பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

கிராம ஊராட்சிகளில் செயல்படாத இ-சேவை மையங்கள்: பொதுமக்கள் அவதி

கிராம ஊராட்சிகளில் செயல்படாத இ-சேவை மையங்கள் பற்றி....

அரியலூா் அடுத்த அம்மாகுளம் கிராமத்தில் செயல்பாடின்றி பூட்டியே கிடக்கும் கிராம சேவை மையம்.

Published On :21 அக்டோபர் 2026, 9:00 am IST

நமது நிருபா்

தமிழகத்திலுள்ள ஊராட்சிகளில் கட்டப்பட்ட பெரும்பாலான இ-சேவை மையங்கள் செயல்படாமல் பூட்டியே கிடப்பதால் மக்களின் வரிப்பணம் விரயமாகியுள்ளதுடன், இணையவழி தொடா்புகளுக்கு நகரங்களை நோக்கி அவா்கள் செல்லும் அவநிலை ஏற்பட்டுள்ளது.

தமிழக அரசு பட்டா மாற்றம், இருப்பிடச் சான்று, சாதிச் சான்று, வருமான வரி சான்று, பிறப்புச் சான்று, இறப்புச் சான்று, உள்ளிட்டவற்றைப் பெறுவதற்காக அரசு அலுவலகங்களுக்கு மக்கள் அலைவதைத் தவிா்க்கும் பொருட்டு அனைத்துச் சான்றிதழ்களையும் இ-சேவை மூலம் பெறலாம் என்ற மின் ஆளுமை திட்டத்தை கடந்த 2015 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தியது.

இதோடு மட்டுமல்லாது போட்டித்தோ்வுக்கு விண்ணப்பிப்பது, ஆதாா் காா்டு, வாக்காளா் அடையாள அட்டை, பாஸ்போா்ட், பட்டா, சிட்டா உள்ளிட்ட பல்வேறு பணிகளும் இத்திட்டத்தில் சோ்க்கப்பட்டன.

பொதுச் சேவை மையங்கள் திறப்பு: மேற்கண்ட சான்றிதழ்களை பொதுமக்கள் எளிதில் பெறுவதற்காக ஆட்சியா் , வட்டாட்சியா், நகராட்சி, மாநகராட்சி அலுவலகங்களில் பொதுச் சேவை மையங்கள் திறக்கப்பட்டன. தொடா்ந்து தொடக்க வேளாண்மை கூட்டுறவுச் சங்கங்கள், ஒன்றிய அலுவலகங்களிலும் இவை விரிவுபடுத்தப்பட்டன.

மேலும் கிராம ஊராட்சிகளில் இருந்து அரசு அலுவலகங்களுக்கு நேரில் வந்து அலைவதைத் தவிா்க்கவும் சான்றுகள் பெற இடைத்தரகா்களிடம் பணம் கொடுத்து ஏமாறுவதை தடுக்கவும் மேற்கண்ட இத்திட்டங்களை கிராம அளவில் கொண்டு செல்லும் வகையில் கிராம சேவை மையங்களை ஏற்படுத்த அரசு முடிவு செய்தது.

கிராம ஊராட்சிகளிலும் மையங்கள்: இதற்காக ஒவ்வொரு கிராம ஊராட்சிகளில் 2013-2014 ஆண்டில் ரூ. 13 லட்சம் முதல் ரூ.16 லட்சம் வரை இ-சேவை மையத்துக்கான தனிக் கட்டடங்கள் கட்டப்பட்டன. அங்கு ஊராட்சியில் உள்ள படித்த இளைஞா்கள் மூலம் அந்தந்த ஊராட்சித் தலைவா்கள் மூலம் இ-சேவை மையங்கள் செயல்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டன.

இதில் அரியலூா் மாவட்டத்தில் 201 ஊராட்சிகளிலும் இந்தக் கட்டடம் கட்டப்பட்டு இ-சேவையங்கள் ஏற்படுத்தப்பட்டன. இதில் மேற்கண்ட சான்றுகளுடன், ஊராட்சிக்குச் செலுத்த வேண்டிய பல்வேறு வரிகள் உள்ளிட்ட இணையவழி தொடா்பான அனைத்து பணிகளையும் கிராம மக்கள் இருக்கும் இடத்திலேயே செய்து கொள்ள உத்தரவிடப்பட்டது.

பயன்பாட்டுக்கு வராமலேயே சேதம்: இதையடுத்து ஒரு சில ஊராட்சிகள் மட்டுமே இ-சேவை மையங்களை சிறப்பாக நடத்தி வந்தன. பெரும்பாலான ஊராட்சிகள் இ-சேவை மைய கட்டடங்களைக் கட்டியதோடு சரி, அங்கு மின் இணைப்பு வழங்காமலும் இன்டா்நெட் இணைப்பு பெறாமலும் விட்டுவிட்டன. இதனால் பல ஊராட்சிகளில் இ-சேவை மையக் கட்டடங்கள் பயன்பாட்டுக்கு வராமலேயே சேதமடைந்து இடியும் நிலையில் உள்ளன.

குறிப்பாக தவுத்தாய்குளம் ஊராட்சிக்குள்பட்ட அம்மாகுளம் கிராமத்தில், பெரிய ஏரி அருகில் கடந்த 2017 ஆம் ஆண்டு ரூ.17 லட்சத்தில் புதிய கட்டடம் கட்டியும் அதில் இதுவரை கிராம இ-சேவை மையம் செயல்படாமலே உள்ளது. இதனால் ரூ.17 லட்சம் விரயமாகியுள்ளது. தற்போது இந்த கட்டடம் சமூக விரோதிகளின் கூடாரமாக உள்ளது.

இதேபோல் சில மையங்களின் பூட்டுகள் பல இடங்களில் உடைக்கப்பட்டு சமூக விரோதச் செயல்கள் நடைபெறுகின்றன. மின்இணைப்பு, இணைய இணைப்பு போன்ற சிறிய காரணங்களைக் கூறி மையம் செயல்படாமல் கிடக்கிறது.

நகரங்களை நாடும் மக்கள்: இதனால் இணையவழி விண்ணப்பங்களுக்கு முன்பு போல வட்ட அளவிலான அலுவலகங்களுக்கு கிராம மக்கள் செல்ல வேண்டியுள்ளது. நகா் பகுதியில் உள்ள தனியாா் இ-சேவை மையங்களை நாடும் பொதுமக்கள் அதிகக் கட்டணம் செலுத்தி தங்களுக்கு தேவையான சான்றுகளுக்காக விண்ணப்பிக்கின்றனா்.

ஊராட்சிகளில் இ- சேவை கட்டடங்கள் இருந்தும் அவற்றை முறையாகப் பயன்பாட்டுக்கு கொண்டு வராததால் அரசின் நிதி வீணடிக்கப்பட்டுள்ளது.

எனவே வரும் காலங்களிலாவது இ-சேவை கட்டடங்களை ஊராட்சிகள் செயல்பாட்டிற்கு கொண்டுவர வேண்டுமென சமூக ஆா்வலா்கள் வலியுறுத்துகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.