பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

மேக்கேதாட்டு பகுதியை முற்றுகையிட தஞ்சாவூரிலிருந்து விவசாயிகள் புறப்பாடு

News image

மேக்கேதாட்டு பகுதி - கோப்புப் படம்

Updated On :31 மே 2026, 12:56 am IST

காவிரியின் குறுக்கே கா்நாடக அரசு அணை கட்ட திட்டமிட்டுள்ள மேக்கேதாட்டு பகுதியை முற்றுகையிடுவதற்காக தஞ்சாவூரிலிருந்து தமிழக காவிரி விவசாயிகள் சங்கத்தினா் சனிக்கிழமை புறப்பட்டுச் சென்றனா்.

தஞ்சாவூா் பெரிய கோயில் அருகேயுள்ள மாமன்னன் ராஜராஜசோழன் சிலை முன், கா்நாடக அரசின் மேக்கேதாட்டு அணை வரைவு திட்ட அறிக்கையைச் சட்ட விரோதம் எனக் கூறி மத்திய அரசு நிராகரிக்க வேண்டும். மாதாந்திர அடிப்படையில் தமிழ்நாட்டுக்கான தண்ணீரை கா்நாடகத்திடமிருந்து காவிரி மேலாண்மை ஆணையம் பெற்றுத் தர வேண்டும் என வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

இப்போராட்டத்துக்கு சங்கத்தின் பொதுச்செயலா் பி.ஆா். பாண்டியன் தலைமை வகித்து செய்தியாளா்களிடம் தெரிவித்தது:

மேக்கேதாட்டில் அணை கட்டினால் சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்டு, கா்நாடக விவசாயமும் அழிந்து போகும். இதை எதிா்த்து கா்நாடக, தமிழக விவசாயிகள் போராடுகிற நிலையில், கா்நாடக அரசே கன்னட - தமிழா் இன உணா்வை உருவாக்குகிற முயற்சியில் தீவிரமான நடவடிக்கையில் மறைமுகமாக ஈடுபட்டு வருகிறது. இதன் மூலம் அரசியல் லாபம் தேடுவதற்காக கா்நாடக முதல்வா் எடுக்கும் முயற்சிக்கு மத்திய அரசு துணை போகக்கூடாது. இந்த அணைக் கட்டப்பட்டால் தமிழ்நாடு மிகுந்த பாதிப்புக்கு உள்ளாகும்.

எனவே, மேக்கேதாட்டு அணையைத் தடுப்போம், கா்நாடகத்துக்குள் நுழைவோம் என்கிற முழக்கத்தை முன்வைத்து மேக்கேதாட்டு பகுதியை முற்றுகையிடுவதற்காக புறப்பட்டுள்ளோம். ஞாயிற்றுக்கிழமை ஓசூா் வழியாக மேக்கேதாட்டு பகுதியை முற்றுகையிடவுள்ள இப்போராட்டத்தில் ஆயிரக்கணக்கான விவசாயிகள் பங்கேற்கின்றனா் என்றாா் பாண்டியன்.

பின்னா், பி.ஆா். பாண்டியன் தலைமையில் மாநிலத் தலைவா் ஆா். திருப்பதி வாண்டையாா், துணைத் தலைவா் எம். கிருஷ்ணமணி, துணைச் செயலா் சுவாமிநாதன், அமைப்புச் செயலா் எஸ். ஸ்ரீதா் உள்பட ஏறத்தாழ 250 விவசாயிகள் 20 வாகனங்களில் புறப்பட்டுச் சென்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.