இந்தியாவில் மார்ச் 31-ஆம் தேதியுடன் நக்ஸல் தீவிரவாதத்துக்கு முடிவு கட்டப்படும் என்று நிர்ணயித்த இலக்கை அடைந்துவிட்டதாகத் தெரிவித்திருக்கிறது மத்திய அரசு.
இடதுசாரி தீவிரவாதத்திலிருந்து நாட்டை விடுவிக்க எடுத்த நடவடிக்கைகள் குறித்து மக்களவையில் மார்ச் 30-ஆம் தேதி நடைபெற்ற விவாதத்துக்குப் பதிலளித்துப் பேசியபோது இந்த அறிவிப்பை பெருமிதத்துடன் வெளியிட்டார் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா.
மேற்கு வங்கத்தின் நக்ஸல்பாரி கிராமத்தில் 1967-இல் நிலப்பிரபுத்துவத்துக்கு எதிராகத் தொடங்கப்பட்ட ஆயுதப் புரட்சியே நக்ஸல் இயக்கத்துக்கு விதை போட்டது. பின்னர், அந்த இயக்கம் படிப்படியாக பல்வேறு மாநிலங்களுக்குப் பரவியது.
ஒரு காலகட்டத்தில் பிகார், சத்தீஸ்கர், ஜார்க்கண்ட், ஒடிஸா, மகாராஷ்டிரம், மத்திய பிரதேசம், ஆந்திரம், தெலங்கானா உள்பட 12 மாநிலங்களுக்கு நக்ஸல் வன்முறை ஊடுருவியது. இந்தப் பகுதிகள் "சிவப்புப் பாதை' என அழைக்கப்பட்டன.
2010-இல் சத்தீஸ்கரின் தண்டேவாடாவில் நக்ஸல்கள் நடத்திய தாக்குதலில் மத்திய ரிசர்வ் போலீஸ் படையைச் சேர்ந்த 76 வீரர்கள் கொல்லப்பட்ட சம்பவமும், 2013-இல் சத்தீஸ்கரின் ஜிரம் காட்டி பகுதியில் காங்கிரஸ் கட்சியினரின் பேரணியில் நக்ஸல்கள் நடத்திய தாக்குதலில் முன்னாள் அமைச்சர் மகேந்திர கர்மா உள்ளிட்ட 27 பேர் கொல்லப்பட்ட சம்பவமும் இந்தியாவை உலுக்கின. உள்நாட்டுப் பாதுகாப்புக்கு மிகப் பெரிய ஆபத்தாக மாவோயிஸ்ட், நக்ஸல்கள் உருவெடுத்தனர்.
2014-இல் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு பொறுப்பேற்ற பின்னர் நக்ஸல்களுக்கு எதிரான நடவடிக்கைகள் வேகம் பெறத் தொடங்கின. 2014-24 இடையிலான காலகட்டத்தில் எடுக்கப்பட்ட தீவிர நடவடிக்கைகள் காரணமாக பல்வேறு குறிப்பிடத்தக்க பலன்கள் கிடைத்தன. 2014-இல் நக்ஸல்களின் கட்டுப்பாட்டில் 18,000 சதுர கி.மீ. பரப்பளவு இருந்த நிலையில், 2024-இல் அது 4,200 சதுர கி.மீ. பரப்பளவாக குறைந்தது.
2025-இல் சில நூறு சதுர கி.மீ. பரப்பளவாகச் சுருங்கியது.
2022-இல் நக்ஸல் தாக்குதலால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 100-க்கு கீழ் குறைந்தது. ஓராண்டில் 100-க்கு குறைவானவர்களே உயிரிழந்தது கடந்த 30 ஆண்டுகளில் முதல் முறை. நக்ஸல் தாக்குதல் சம்பவங்கள் 2010-இல் 1,936-ஆக இருந்த நிலையில், 2024-இல் அது 374-ஆக குறைந்தது.
இது 81% வீழ்ச்சியாகும். பொதுமக்கள், பாதுகாப்புப் படையினர் உயிரிழப்பு 2010-இல் 1,005-ஆக இருந்த நிலையில், 2024-இல் 150-ஆக குறைந்தது. இது 85% வீழ்ச்சியாகும்.
2014-24 காலகட்டத்தில் 15 முக்கிய நக்ஸல் தலைவர்கள் பாதுகாப்புப் படையினரால் கொல்லப்பட்டனர். நம்பாலா கேசவ் ராவ் என்ற பசவராஜ், கட்டா ராமசந்திர ரெட்டி, கடாரி சத்ய நாராயண ரெட்டி, சதேவ் சோரன், சல்பதி, கஜார்லா ரவி, பாலகிருஷ்ணா, நரசிம்மா, மாத்வி ஹித்மா உள்ளிட்டோர் அண்மைக் காலங்களில் பாதுகாப்புப் படையினரால் கொல்லப்பட்ட முக்கிய நக்ஸல் தலைவர்கள். அதுமட்டுமன்றி ஆயிரக்கணக்கான நக்ஸல்கள் ஆயுதங்களைக் கைவிட்டு காவல் துறையிடம் சரணடைந்தனர்.
நக்ஸல் தீவிரவாதம் உச்சத்தில் இருந்தபோது 12 மாநிலங்களில் 126 மாவட்டங்கள் நக்ஸல் வன்முறையால் பாதிக்கப்பட்டவையாக அறியப்பட்டிருந்தன. 2018 ஏப்ரலில் அது 90 மாவட்டங்களாகவும், 2021 ஜூலையில் 70 மாவட்டங்களாகவும், 2024 ஏப்ரலில் 38 மாவட்டங்களாகவும் குறைந்தது. குறிப்பாக, சிவப்பு தீவிரவாதத்தின் இதயம் போன்று திகழ்ந்த சத்தீஸ்கரின் பஸ்தர் பிராந்தியத்தில் நக்ஸல் வன்முறை அடியோடு அழிக்கப்பட்டது. நக்ஸல்களால் வளர்ச்சி தடைபட்டிருந்த பஸ்தர் பிராந்தியத்தில் இப்போது ஏராளமான வளர்ச்சித் திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
2019 ஆகஸ்ட் 20-ஆம் தேதி மத்திய உள்துறை அமைச்சகம் நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில், நக்ஸல்களுக்கு எதிராக காவல் துறையின் ஒத்துழைப்பு, காவல் துறை நவீனமயமாக்கம், சரணடைந்த நக்ஸல்களை காவல் துறையில் பணியில் சேர்ப்பது, உளவு அமைப்புகளுக்கு இடையிலான ஒத்துழைப்பு குறித்து முடிவு எடுக்கப்பட்டது. 2024-இல் சத்தீஸ்கரில் பாஜக அரசு அமைந்த பிறகு கூட்டு நடவடிக்கை தொடங்கியது. அதைத் தொடர்ந்துதான் 2026 மார்ச் 31-க்குள் நக்ஸல் வன்முறையிலிருந்து நாட்டை முற்றிலும் விடுவிப்பது என்கிற இலக்கு 2024 ஆகஸ்ட் 24-இல் நிர்ணயிக்கப்பட்டு அதில் வெற்றி கிடைத்திருக்கிறது.
நக்ஸல் தீவிரவாதத்துக்கு எதிரான நடவடிக்கை என்பது வெறுமனே அவர்களைச் சுட்டுக் கொல்வது மட்டுமல்ல; நக்ஸல்களால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் வளர்ச்சிப் பணிகளைத் தடையின்றி தொடர்வதில்தான் அதன் வெற்றி அடங்கியிருக்கிறது என்பதை உணர்ந்த மத்திய அரசு அதிலும் முனைப்புடன் கவனம் செலுத்தியது. 2014-24 காலகட்டத்தில் நக்ஸல் வன்முறையால் பாதிக்கப்பட்டிருந்த பகுதிகளில் 12,000 கி.மீ. நீளத்துக்கு சாலைகள், ரூ.6,000 கோடியில் 5,000 கைப்பேசி கோபுரங்கள், 1,804 வங்கிகள், 1321 ஏடிஎம் மையங்கள், 6,025 அஞ்சல் அலுவலகங்கள், 259 ஏகலைவா மாதிரி பள்ளிகள் திறப்பு போன்றவை அதில் குறிப்பிடத்தக்கவை.
நக்ஸல்களால் வளர்ச்சிப் பணிகள் தடைபடுகிறது என்று சொல்லிக்கொண்டே இருந்தால், அதற்குத் தீர்வு கிடைக்கப்போவதில்லை என்பதை மத்திய அரசு நன்கு அறிந்திருக்கிறது. ஒருபுறம் நக்ஸல்களுக்கு எதிரான நடவடிக்கை, மறுபுறம் பெரும் சவால்களுக்கு மத்தியில் வளர்ச்சிப் பணிகள்- இவைதான் மத்திய அரசு தனது இலக்கை அடைந்திருப்பதற்கு முக்கியக் காரணம்.
இத்துடன் விட்டுவிடக் கூடாது; கண்காணிப்பு தொடர வேண்டும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தில்லியில் பலத்த காற்றுடன் ஆலங்கட்டி மழை: வெப்பத்தை தணித்தது

நிலம் கையகப்படுத்துவதில் தாமதம்: ‘நெடுஞ்சாலை கட்டுமான இலக்கை எட்ட முடியவில்லை’

லோதி எஸ்டேட் பிரிவு - 7 பங்களாவுக்கு குடிபெயா்ந்தாா் அரவிந்த் கேஜரிவால்

கடந்த 10 ஆண்டுகளில் 10,000 நக்ஸல்கள் சரண்! தீவிரவாத தலைமை ஒழிப்பு!!
விடியோக்கள்

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

