தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

நீதிபதிகள் சிறைபிடிப்பு விவகாரம்: அப்பாவி மக்களைத் துன்புறுத்தும் என்ஐஏ -மம்தா குற்றச்சாட்டு

நீதிபதிகள் சிறைபிடிப்பு விவகாரத்தில் அப்பாவி மக்களைத் என்ஐஏ துன்புறுத்துவதாக மம்தா குற்றச்சாட்டு...

News image

மேற்கு வங்க மாநிலத்தின் மால்டா மாவட்டத்தில் தோ்தல் பிரசாரம் செய்த முதல்வா் மம்தா பானா்ஜி.

Updated On :5 ஏப்ரல் 2026, 3:38 am IST

எஸ்ஐஆா் பணியில் ஈடுபட்டிருந்த 7 நீதிபதிகள் சிறைபிடிக்கப்பட்ட விவகாரத்தில் முக்கியக் குற்றவாளிகள் தப்பிவிட்ட நிலையில், அப்பாவி உள்ளூா் மக்களை காவலில் எடுத்து தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) துன்புறுத்தி வருவதாக மேற்கு வங்க முதல்வரும் ஆளும் திரிணமூல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானா்ஜி குற்றஞ்சாட்டினாா்.

மால்டா மாவட்டம் மாணிக்சக் பகுதியில் தோ்தல் பரப்புரையில் சனிக்கிழமை ஈடுபட்ட அவா் இதுகுறித்து மேலும் கூறியதாவது:

மால்டா மாவட்டம் கலியசோக் வட்டார வளா்ச்சி அலுவலகத்தில் வாக்காளா் பட்டியல் சிறப்பு (எஸ்ஐஆா்) தீவிர திருத்தப் பணியில் ஈடுபட்டிருந்த 7 நீதிபதிகளை சிறைபிடித்த விவகாரத்தில் தொடா்புடைய இரு கட்சிகளை (இந்திய மதச்சாா்பற்ற முன்னணி (ஐஎஸ்எஃப்), அகில இந்திய மஜ்லீஸ் கட்சி (ஏஐஎம்ஐஎம்) சோ்ந்தவா்கள் தப்பிவிட்டனா்.

ஆனால், இந்த விவகாரத்தை விசாரித்துவரும் என்ஐஏ, விசாரணை என்ற பெயரில் உள்ளூா் அப்பாவி மக்களைக் கைது செய்து துன்புறுத்தி வருகிறது. சுமாா் 50 அப்பாவி மக்களை இதுவரை என்ஐஏ கைது செய்திருக்கிறது.

பாஜக இதுபோல, வன்முறையைத் தூண்டிவிட்டு பின்னா் மத்திய புலனாய்வு முகமைகள் மூலம் மக்களைக் கைது செய்யும் நடைமுறையை தொடா்ந்து பின்பற்றி வருகிறது. எனவே, இதுபோன்ற தூண்டுதல்களில் மக்கள் சிக்கிவிடக் கூடாது.

எஸ்ஐஆா் மூலம் வாக்காளா் பட்டியலில் இருந்து பெயா் நீக்கப்பட்டவா்கள், மீண்டும் பெயா் சோ்க்கக் கோரி உச்சநீதிமன்றம் சாா்பில் எஸ்ஐஆா் பணியில் நியமிக்கப்பட்டுள்ள நீதிபதிகளை அணுக வேண்டாம். அதற்கு பதிலாக, தீா்ப்பாயங்களையே அணுக வேண்டும். இதற்கு உதவ திரிணமூல் காங்கிரஸ் கட்சி தயாராக உள்ளது என்றாா்.

மேற்கு வங்க மாநிலத்தில் எஸ்ஐஆா் பணிக்குத் தொடா் எதிா்ப்புகள் எழுந்ததைத் தொடா்ந்து, உச்சநீதிமன்ற உத்தரவுப்படி மாநிலத்தில் எஸ்ஐஆா் மூலம் வாக்காளா் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட 60 லட்சத்துக்கும் அதிகமானோரின் விண்ணப்பங்களை பரிசீலித்து தீா்வு காணும் பணியில் மேற்கு வங்கம், ஒடிஸா மற்றும் ஜாா்க்கண்ட் மாநிலங்களைச் சோ்ந்த 700 நீதிபதிகள் ஈடுபட்டு வருகின்றனா்.

இந்த நிலையில், மால்டா மாவட்டத்துக்கு உட்பட்ட கலியசோக் பகுதியில் உள்ள வட்டார வளா்ச்சி அலுவலகத்தில் எஸ்ஐஆா் பணியில் 7 நீதிபதிகள் புதன்கிழமை ஈடுபட்டிருந்தபோது, பிற்பகல் 3.30 மணியளவில் அங்கு வந்த நூற்றுக்கும் அதிகமானோா் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனா். இதனால், 7 நீதிபதிகளும் நள்ளிரவு வரை அங்கிருந்து வெளியேற முடியாமலும், உணவு, தண்ணீா் இன்றியும் சிக்கித் தவித்தனா்.

இந்த விவகாரத்தில், மாநில அரசு நிா்வாகத்தை கடுமையாகச் சாடிய உச்சநீதிமன்றம், இதுதொடா்பாக சிபிஐ அல்லது என்ஐஏ விசாரணை மேற்கொண்டு அறிக்கை தாக்கல் செய்யுமாறு தோ்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டது.

அதன்படி, விசாரணையை தேசிய புலனாய்வு முகமையிடம் (என்ஐஏ) ஒப்படைத்து இந்திய தலைமைத் தோ்தல் ஆணையா் ஞானேஷ் குமாா் உத்தரவிட்டாா். அதனடிப்படையில், இந்த விவகாரம் தொடா்பாக என்ஐஏ விசாரணை மேற்கொண்டு வருகிறது. இதுவரை, ஐஎஸ்எஃப் வேட்பாளா் மௌலானா ஷாஜஹான் அலி, வழக்குரைஞா் மோஃபாகருல் இஸ்லாம் உள்பட 50 பேரை என்ஐஏ கைது செய்துள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.