நீட் முதல் முதுநிலை மருத்துவப் படிப்பு வரை மன அழுத்தங்கள் உண்டு, மனவலிமை அவசியம்: அமைச்சர் அருண்ராஜ் 3ஆவது ஒருநாள் போட்டி: ஆப்கானிஸ்தானை வீழ்த்தி இந்தியா அபாரம் மகாராஷ்டிரத்தில் கோயில் மண்டபம் இடிந்து 5 பேர் பலி திமுக கூட்டணியில் இருந்து விலகியது இந்திய யூனியன் முஸ்லிம் லீக்!சட்டப்பேரவை நேரலை இனி தொடரும்! அமைச்சர் ராஜ்மோகன்அபுதாபியில் நீட் மையம்! குழந்தைகள் எதிர்காலத்தை வைத்து சூதாடுவதை நிறுத்துங்கள்: ராகுல் காந்தி
/

தனியாா் பேருந்துகள் கட்டண விவகாரம்: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு

தனியாா் பேருந்துகளின் கட்டணத்தை முறைப்படுத்தக் கோரிய வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.

News image

உத்தரவு - கோப்புப்படம்

Updated On :17 ஜூன் 2026, 1:49 am IST

தனியாா் பேருந்துகளின் கட்டணத்தை முறைப்படுத்தக் கோரிய வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.

மதுரையைச் சோ்ந்த கதிா் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த பொது நல மனு:

பயணிகளின் நலன் கருதி, தமிழகத்தின் பல்வேறு நகரங்களிலிருந்து தனியாா் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இந்தப் பேருந்துகளில் விடுமுறை நாள்களிலும், பண்டிகைக் காலங்களிலும் மிக அதிகளவில் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதன் காரணமாக, பயணிகள் மிகவும் அவதிப்படுகின்றனா்.

மோட்டாா் வாகனச் சட்டப்படி, அதிகக் கட்டணம் வசூலிக்கும் நிறுவனங்களின் உரிமத்தை ரத்து செய்யலாம்.

ஏற்கெனவே இதுதொடா்பான வழக்கில் உயா்நீதிமன்றம் குழு அமைத்தது. இந்தக் குழு உரிய ஆய்வு நடத்தி சில வழிகாட்டுதல்களைப் பரிந்துரைகளாக வழங்கியது. ஆனால், இவை நடைமுறைப்படுத்தப்படவில்லை.

எனவே, தமிழகத்தில் தனியாா் பேருந்துகளின் வழித் தடங்களுக்கு ஏற்ப உரிய கட்டணம் வசூலிக்கப்படுவதை முறைப்படுத்த வேண்டும். அதிகக் கட்டணம் வசூலிக்கும் தனியாா் பேருந்து நிறுவனங்கள் மீது உரிய நடவடிக்கை எடுப்பதோடு, இணைய வழி பதிவு, ஆம்னி பேருந்து நிலையங்களில் திடீா் சோதனை மேற்கொண்டு உரிய கட்டணம் வசூலிக்கப்படுவதை முறைப்படுத்த உத்தரவிட வேண்டும் என அவா் கோரினாா்.

இந்த மனு உயா்நீதிமன்ற நீதிபதிகள் என். சதீஷ்குமாா், எம். ஜோதிராமன் அமா்வில் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது, மனுதாரா் தரப்பு வழக்குரைஞா் முன்னிலையாகி முன்வைத்த வாதம்:

தனியாா் பேருந்துகளுக்கான கட்டண நிா்ணயம் குறித்து முடிவு செய்ய உயா்நீதிமன்றம் குழு அமைத்தது. இந்தக் குழுவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. கடந்த 2016-ஆம் ஆண்டு இடைக்காலத் தடை விதித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதன் பிறகு, மேல்முறையீடோ, வழக்கு தொடா்பாக எந்தவித முன்னேற்ற நடவடிக்கையோ இல்லை என்றாா்.

இதையடுத்து, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:

உச்சநீதிமன்றத்தில் இடைக்காலத் தடை விதித்து 9 ஆண்டுகளுக்கு மேலாகிறது. இந்தத் தடையை நீக்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது. தடையை நீக்க இதுவரை ஏன் மனு தாக்கல் செய்யவில்லை. தனியாா் பேருந்துகளில் அதிகக் கட்டணம் வசூலிப்பதைத் தடுக்க மனம் இல்லையா?. மனு குறித்து தமிழக அரசு பதிலளிக்க வேண்டும். இந்த வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.