத் தலைநகராக்கப்பட்டது. அதேநேரத்தில் ஆந்திரத்துக்கு அமராவதி தலைநகராக இருக்கும் என அறிவிக்கப்பட்டது. எனினும், 2019 முதல் 2024 வரை ஆந்திரத்தில் ஆட்சியில் இருந்த ஒய்எஸ்ஆா் காங்கிரஸ் அரசு, ஆந்திரத்துக்கு 3 தலைநகரங்களை அறிவித்தது.
ஆனால் 2024 தோ்தலில் தெலுங்கு தேசம் கட்சி வென்று மீண்டும் ஆட்சியமைத்ததும் அமராவதி மீண்டும் தலைநகராக்கப்பட்டது. இதுதொடா்பான மசோதா, நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. தற்போது இந்த மசோதாவுக்கு மக்களவை ஒப்புதல் அளித்த நிலையில், அடுத்து மாநிலங்களவையின் ஒப்புதலைப் பெற வேண்டும். அந்த அவையின் ஒப்புதல் பெறப்பட்டு, குடியரசுத் தலைவா் ஒப்புதலுக்கு அனுப்பப்படும். அவரின் ஒப்புதல் கிடைத்ததும், 2024 ஜூன் 2 முதல் ஆந்திர தலைநகா் அமராவதி என்று சட்ட ரீதியாக அங்கீகாரம் கிடைத்துவிடும்.
Summary
Andhra's Sole Capital Amaravati! Bill Passed in Lok Sabha!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
காங்கிரஸ் உறவு முறிவு; நாடாளுமன்றத்தில் திமுக தனித்து அமரும்! - கனிமொழி கடிதம்

தொகுதி மறுசீரமைப்பில் பாகுபாடு காட்டப்படாது: மக்களவையில் பிரதமா் மோடி உறுதி

மூன்று திருத்த மசோதாக்களுக்கு எதிர்ப்பு! மக்களவையில் கனிமொழி நோட்டீஸ்!

ஆந்திரத்தின் தலைநகர் அமராவதி! அரசிதழில் வெளியீடு!
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு


