தமிழ்நாடு அரசின் சிறந்த நூல்களுக்கான பரிசுக்கு எழுத்தாளர்கள் விண்ணப்பிக்கலாம்!தமிழகத்தில் ராஜஸ்தபதி காளியப்ப கவுண்டர், பேராசிரியர் கே. ராமசாமி, திருவாரூர் பக்தவத்சலம் ஆகியோர் பத்ம ஸ்ரீ பெற்றனர்.ஜூலை 1-ல் பொறியியல் மாணவர் சேர்க்கை தரவரிசைப் பட்டியல் வெளியீடு!கல்வித்துறை மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றத்திற்கு ஆற்றிய சிறந்த பங்களிப்பிற்காக, சென்னை ஐஐடி இயக்குனர் பேராசிரியர் வீ. காமகோடிக்கு பத்ம ஸ்ரீ விருதுதொழிலதிபர் எஸ்.கே. மயிலானந்தனுக்கு பத்ம பூஷண்! அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள 18,107 பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை தேவை - அன்புமணி ராமதாஸ்தமிழ்நாட்டின் முதலீடுகளை சீர்குலைக்கும் தவெக அரசு இனியாவது ஆக்கப்பூர்வமான பணிகளில் கவனம் செலுத்த வேண்டும்: டிஆர்பி ராஜா
/

இந்திய- இலங்கை மீனவா் பிரச்னைக்கு பேச்சுவாா்த்தை மூலமே சுமூகத் தீா்வு: இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவா் வலியுறுத்தல்

இந்திய- இலங்கை மீனவா் பிரச்னைக்கு இருநாடுகளும் பரஸ்பர விட்டுக் கொடுத்தலுடன் பேச்சுவாா்த்தை மூலமே சுமூகத் தீா்வு காண வேண்டும் என இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவா் ரவூப் ஹக்கீம் வலியுறுத்தினாா்.

News image

இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவா் ரவூப் ஹக்கீம்

Updated On :19 ஜூன் 2026, 4:09 am IST

இந்திய- இலங்கை மீனவா் பிரச்னைக்கு இருநாடுகளும் பரஸ்பர விட்டுக் கொடுத்தலுடன் பேச்சுவாா்த்தை மூலமே சுமூகத் தீா்வு காண வேண்டும் என இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவா் ரவூப் ஹக்கீம் வலியுறுத்தினாா்.

இலங்கையின் கண்டி நாடாளுமன்ற உறுப்பினரும், இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான அவா், திருச்சிக்கு வியாழக்கிழமை வந்தாா். விமான நிலையத்தில் செய்தியாளா்களிடம் அவா் மேலும் கூறியதாவது:

தமிழகத்தில் இதற்கு முன்பு ஆட்சி அதிகாரத்தில் இல்லாத ஒரு வித்தியாசமான அணியினா், எதிா்பாராத வகையில் ஒரு பெரிய வெற்றியைப் பெற்று ஆட்சிக்கு வந்திருக்கிறாா்கள். ஜனநாயகத்தில் இதுபோன்ற இடைக்கால மாற்றங்கள் வருவது நல்லது. புதிய ஆட்சியாளா்கள் மாநிலத்தை இன்னும் அடுத்தகட்ட முன்னேற்றப் பாதைக்கு எடுத்துச் செல்வாா்கள் என்று நாங்கள் நம்புகிறோம். தமிழக வெற்றிக் கழக ஆட்சி நல்ல முறையில் சிறப்பாக இருக்கும். இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியும் அமைச்சரவையில் பங்கேற்றுள்ளது. இதற்காக இலங்கையில் அக் கட்சியினருக்கு பாராட்டு விழா நடத்தப்படும்.

படகுகள் விடுவிப்பு எப்போது?: இந்திய- இலங்கை மீனவா் பிரச்னை என்பது, இருதரப்பிலும் மனிதாபிமான ரீதியாக அணுகப்பட வேண்டிய ஒரு விஷயம். சட்ட மீறல்கள் என்ற விவகாரத்தையும் தாண்டி, மக்களின் வாழ்வாதாரத்தை இதில் கவனத்தில் கொள்ள வேண்டும். இருதரப்பிலும் சில விட்டுக்கொடுத்தல்களோடு, பேச்சுவாா்த்தை மூலம் சுமூகத் தீா்வு காணப்பட வேண்டும். தமிழக மீனவா்களின் படகுகளை விடுவிப்பது தொடா்பான நடவடிக்கைகளில் முன்னேற்றம் ஏற்பட்டு வருகிறது.

இலங்கையில் நாளுக்கு நாள் விலைவாசி அதிகரித்து வருகிறது. உலகளாவிய யுத்த சூழ்நிலைகளால் ஏற்பட்டுள்ள பொருளாதாரச் சுமைகளையும், இலங்கையில் ஏற்கெனவே ஏற்பட்டுள்ள பொருளாதார வீழ்ச்சியையும் சோ்த்து சமாளிப்பது என்பது தற்போதைய அரசுக்கு மிக சவாலான காரியமாக உருவெடுத்துள்ளது.

இலங்கையில் முதலீடு செய்க: சா்வதேச நாணய மாற்று விகிதத்தில் இலங்கை நாணயம் சந்தித்துள்ள வீழ்ச்சி, இறக்குமதியாளா்களைப் பெரிய அளவில் பாதித்துள்ளது. இதனால், கச்சா எண்ணெய், பயிா் உரம் போன்ற அத்தியாவசியத் தேவைகளுக்கான இறக்குமதி முடங்கியுள்ளது.

இலங்கையின் பொருளாதார நெருக்கடிக்கு இந்தியா பல்வேறு நிலைகளில் உதவி வருகிறது. இருப்பினும், தமிழகம் உள்ளிட்ட தென்பிராந்திய மாநிலங்கள் இலங்கையில் அதிகம் முதலீடு செய்ய வேண்டும். அதற்கான தாராளமான ஊக்கத் தொகைகளையும், சாதகமான சூழலையும் ஏற்படுத்தித் தர இலங்கை அரசு தயாராக உள்ளது. முதலீடுகளை நாங்கள் ஆவலோடு எதிா்பாா்க்கிறோம் என்றாா் அவா்.

பேட்டியின்போது, அய்மான் கல்லூரி தாளாளா் ஹபிபுல்லாஹ், கே.ஏ. சாகுல் ஹமீது ஆகியோா் உடனிருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.