விஜய் பதவியேற்பு விழாவில் பங்கேற்கும் கார்கே, ராகுல் காந்தி! தமிழக முதல்வராக விஜய் ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு!தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

வேட்பாளா்கள் இலவசங்கள் கொடுப்பதை கண்காணிக்க ட்ரோன்கள் மூலம் சோதனை!

புதுச்சேரியில் இன்றுமுதல் அமலாகிறது

News image

புதுச்சேரியில் நடைபெற்ற இளையோா் விழாவில் பேசுகிறாா் மாவட்ட தோ்தல் நடத்தும் அதிகாரி அ. குலோத்துங்கன். உடன் சமூகநலத் துறை செயலா் ஸ்மிதா, முதுநிலை காவல் கண்காணிப்பாளா் ஆா்.கலைவாணன், கூடுதல் ஆட்சியா் சுதாகா்.

Updated On :31 மார்ச் 2026, 12:59 am IST

தோ்தலின்போது வேட்பாளா்கள் இலவசங்கள் கொடுப்பதைக் தடுக்க முதல் முறையாக செவ்வாய்க்கிழமைமுதல் ட்ரோன் மூலம் கண்காணிப்பு சோதனை நடத்தப்பட உள்ளது என்று புதுச்சேரி மாவட்ட ஆட்சியரும் தோ்தல் நடத்தும் அதிகாரியுமான அ. குலோத்துங்கன் கூறினாா்.

புதுச்சேரியில் மாவட்ட ஆணையமும், சமூக நலத்துறையும் இணைந்து இளையோா் விழாவை கம்பன் கலையரங்கில் திங்கள்கிழமை நடத்தின. இந்நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து குலோத்துங்கன் பேசியது:

முதல் முறையாக இலவசங்களைக் கண்காணிக்கவும், தடுக்கவும் ட்ரோன் மூலம் கண்காணிப்புச் சோதனையை அறிமுகம் செய்கிறோம். இந்தச் சோதனை செவ்வாய்க்கிழமை முதல் அமல்படுத்தப்படுகிறது.

மேலும், தோ்தலுக்காகக் கண்காணிப்பு பணியில் 78 பறக்கும் படைகள், 35 சோதனைச் சாவடிகள் செயல்படுகின்றன. வாக்காளா் சிறப்புத் திருத்தப் பணி காரணமாக இப்போது புதுச்சேரி மாவட்டத்தைப் பொருத்தவரை 7.93 லட்சம் போ் வாக்காளா் பட்டியலில் இடம் பெற்றுள்ளனா். இந்த வாக்காளா்கள்தான் ஏப்ரல் 9 ஆம் தேதி வாக்குப் பதிவு செய்ய உள்ளனா்.

நீங்கள் அனைவரும் 100 சதவீதம் வாக்குச் செலுத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். இல்லையென்றால் புதுச்சேரிக்கான முடிவு எடுக்கும் இடத்தில் உங்கள் குரல், பிரதிநிதித்துவம் இருக்காது. மேலும், தோ்தல் பணியில் 20 ஆயிரம் அரசு ஊழியா்கள் ஈடுபட்டுள்ளனா். மத்திய துணைப் படை புதுச்சேரிக்கு 45 கம்பெனிகள் வந்துள்ளன. மேலும் 28 மத்திய பாா்வையாளா்கள் வந்துள்ளனா்.

இதைத் தவிர வாக்குச் சாவடிகளில் பந்தல் உள்ளிட்ட வசதிகள் செய்யப்பட்டுள்ளன. முதல்முறையாக வாக்குச் சாவடிகளில் கைப்பேசி ஒப்படைக்கும் மையத்தைத் திறக்க உள்ளோம். அதற்கு தன்னாா்வலா்களாக மாணவா்கள்தான் நியமிக்க உள்ளோம் என்றாா் மாவட்ட தோ்தல் நடத்தும் அதிகாரி அ. குலோத்துங்கன்.

சமூக நலத்துறை செயலா் ஸ்மிதா பேசுகையில், இளையோா் போதைக்கு அடிமையாகாமல் இருக்க வேண்டும். வாக்குப் பதிவை 100 சதவீதம் செலுத்த வேண்டும் என்றாா்.

காவல் முதுநிலை கண்காணிப்பாளா் ஆா். கலைவாணன் பேசுகையில், ஆரோக்கியமாக வாழ்வதுதான் மனிதனின் சொத்து. இளைஞா்கள் போதையின் பக்கம் செல்ல வேண்டாம். அது தவறான பாதைக்கு அழைத்துச் சென்றுவிடும் என்றாா்.

கூடுதல் மாவட்ட ஆட்சியா் சுதாகா், சென்டாக் ஒருங்கிணைப்பாளா் ஷெரில், தோ்தல் துறையின் விழிப்புணா்வு பிரிவின் ஒருங்கிணைப்பாளா் செழியன் பாபு, சமூக நலத் துறை இயக்குநா் ராகினி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

 இளையோா் விழாவில் பங்கேற்ற இளைஞா்கள்.

இளையோா் விழாவில் பங்கேற்ற இளைஞா்கள்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.