பாரதிராஜா உடலுக்கு நடிகர் ரஜினி அஞ்சலி! பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

வீடுதோறும் சோலார்!

நாடு தழுவிய அளவில் வீசிக்கொண்டிருக்கும் வெப்ப அலையின் நேரடித் தாக்கம் மின் விநியோகத்தைக் கடுமையாகப் பாதித்திருக்கிறது.

News image
Updated On :8 மணி நேரங்கள் முன்பு

நாடு தழுவிய அளவில் வீசிக்கொண்டிருக்கும் வெப்ப அலையின் நேரடித் தாக்கம் மின் விநியோகத்தைக் கடுமையாகப் பாதித்திருக்கிறது. இதற்கு எந்தவொரு பகுதியோ, மாநிலமோ விதிவிலக்கல்ல. சொல்லப்போனால், மற்ற மாநிலங்களை ஒப்பிடும்போது, தமிழ்நாட்டில் ஓரளவுக்குப் பரவாயில்லை என்றுதான் சொல்ல வேண்டும்.

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில், குறிப்பாக நகரங்களில் மின்தடை காரணமாக பொதுமக்கள் ஆங்காங்கே தெருவில் இறங்கிப் போராடத் தொடங்கி இருக்கிறார்கள். அந்தந்தப் பகுதி சட்டப்பேரவை உறுப்பினர்கள் களத்தில் இறங்கி மின்தடையை சரிசெய்ய முற்பட்டிருப்பதால், அவர்கள் பொதுமக்களின் கோபத்துக்கும், கேள்விகளுக்கும் உள்ளாகிறார்கள் என்பது உண்மை. அதேநேரத்தில், எம்எல்ஏக்களே நேரில் களமிறங்குவதால் மின்வாரிய அதிகாரிகளும், ஊழியர்களும் மெத்தனமாக இல்லாமல் தீர்வு காண்பதில் முனைப்புக் காட்டுகின்றனர்.

பெரும்பாலான பகுதிகளில் பிரச்னை மின்சாரப் பற்றாக்குறை அல்ல. மின் விநியோகம், மின்மாற்றிகளின் செயல்பாட்டுக் குறைவு உள்ளிட்டவைதான் மின்தடைக்குக் காரணிகளாக இருக்கின்றன. அதிக அளவு மின்சார நுகர்வால் மாலை, இரவு நேரங்களில் "ஓவர் லோட்' காரணமாக மின் முறிவு (ஃப்யூஸ் ஆஃப்) ஏற்படுகிறது. நிலத்தடி மின் கம்பிகளில் ஏற்படும் பழுதுகள், மின்மாற்றியின் (ட்ரான்ஸ்ஃபார்மர்) "ஓவர் லோட்' காரணமாக ஏற்படும் விநியோகத் தடை, துணை மின் நிலையங்களில் உள்ள உபகரணங்களில் ஏற்படும் பிரச்னைகளால் உருவாகும் மின்முறிவு, காலப்பட்ட விநியோகக் கட்டமைப்பு உள்ளிட்ட பல காரணங்களால் மின்தடை ஏற்படுகிறது.

ஆட்சிக்குப் புதியவர்கள் என்றாலும், மின்தடையால் மக்கள் தெருவில் இறங்கிப் போராட முற்பட்டிருப்பதைப் பார்த்து மிரண்டு விடாமல், பிரச்னைகளைத் துணிந்து எதிர்கொள்ள முயலும் தவெக அரசைக் குறை சொல்லத் தோன்றவில்லை. மாறாக, மின்துறை அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் பத்திரிகையாளர்களைச் சந்தித்து நிலைமையை விளக்க முற்பட்டிருப்பது பாராட்டுக்குரியது.

இந்த ஆண்டு இந்தியாவின் மின் தேவை, முந்தைய ஆண்டுகளின் தேவையை எல்லாம் கடந்து புதிய சாதனையே படைத்து விட்டது எனலாம். 270 ஜிகா வாட்டை கடந்தது மட்டுமல்லாமல், அதிலிருந்து குறையாமல் இருந்த மின் தேவையை தொடர்ச்சியாக இந்திய மின்சாரத் துறை எதிர்கொண்டது.

"கவனத்துடன் மின்சாரத்தை உபயோகிக்க வேண்டும்' என்று மக்களுக்கு மத்திய அரசு வேண்டுகோள் விடுத்தது இதுதான் முதல்முறை. தேசிய அளவில், ஏப்ரல் மாதப் புள்ளிவிவரப்படி, எரிசக்திப் பற்றாக்குறை 0.2% என்றால், உச்சபட்சத் தேவையின்போது 0.1% என்று தெரிகிறது. இரவில் சூரிய மின்சக்தி (சோலார் பவர்) உற்பத்தி குறையும்போது, அதை ஈடுகட்ட இயலாமல் இரவு நேரங்களில் ஆங்காங்கே மின்தடைகளைத் தவிர்க்க இயலவில்லை என்று மின் விநியோகத்தைக் கண்காணிக்கும் "க்ரிட் இந்தியா' தெரிவிக்கிறது.

இந்தியாவின் பல பகுதிகளில், பூமிக்கு அடியில் செல்லும் மின்விநியோகக் கசிவுகள், கடுமையான கோடை வெப்பத்தால் வெடித்து மாநிலங்களுக்கு இடையேயான விநியோகம் தடைபட்டது. தரக்குறைவான மின்மாற்றிகள் (ட்ரான்ஸ்ஃபார்மர்கள்) பல மாநிலங்களில் வெடித்துச் சிதறி, அதன் பின்னால் இருக்கும் ஊழல் வெளிச்சம் போடப்பட்டது என்றால், மின் விநியோகம் தடைபட்டு மக்கள் வியர்வையில் குளித்தனர்; இருளில் தவித்தனர்.

நமது அனல், புனல் மின்நிலையங்களின் உற்பத்தித் திறன், ஏறத்தாழ இந்தியாவின் அதிகபட்ச மின்தேவையை எதிர்கொள்ளும் அளவில் இருக்கின்றன. போதாக்குறைக்கு காற்று, சூரிய மின்சக்தி உள்ளிட்ட மரபுசாரா எரிசக்தி உற்பத்தியும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அப்படி இருந்தும் நம்மால் தடையற்ற மின் விநியோகத்தைப் பெற முடியவில்லை என்கிற எதார்த்தம் சற்று வேடிக்கையாகத்தான் இருக்கிறது.

இந்தியாவின் மொத்த எரிசக்தி உற்பத்தியில் 72% அனல் மின்சாரம்; 9% புனல் மின்சாரம்; 2% அணு மின்சக்தி; மீதமுள்ள 17% காற்றாலை, சூரிய மின்சக்தியில் இருந்து பெறப்படுகிறது.

இந்தப் புதுப்பிக்கத்தக்க அல்லது மரபுசாரா (ரெனியூவபிள்) எரிசக்தியான 17% நம்பகத்தன்மை வாய்ந்ததல்ல என்பதுதான் பிரச்னை. மேகமூட்டம் வந்தாலோ, காற்று வீசுவது நின்றாலோ "கிரிட்' வரவு பாதிக்கப்படும்.

புதுப்பிக்கத்தக்க மின்சக்தியை மிக அதிகமாக உற்பத்தி செய்யும் ஜெர்மனி போன்ற நாடுகள், அவற்றை மிகவும் துல்லியமாகவும், வெற்றிகரமாகவும் கிரிட்டில் இணைத்து, மின் தடையே இல்லாமல் பார்த்துக் கொள்கின்றன. அது குறித்துத் தமிழகம் ஆய்வு செய்து, நமது மின் விநியோகத்தை மேம்படுத்துவதன்மூலம் ஓரளவுக்கு அதிகரித்த தேவைக்கான மின் தேவையை ஈடுகட்ட முடியும்.

கடந்த நான்காண்டுகளில், தமிழகத்தின் சூரிய மின்சக்தி உற்பத்தி கணிசமாக அதிகரித்திருக்கிறது. ராஜஸ்தான், குஜராத், மகாராஷ்டிரத்துக்கு அடுத்தபடியாக இந்தியாவிலேயே மிக அதிகமான "சோலார்' மின்சக்தி உற்பத்தி செய்யும் மாநிலம் தமிழகம்தான். 2022 மார்ச்சில் 5,067 மெகாவாட்டாக இருந்த "சோலார்' மின்உற்பத்தி, ஏப்ரல் 2026}இல் 174% அதிகரித்து 13,871 மெகா வாட்டாக உயர்ந்திருக்கிறது. அதுமட்டுமல்லாமல், காற்றாலை மின் உற்பத்தி 12, 159 மெகா வாட்டை எட்டியிருக்கிறது.

"வீடுதோறும் சோலார்' என்கிற திட்டத்தை, போதுமான மானியம் வழங்கி முன்னெடுப்பதன் மூலம் கடுமையான கோடையில், மின் தடை ஏற்பட்டாலும் மக்கள் தெருவில் இறங்கிப் போராடாமல் தடுக்க முடியும். மகளிர் உரிமைத் தொகைக்குப் பதிலாக ஆக்கபூர்வமாக வீடுதோறும் சோலார் திட்டத்தை, முதல்வர் ஜோசப் விஜய் அரசு அறிவிக்கலாமே...

அருவினை என்ப உளவோ கருவியான்

காலம் அறிந்து செயின்?

(செய்யும் செயலை முடிப்பதற்கு வேண்டிய) கருவிகளுடன் ஏற்ற காலத்தையும் அறிந்து செய்தால், அரிய செயல்கள்

என்பவை உண்டோ?

திருக்குறள் (எண் 483) அதிகாரம்: காலம் அறிதல்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.