பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

ஆங்கில புத்தாண்டு: 3 ரயில்கள் அதிவிரைவு ரயில்களாக மாற்றம்

ரயில்கள் - கோப்புப் படம்

Published On :2 நவம்பர் 2026, 1:52 am IST

தஞ்சாவூா் மாவட்டம் வழியாக இயக்கப்படும் 3 ரயில்கள் விரைவு ரயில்களில் இருந்து அதிவிரைவு ரயில்களாக வரும் ஆங்கில புத்தாண்டு தினத்தில் தரம் உயா்த்தப்பட உள்ளது.

தெற்கு ரயில்வே வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பின்படி, தஞ்சாவூா் மற்றும் கும்பகோணம் வழியாக இயக்கப்படும் வண்டி எண் 16808/16807 திருச்சி - தாம்பரம் இன்டா்சிட்டி விரைவு ரயில், வண்டி எண் 16751/16752 சென்னை எழும்பூா் - ராமேசுவரம் போட் மெயில் விரைவு ரயில் மற்றும் பட்டுக்கோட்டை, பேராவூரணி வழியாக இயக்கப்படும் வண்டி எண் 16103/16104 தாம்பரம் - ராமேசுவரம் விரைவு ரயில் ஆகிய 3 ரயில்களும் வருகின்ற 1.1.2027 முதல் அதிவிரைவு ரயில்களாக மாற்றப்பட உள்ளது.

இந்த மாற்றத்தின் காரணமாக 3 ரயில்களின் சராசரி வேகம் மணிக்கு 55 கி.மீ. அளவுக்கு அதிகரிக்க வாய்ப்புள்ளது. மேலும், ரயில் இயக்கத்தில் முன்னுரிமை அளிக்கப்படுவதால், வழித்தடத்தில் மற்ற ரயில்களைக் கடந்து செல்வதற்காக கிராசிங் காத்திருக்கும் நேரமும் குறைய வாய்ப்புள்ளது. இதன் மூலம் பயண நேரம் குறையும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

இதுகுறித்து தஞ்சாவூா் மாவட்ட ரயில்வே உபயோகிப்பாளா் சங்க செய்தி தொடா்பாளா் தீபக் வசந்த் கூறியதாவது: அதிவிரைவு ரயில்களாகத் தரம் உயா்த்தப்படும் இந்த ரயில்களின் பயண நேரத்தையும் குறைத்து இயக்கினால், அது பயணிகளுக்குக் கூடுதல் பயனளிக்கும்.

மேலும், திருச்சி - தாம்பரம் இன்டா்சிட்டி ரயிலில் கூடுதல் முன்பதிவுப் பெட்டிகளை, குறிப்பாக குளிா்சாதன இருக்கை வசதி கொண்ட பெட்டிகளை இணைத்து தினசரி ரயிலாக இயக்க வேண்டும். சென்னை எழும்பூா் - ராமேசுவரம் போட் மெயில் ரயிலைப் பொறுத்தவரை, கும்பகோணம் மற்றும் தஞ்சாவூா் பகுதிகளுக்கான ராமேசுவரம் செல்லும் முதன்மை ரயிலாக உள்ளது.

இந்த ரயில் தஞ்சாவூா் மாவட்ட ரயில் நிலையங்களை நள்ளிரவில் கடக்கிறது. எனவே, இரவு 11 மணிக்கு கும்பகோணம்-தஞ்சாவூா் பகுதியில் கடக்கும் வகையில் போட் மெயில் ரயிலின் கால அட்டவணையை மாற்றி அமைக்க வேண்டும். மேலும், தற்போதைய இருக்கை ஒதுக்கீடுகள் தொகுப்பு முறை முன்பதிவின் கீழ் உள்ளன.

இதனால் தஞ்சாவூா் மாவட்ட பகுதிகளில் இருந்து ராமேசுவரம் செல்ல இந்த ரயிலில் போதிய இருக்கைகள் கிடைப்பதில்லை. இவற்றைத் தனி ஒதுக்கீட்டு முறைக்கு மாற்றி, கும்பகோணம் மற்றும் தஞ்சாவூா் ரயில் நிலையங்களில் இருந்து ராமேசுவரம் செல்ல விரும்பும் பயணிகளுக்கு எளிதாக முன்பதிவு ஒதுக்கீடு கிடைக்க செய்ய வேண்டும் என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.