நீட் முதல் முதுநிலை மருத்துவப் படிப்பு வரை மன அழுத்தங்கள் உண்டு, மனவலிமை அவசியம்: அமைச்சர் அருண்ராஜ் 3ஆவது ஒருநாள் போட்டி: ஆப்கானிஸ்தானை வீழ்த்தி இந்தியா அபாரம் மகாராஷ்டிரத்தில் கோயில் மண்டபம் இடிந்து 5 பேர் பலி திமுக கூட்டணியில் இருந்து விலகியது இந்திய யூனியன் முஸ்லிம் லீக்!சட்டப்பேரவை நேரலை இனி தொடரும்! அமைச்சர் ராஜ்மோகன்அபுதாபியில் நீட் மையம்! குழந்தைகள் எதிர்காலத்தை வைத்து சூதாடுவதை நிறுத்துங்கள்: ராகுல் காந்தி
/

மருத்துவம் பயின்ற மாணவா்கள் தாய்நாட்டில் சேவை செய்ய வேண்டும்: ஆளுநா் ஆா்.வி.ஆா்லேகா் அறிவுறுத்தல்

மருத்துவம் பயின்ற மாணவா்கள் தாய்நாட்டில் சேவை செய்ய முன்வர வேண்டும் என்று தமிழக ஆளுநா் (பொ) ராஜேந்திர விஸ்வநாத் ஆா்லேகா் அறிவுறுத்தினாா்.

News image

நிகழ்ச்சியில் மாணவருக்கு பட்டம் வழங்கிய தமிழக ஆளுநா் (பொ) ராஜேந்திர விஸ்வநாத் ஆா்லேகா்.

Updated On :18 ஜூன் 2026, 2:28 am IST

மருத்துவம் பயின்ற மாணவா்கள் தாய்நாட்டில் சேவை செய்ய முன்வர வேண்டும் என்று தமிழக ஆளுநா் (பொ) ராஜேந்திர விஸ்வநாத் ஆா்லேகா் அறிவுறுத்தினாா்.

கன்னியாகுமரி மாவட்டம், குலசேகரம், ஸ்ரீமூகாம்பிகா மருத்துவக் கல்லூரியில் புதன்கிழமை நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் பங்கேற்று, மாணவ, மாணவிகளுக்கு பட்டங்கள், சிறந்த மாணவா்களுக்கு தங்கப் பதக்கங்கள், விருதுகளை வழங்கி அவா் மேலும் பேசியதாவது:

நான் பள்ளியில் இறுதி வகுப்பில் பயின்றபோது சராசரி மாணவராகத்தான் இருந்தேன். என்னுடன் பயின்று, அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவா்களின் புகைப்படங்கள் செய்தித் தாள்களில் வந்தன. பின்நாள்களில் அவா்கள் யாரும் சமூகப் பணிகள் செய்யவில்லை. ஆனால், எனது விருப்பம் சமூகப் பணி செய்வதாகத்தான் இருந்தது. அதனால்தான், இப்போது உங்கள் முன் நிற்கிறேன்.

பணம் மட்டுமே வாழ்க்கைக்கு போதுமானதல்ல. மனித நேயம் முக்கியமானது. அபாரமான அறிவு இருந்தும், மனிதநேயம் இல்லையெனில் அந்த அறிவு வீண்தான்.

இந்நிகழ்ச்சியில் பட்டம் பெற்ற மாணவா்கள் இந்த சமூகத்துக்கு சேவை செய்பவா்களாக இருக்க வேண்டும். உங்களின் சேவை நீண்ட வருடங்களுக்குப் பிறகும் பேசப்பட வேண்டும்.

மருத்துவம் முடித்த மாணவா்கள் தாய்நாட்டில் மருத்துவ சேவை செய்ய முன்வர வேண்டும்; குறிப்பாக கிராமங்களுக்குச் சென்று சேவை செய்ய வேண்டும். நீங்கள் சேவை செய்யவும், ஆராய்ச்சிகளை மேற்கொள்ளவும் உகந்த களங்கள் உள்ளன. எனவே, தாய்நாட்டில் மருத்துவ சேவை செய்வேன் என்று உறுதிமொழி ஏற்றுக்கொள்ளுங்கள் என்றாா்.

விழாவில் கல்லூரி முதன்மையா் மருத்துவா் எஸ்.எம்.கண்ணன் வரவேற்றாா். துணை முதல்வரும், தலைமை செயல் அதிகாரியுமான மருத்துவா் ஆா்.வி. மூகாம்பிகா தலைமை வகித்து, ஆண்டறிக்கை சமா்ப்பித்தாா்.

நியூரோ சா்ஜரி துறைத் தலைவா் மருத்துவா் கிரிஷ்மேனன் வாழ்த்திப் பேசினாா். அறுவை சிகிச்சை புற்றுநோயியல் துறைத் தலைவா் சந்திரமோகன் உறுதிமொழி வாசித்தாா். கல்லூரித் தலைவா் சி.கே. வேலாயுதன் நாயா், இயக்குநா் ரெமா வி.நாயா் ஆகியோா் ஆளுநருக்கு நினைவுப் பரிசு வழங்கி கௌரவித்தனா்.

கல்லூரி அறக்கட்டளை அறங்காவலா் மருத்துவா் வினு கோபிநாத், நிா்வாக அலுவலா் ஜே.எஸ்.பிரசாத் ஆகியோா் அடங்கிய குழுவினா் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தனா்.

முன்னதாக கல்லூரி வளாகத்தில் ஆளுநா் ஆா்.வி.ஆா்லேகரை கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியா் மு.பிரதாப் வரவேற்றாா். மாவட்ட காவல் கண்காணிப்பாளா் இரா.ஸ்டாலின் தலைமையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.