
கடும் முரணை அசாதாரணமாக எழுதிய அருந்ததி ராய்: ராஷி கன்னா
எழுத்தாளர் அருந்ததி ராயின் புதிய நூல் குறித்து ராஷி கன்னா...

எழுத்தாளர் அருந்ததி ராய், நடிகை ராஷி கன்னா.
நடிகை ராஷி கன்னா எழுத்தாளர் அருந்ததி ராயின் புதிய நூல் குறித்து தன் கருத்தைக் கூறியுள்ளார்.
நடிகை ராஷி கன்னா தமிழ், தெலுங்கு திரைப்படங்களில் தொடர்ச்சியாக நடித்து வருகிறார். தற்போது, நடிகர் ரஜினிகாந்த்துடன் தர்மன் திரைப்படத்தில் இணைந்துள்ளார்.
இவர் புத்தக வாசிப்பு கொண்ட நடிகை என்பதால் அடிக்கடி நூல்கள் குறித்து குறிப்புகளை எழுதுவார். இந்த நிலையில், பிரபல இந்திய எழுத்தாளர் அருந்ததி ராய் எழுதிய மதர் மேரி கம்ஸ் டூ மி நூல் குறித்து தன் கருத்துகளைப் பகிர்ந்துள்ளார்.
இதில், “மதர் மேரி கம்ஸ் டூ மி (Mother Mary Comes to Me) நூலில் ஓர் அசாதாரணமான சிறப்பு இருக்கிறது. இயற்கையின் பேராற்றலைப் போலத் திகழ்ந்த பெண், தனக்கு நெருக்கமானவர்களின் மனதில் ஆழமான காயங்களையும் ஏற்படுத்தியிருக்க முடியும் என்ற முரண்பாட்டை அருந்ததி ராய் கையாளும் விதம் வியப்பளிக்கிறது.
மேரி ராய், உலகையே எதிர்த்துக் கேள்வி கேட்டு, தனக்கான ஓர் இடத்தைத் தானே உருவாக்கிக்கொண்ட வலிமை மிகுந்த பெண்ணியவாதி. ஆனால், அவரின் தீவிரமும் கட்டுப்படுத்த முடியாத இயல்பும் உடனிருக்கும் மிக நெருக்கமானவர்களைக் காயப்படுத்தவும் செய்தன. தனது தாயின் சாதனைகளைக் குறைத்துக் காட்டாமலும் அவர் ஏற்படுத்திச் சென்ற காயங்களையும் பாதிப்புகளையும் மறைக்காமலும் அருந்ததி எழுதியுள்ளார். இரண்டையும் உள்ளடக்கிய ஓர் அசாதாரணமான சிக்கலான மரபு இங்கே வெளிப்படுகிறது. தன்னைப் புரிந்துகொள்ளத் தொடர்ந்து போராடிய அதே தாயால் உருவாக்கப்பட்ட ஒரு மகள்; தாயிடமிருந்து பெற்ற நெருப்பையும் அந்த நெருப்பில் வெந்ததால் ஏற்பட்ட வடுக்களையும் சுமந்துகொண்டு வாழ்கிறாள்.
தன்னைப் புண்படுத்திய ஒருவரை நேசிப்பது என்றால் என்ன? ஒருவரால் ஏற்பட்ட வலியை மறுக்காமல், அவரையும் ஒரு மனிதராகப் புரிந்துகொள்வது எப்படி? ஒரே மனிதருக்குள் அன்பும் கொடூரமும் இணைந்து வாழ முடியும் என்பதை உணர்ந்துகொண்டு வாழ்வது எப்படி? இத்தகைய கேள்விகளை இந்த நினைவுக் குறிப்புகள் எழுப்புகின்றன.
பொதுவெளியில் சாதனைகள் படைத்தவர்களின் தனிப்பட்ட வாழ்க்கை என்பது உலகம் கற்பனை செய்வதைப் போல எளிமையானதாக இருப்பதில்லை என்பதையும் இந்நூல் உணர்த்துகிறது. இது தாய்மை, நினைவுகள், கோபம், மன உறுதி ஆகியவற்றைப் பற்றிய ஒரு சித்திரம்.
ஒரு பெண் புரட்சிகரமான மாற்றங்களை ஏற்படுத்தியவராகவும் அதே நேரத்தில் குறைகளும் தவறுகளும் நிறைந்த தாயாகவும் இருக்க முடியும் என்பதையும் அந்த இரு முகங்களையும் மறைக்காமல் ஒரு மகளால் உண்மையைப் பேச முடியும் என்பதையும் ஏற்றுக்கொள்ளும் இடத்தை உருவாக்கியிருப்பதே இந்த நூலின் மிகப் பெரிய சாதனையாக இருக்கலாம்.” எனத் தெரிவித்துள்ளார்.
Actress Raashi Khanna has shared her thoughts on author Arundhati Roy's new book.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







