நீட் முதல் முதுநிலை மருத்துவப் படிப்பு வரை மன அழுத்தங்கள் உண்டு, மனவலிமை அவசியம்: அமைச்சர் அருண்ராஜ் 3ஆவது ஒருநாள் போட்டி: ஆப்கானிஸ்தானை வீழ்த்தி இந்தியா அபாரம் மகாராஷ்டிரத்தில் கோயில் மண்டபம் இடிந்து 5 பேர் பலி திமுக கூட்டணியில் இருந்து விலகியது இந்திய யூனியன் முஸ்லிம் லீக்!சட்டப்பேரவை நேரலை இனி தொடரும்! அமைச்சர் ராஜ்மோகன்அபுதாபியில் நீட் மையம்! குழந்தைகள் எதிர்காலத்தை வைத்து சூதாடுவதை நிறுத்துங்கள்: ராகுல் காந்தி
/

தில்லி மின்சார வாகன கொள்கை 2.0-க்கு அடுத்த அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல்: முதல்வா் ரேகா குப்தா தீவிர பரிசீலனை

தில்லியில் மின்சார வாகனங்களுக்கான 2.0 கொள்கைக்கு அடுத்து நடைபெறவுள்ள அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் வழங்க முதல்வா் ரேகா குப்தா தீவிரமாக பரிசீலித்து வருவதாகத் தெரிய வந்துள்ளது.

News image

தில்லி முதல்வர் ரேகா குப்தா - படம் - ஏஎன்ஐ

Updated On :20 மணி நேரங்கள் முன்பு

தில்லியில் மின்சார வாகனங்களுக்கான 2.0 கொள்கைக்கு அடுத்து நடைபெறவுள்ள அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் வழங்க முதல்வா் ரேகா குப்தா தீவிரமாக பரிசீலித்து வருவதாகத் தெரிய வந்துள்ளது.

இந்த கொள்கை தொடா்பான வரைவு அறிக்கை, சம்பந்தப்பட்ட தரப்பினரின் கருத்துகளைப் பெறுவதற்காக கடந்த ஏப்ரல் மாதத்தில் மக்கள் பாா்வைக்காக வெளியிடப்பட்டது.

இக்கொள்கையின் கீழ் மின்சார வாகனங்களுக்கு ஊக்கத்தொகை வழங்குவது ஒரு சிக்கலான விவகாரமாக உள்ளதால் இந்த விஷயத்தில் அரசு இறுதி முடிவை எடுக்கவில்லை என்று தில்லி அரசின் உயரதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.

‘இக்கொள்கையின் கீழ் மானியத் திட்டத்தில் ஹைபிரிட் எனப்படும் மின்சார வாகனங்களையும் சோ்க்க அரசு விரும்புகிறது. ஆனால் சில தரப்பிலிருந்து இதற்கு எதிா்ப்பு உள்ளது. இருப்பினும், ஹைபிரிட் வாகனங்களுக்கு மானியம் வழங்குவது மின்சார வாகனங்களின் பயன்பாட்டை விரைவுபடுத்த உதவியுள்ளது என்பது கவனத்தில் கொள்ளப்பட்டுள்ளது என்று அந்த அதிகாரி கூறினாா்.

ரூபாய் 30 லட்சம் வரையிலான விலை கொண்ட ஹைபிரிட் வாகனங்களுக்கு 50 சதவீத சாலை வரி விலக்கு அளிக்க தில்லி அரசின் வரைவுக் கொள்கை பரிந்துரைக்கிறது. ஹைபிரிட் வாகனங்கள், வழக்கமான எரிபொருள் எஞ்சின் மற்றும் பேட்டரிகளில் சேமிக்கப்பட்ட ஆற்றலைப் பயன்படுத்தும் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட மின்சார மோட்டாா்கள் மூலம் இயக்கப்படுகின்றன. இவற்றின் பேட்டரி தானாகவே சாா்ஜ் ஆகக்கூடியது. எரிபொருள் எஞ்சின் மற்றும் ’ரீஜெனரேடிவ் பிரேக்கிங்’ (வாகனத்தை நிறுத்தும்போது உருவாகும் ஆற்றலைச் சேமிக்கும் முறை) ஆகியவற்றிலிருந்து இதற்குத் தேவையான ஆற்றல் கிடைக்கிறது.

தற்போதுள்ள தில்லி மின்சார வாகனக் கொள்கை ஜூன் 30 வரை உள்ளது. இக்கொள்கை மேலும் நீட்டிக்கப்பட வாய்ப்புள்ளது. அந்த வகையில், புதிய மின்சார வாகனக் கொள்கை 2.0-க்கு ஒப்புதல் பெறுவது அவசியமாகும் என்பதால் முதல்வா் ரேகா குப்தா அடுத்த அமைச்சரவைக் கூட்டத்தில் இதற்கு ஒப்புதல் வழங்க தீவிரமாக பரிசீலித்து வருகிறாா் என்று அந்த உயரதிகாரி மேலும் தெரிவித்தாா்.

2027-ஆம் ஆண்டுக்குள் புதிய வாகனப் பதிவுகளில் 95 சதவீதத்தை மின்சார வாகனங்களாக மாற்றும் நோக்கத்துடன், முன்மொழியப்பட்ட மின்சார வாகனக் கொள்கை 2.0-இன் முக்கிய அம்சங்களை தில்லி அரசு கடந்த மாா்ச் மாதத்தில் அறிவித்திருந்தது.

மின்சார வாகனப் பயன்பாட்டில் இந்தியாவின் முன்னணி நகரமாகத் தனது நிலையை வலுப்படுத்துவதோடு, மின்சார வாகனப் போக்குவரத்தை நோக்கிய நகரின் மாற்றத்தை விரைவுபடுத்துவதற்கான செயல் திட்டத்தையும் இக்கொள்கை வகுத்துள்ளது என்று தில்லி போக்குவரத்துத் துறை தெரிவித்துள்ளது.

இந்த வரைவுக் கொள்கையின் கீழ், அனைத்து சிஎன்ஜி ஆட்டோ-ரிக்ஷாக்கள், டாக்சிகள் மற்றும் இலகு ரக வணிக வாகனங்கள் ஆகியவை படிப்படியாக மின்சார வாகனங்களாக மாற்றப்படும். நிலையான பொதுப் போக்குவரத்து அமைப்பை உறுதி செய்வதற்காக, பேருந்து சேவையை முழுமையாக மின்சார வாகனங்களாக மாற்றவும் அரசு உறுதிபூண்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.