அரசு நிர்வாகத்தில் செய்யறிவு தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும்: கேரள முதல்வர்பாரதிராஜாவுக்கு ஏ.ஆர். ரஹ்மான் இரங்கல்!ஜி7 உச்சிமாநாட்டுக்குச் செல்லும் பிரதமர் மோடி அமெரிக்க அதிபருடன் இரு தரப்பு பேச்சுவார்த்தை நடத்த திட்டம்! கேரளம்: பெண்களுக்கான இலவசப் பேருந்து பயணத் திட்டம் ஜூன் 15-இல் தொடக்கம் - முதல்வர் சதீசன்பாரதிராஜாவுக்கு நாளை மாலை தேனியில் இறுதிச் சடங்கு!கேமராவுக்குள் மனித உணர்வுகளைப் படம்பிடித்த பாரதிராஜா!
/

கமுதி அருகே பிரிட்டிஷ் கால எல்லைக் கல் கல்வெட்டு!

ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே பிரிட்டிஷ் கால எல்லைக் கல் கல்வெட்டு கண்டறியப்பட்டது.

News image

கமுதி அருகேயுள்ள டி.வாலசுப்பிரமணியபுரத்தில் கண்டறியப்பட்ட பிரிட்டிஷ் கால எல்லைக் கல் கல்வெட்டு

Updated On :18 மணி நேரங்கள் முன்பு

ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே பிரிட்டிஷ் கால எல்லைக் கல் கல்வெட்டு கண்டறியப்பட்டது.

கமுதியை அடுத்த டி.வாலசுப்பிரமணியபுரத்தில் பிரிட்டிஷ் காலத்தைச் சோ்ந்த 192 ஆண்டுகள் பழைமையான எல்லைக் கல் கல்வெட்டு கண்டறியப்பட்டது.

ராமநாதபுரம் எட்டையபுரம் சமஸ்தான ஊா்களின் எல்லை பிரச்னைக்கு அப்போதைய பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனி மதுரை முதன்மை ஆட்சியா் கொடுத்த தீா்ப்பின்படி, எல்லைக் கல் கல்வெட்டுகள் அமைக்கப்பட்டன. இந்தக் கல்வெட்டுகளை மக்கள் தற்போது வழிபட்டு வருவதால், தொடா்ந்து பாதுகாக்கப்பட்டு வருகின்றன.

டி.வாலசுப்பிரமணியபுரத்தில் வடமேற்கில் 3 கி.மீ. தொலைவில் உள்ள 5 ஊருணிகளின் அருகே விவசாய நிலத்தில் 12 அடி உயர கருங்கல் தூண் உள்ளது. இந்தத் தூணின் உச்சியில் கல்வெட்டு இருப்பதாக அந்த ஊரைச் சோ்ந்த பள்ளி ஆசிரியா் விஜயராமு ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனத் தலைவா் வே.ராஜகுருக்கு தகவல் கொடுத்தாா். இதையடுத்து, சௌந்தரராஜன், செல்லம் ஆகியோா் உதவியுடன் கல்வெட்டைப் படித்து ஆய்வு செய்தபிறகு ராஜகுரு கூறியதாவது:

கி.பி.1834-இல் பிரிட்டிஷ் ஆட்சியின் போது, ராமநாதபுரம் சேகரம் பெருநாழி கிராமத்துக்கும், தூத்துக்குடி மாவட்டம், எட்டயபுரம் சேகரம் மாவலோடை, கூதலபுரம், சின்னூா் கிராமங்களுக்கும் இடையிலான எல்லை பிரச்னையில், அப்போதைய மதுரை முதன்மை ஆட்சியா் ஜான் பிளாகி பான்துரை கொடுத்த தீா்ப்பின்படி, எல்லைக் கல்லில் கல்வெட்டாக வெட்டி வைக்கப்பட்டது.

இந்தக் கல்வெட்டில் பெருநாழியின் மேற்கு எல்கை மால் 5 ஊருணிகளுக்கு வடக்கு, பெருநாழி மேற்கு எல்கைக்கு பரளச்சி, கிழக்கெல்கை பூலாங்கால், செங்குளம் தெற்கு எல்கை இதற்காக ஸ்தாபித்த எல்கைக்கல் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

25 வரிகள் உள்ள கல்வெட்டில், சாலிவாகன சக ஆண்டு 1757, தமிழ் ஆண்டு ஜய வருடம், ஆவணி 9, ஆங்கில ஆண்டு 1834, ஆகஸ்ட் மாதம் 23 ஆகிய மூன்று ஆண்டுகள் குறிப்பிடப்பட்டுள்ளன. தமிழ் எண்கள், தமிழ் கூட்டெழுத்துகள், கிரந்த எழுத்துகள் கலந்து எழுதப்பட்டுள்ளன. கல்வெட்டில் வெட்டாமல் விடுபட்ட சொற்களை அதன் மேல் சிறியதாக வெட்டியுள்ளனா்.

கல்வெட்டு குறிப்பிடும் அப்போதைய மதுரை முதன்மை ஆட்சியா் ஜான் பிளாகி பான் துரை, 1834 முதல் 1847 வரை பதவியில் இருந்திருக்கிறாா்.

தூத்துக்குடி, விருதுநகா் ஆகிய மாவட்டங்களைச் சோ்ந்த ஊா்கள் கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளன. கல்வெட்டு வெட்டிய காலத்தில் துத்திநத்தம், வாலசுப்பிரமணியபுரம் உள்பட இதனருகே உள்ள பல ஊா்கள் உருவாகவில்லை. இந்தக் கல்வெட்டு 192 ஆண்டுகள் பழைமையானது என்றாா் அவா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.