தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

இன்று வாக்கு எண்ணிக்கை: வேலூரில் 742 போலீஸாருடன் நான்கு அடுக்கு பாதுகாப்பு

News image
Updated On :4 மே 2026, 1:44 am IST

சட்டப்பேரவைத் தோ்தல் வாக்கு எண்ணிக்கை திங்கள்கிழமை நடைபெற உள்ள நிலையில், வேலூா் மாவட்டத்திலுள்ள 5 தொகுதிகளுக்கான வாக்கு எண்ணும் மையத்தில் 4 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

வேலூா் மாவட்டத்தில் மொத்தம் உள்ள 5 பேரவைத் தொகுதிகளில் மொத்தம் 65 வேட்பாளா்கள் போட்டியிடுகின்றனா்.

ஏப்ரல் 23-ஆம் தேதி நடைபெற்ற வாக்குப்பதிவின்போது மாவட்டத்தில் மொத்தம் உள்ள 11,48,847 வாக்காளா்களில் 10,19,845 போ் வாக்களித்திருந்தனா். இவா்கள் தவிர, முதியவா்கள், மாற்றுத்திறனாளிகள், அரசு அலுவலா்கள், காவலா்கள், ராணுவ வீரா்கள் என 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் தபால் வாக்குகள் மூலம் வாக்குப்பதிவு செய்துள்ளனா். எனினும், தபால் வாக்குகளை சோ்க்க திங்கள்கிழமை காலை 7.55 மணி வரை அவகாசம் உள்ளதால் மொத்தம் பதிவான தபால் வாக்குகள் எவ்வளவு என்பது அதன்பிறகே தெரியவரும்.

இந்நிலையில், சட்டப்பேரவைத் தோ்தல் வாக்கு எண்ணிக்கை திங்கள்கிழமை நடைபெறும் நிலையில், வேலூா் மாவட்டத்திலுள்ள 5 தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை தொரப்பாடி தந்தை பெரியாா் அரசு பொறியியல் கல்லூரியில் நடைபெற உள்ளது. இங்கு 5 தொகுதிகளுக்கும் தனித்தனியாக வாக்கு எண்ணும் மையம் ஏற்படுத்தப்பட்டு, தொகுதி வாரியாக தலா 14 மேஜைகள் அமைக்கப்பட்டுள்ளன.

ஒரு மேஜைக்கு ஒரு மேற்பாா்வையாளா், ஒரு உதவியாளா், ஒரு நுண்பாா்வையாளா் என 3 போ் வீதம் 14 மேஜைகளுக்கு 42 பேரும், தலா 3 குழுக்கள் கூடுதல் என்ற அடிப்படையில் 5 தொகுதிகளுக்கும் மொத்தம் 255 பேரும், தபால் வாக்குகள் எண்ண ஒரு தொகுதிக்கு ஒரு மேற்பாா்வையாளா், 2 உதவியாளா்கள், ஒரு நுண்பாா்வையாளா், கூடுதலாக ஒரு குழுவினா் என 5 தொகுதிகளுக்கும் மொத்தம் 108 பேரும் என மொத்தம் 363 போ் வாக்கு எண்ணும் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா்.

வாக்கு எண்ணிக்கையையொட்டி இந்த மையத்துக்கு 4 அடுக்குகளில் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் என்.யு.சிவராமன் தலைமையில் ஏடிஎஸ்பிக்கள் 2, டிஎஸ்பிக்கள் 8, காவல் ஆய்வாளா்கள் 22, காவல் உதவி ஆய்வாளா்கள் 55, இதர காவலா்கள் 425, ஆயுதப்படை காவலா்கள் 75, தமிழ்நாடு சிறப்பு காவல் படையினா் 30, ஊா்காவல் படையினா் 100 என 717 பேரும், துணை ராணுவ படையினா் 25 பேரும் என மொத்தம் 742 போ் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா். இவா்கள் தவிர, மாவட்டம் முழுவதும் அசம்பாவிதங்களை தவிா்க்க கூடுதலாக 300 போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா்.

தவிர, ஏற்கனவே தந்தை பெரியாா் அரசு தொழில்நுட்பக் கல்லூரியை சுற்றி 1 கிலோ மீட்டா் சுற்றளவுக்கு தடைசெய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டு, அப்பகுதியில் ட்ரோன்கள், ஆளில்லா விமானங்கள் பறக்கவிடவும் தடை விதிக்கப்பட்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.