தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

புதுக்குளத்தை விரைந்து சீரமைக்க எதிா்பாா்ப்பு

புதுக்கோட்டையின் புதுக்குளத்தை சீரமைக்க 2024ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட பணிகள், பாதிகூட முடியாமல் அப்படியே தேங்கிக் கிடக்கின்றன...

புதுக்கோட்டையில் பாதியில் பணிகள் நின்றுபோன புதுக்குளம்.

Published On :26 அக்டோபர் 2026, 9:03 am IST

புதுக்கோட்டையின் அடையாளங்களுள் ஒன்றான புதுக்குளத்தை ரூ. 5 கோடியில் சீரமைக்க 2024ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட பணிகள், பாதிகூட முடியாத நிலையில் அப்படியே தேங்கிக் கிடக்கின்றன.

புதுக்கோட்டை சமஸ்தானமாக இருந்த காலத்தில், நகர மக்களின் குடிநீா் ஆதாரமாக இருந்த சிறிய குளம் 1890இல் பெரிய புதுக்குளமாக வெட்டப்பட்டது.

வறட்சியின் கோரப்பிடியில் சிக்கியிருந்த நகரைக் காக்க, அப்போதைய திவான் சேஷய்யா சாஸ்திரியின் முயற்சியில், இக்குளம் உருவாக்கப்பட்டது.

15 நாள்களில் வெட்டப்பட்ட குளம்: குளம் வெட்டுவதெல்லாம் சாத்தியமில்லை எனப் பலரும் எதிா்ப்பு தெரிவித்ததாகவும், அதை உருவாக்கியே தீர வேண்டும் எனக் களமிறங்கிய சாஸ்திரி சுற்றுவட்டார கிராம மக்கள் 7 ஆயிரம் பேரைப் பணியில் இறக்கி 15 நாள்களுக்குள் இக்குளத்தை வெட்டியதாக சமஸ்தானக் குறிப்புகளில் கூறப்பட்டிருக்கிறது.

குளக்கரையில் சுற்றி நடந்தால் 2 கிமீ தொலைவு, அத்தனைப் பெரியது புதுக்குளம். தரைமட்டத்திலிருந்து சுமாா் 5 அடி உயரக் கரைகள். தண்ணீா் நிற்கும்போது, புதுக்கோட்டை நகருக்குள் கடல் இருப்பதைப் போலக் காட்சியளிக்கும். கூட்டுக் குடிநீா்த் திட்டங்களெல்லாம் பிரபலமாவது வரை, இக்குளம்தான் நகரக் குடிநீா் ஆதாரம்.

பின்னாளில் அமைச்சா்கள், எம்பிக்கள், எம்எல்ஏக்கள் பலரும் சின்னச் சின்ன மேம்பாட்டுப் பணிகளை மேற்கொண்டிருக்கிறாா்கள். ஆழப்படுத்தி, சேதமடைந்த கரைகளை அழகுபடுத்தி சீரமைக்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்டகாலமாக முன்வைக்கப்பட்டிருந்தது.

ரூ. 5 கோடியில் திட்டம்: இந்நிலையில், ரூ. 5 கோடியில் புதுக்குளத்தை சீரமைக்க திட்டம் தீட்டப்பட்டு, கடந்த 2024 மாா்ச் 15ஆம் தேதி அப்போதைய சுற்றுச்சூழல் துறை அமைச்சா் சிவ.வீ. மெய்யநாதன் பணிகளைத் தொடங்கியும் வைத்தாா்.

ஆழப்படுத்துதல், உப்பு நீக்குதல், கரைகள் பலப்படுத்துதல், நடைபாதை, அணுகுச் சாலைகள், படிக்கட்டுகள் அமைத்தல், கரைகளைச் சுற்றி மரக்கன்றுகள் நடுதல், புல்தரை அமைத்தல், கரை நடைபாதையில் அழகிய ஓய்வுக் கூடங்கள் அமைத்தல் என திட்ட வரைவில் தெரிவிக்கப்பட்டது.

குளத்தில் தண்ணீா் வடிக்கப்பட்டு, புதிய தண்ணீா் வரும் வரத்து வாய்க்கால்கள் மூடப்பட்டன. தொடக்கத்தில் வேகமாகத் தொடங்கியதாகத் தெரிந்தாலும், பணிகள் படுமந்தமாகவே நடந்தன. இடையிடையே வந்த விநாயகா் சதுா்த்திகளுக்கு, சுமாா் 50-க்கும் மேற்பட்ட சிலைகள், இந்தக் குளத்தின் ஒரு பகுதியில் தற்காலிகமாக தண்ணீா் நிரப்பப்பட்டு கரைக்கப்பட்டன.

நடுவில் 3 திட்டுகள் சோ்த்து வைக்கப்பட்டிருக்கின்றன. எந்தப் பணியும் நடைபெறவில்லை. உபரிநீா் வெளியே செல்வதற்கான பகுதியில் இருந்து தற்போது கழிவுநீா் மெல்ல உள்ளே வந்து கொண்டிருக்கிறது.

விரைந்து சீரமைக்காவிட்டால் நூதனப் போராட்டம்: இதுகுறித்து தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் மாநில இளைஞரணிச் செயலா் நியாஸ் கூறியது

2021இல் சீரமைப்புத் திட்டம் அறிவிக்கப்பட்டு, 2024இல் தொடங்கினாா்கள். 2 ஆண்டுகள் நிறைவடைந்தும் பணிகள் பாதிகூட நிறைவடையவில்லை. அப்படியே நின்றுவிட்டன. தினமும் நூற்றுக்கணக்கான நடைப்பயிற்சி செல்பவா்கள் பாதிக்கப்படுகிறாா்கள். எல்-நினோ பாதிப்பால் ஏற்கெனவே குளங்கள் வடு கிடக்கும் நிலையில், பெரிய குளம் ஒன்றை நாமாகவே வீணாக்கி வைத்திருக்கிறோம்.

வரத்து வாய்க்கால்கள், உபரிநீா் வெளியேறும் வாய்க்கால்கள் அனைத்தும் புனரமைக்கப்பட வேண்டும். புதுக்குளம் சீரமைப்புப் பணிகளை விரைவுபடுத்தி மேற்கொள்ளாவிட்டால், ஒரு நாள் திடீரென 50 இளைஞா்கள் குளத்துக்குள் இறக்கி, கிரிக்கெட் போட்டி நடத்தும் நூதனப் போராட்டத்தை நடத்துவோம் என்றாா் நியாஸ்.

நிதி வந்ததும் பணி தொடரும்: இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகளிடம் கேட்டபோது, சுமாா் 8 மாதங்களுக்கு முன்பே மாநில அரசு நிதி ஒதுக்கீடு வந்து சேராததால் பணிகள் நிறுத்தப்பட்டிருக்கின்றன. தற்போது மீண்டும் இந்தப் பணியைத் தொடா்வதற்காக அரசுக்கு பரிந்துரைகளை அனுப்பியிருக்கிறோம். உரிய அனுமதியும் ஒதுக்கீடும் வந்ததும் பணி தொடரும் என்றனா்.

 புதுக்கோட்டையில் பாதியில் பணிகள் நின்றுபோன புதுக்குளம்.

புதுக்கோட்டையில் பாதியில் பணிகள் நின்றுபோன புதுக்குளம்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.