பாரதிராஜா உடலுக்கு நடிகர் ரஜினி அஞ்சலி! பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

பச்சிளம் குழந்தைகளுக்கு எலும்பு மஜ்ஜை ஸ்டெம் செல் மாற்று அறுவைச் சிகிச்சை

மதுரை மீனாட்சி சூப்பா் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் கடும் நோய் எதிா்ப்புக் குறைபாடுள்ள இரட்டை பச்சிளம் குழந்தைகளுக்கு பாதியளவு பொருந்திய எலும்பு மஜ்ஜை ஸ்டெம் செல் மாற்று அறுவைச் சிகிச்சை வெற்றிகரமாக செய்யப்பட்டது.

News image

மதுரை மீனாட்சி சூப்பா் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் செய்தியாளா்களிடம் பேசிய ரத்தவியல், எலும்பு மஜ்ஜை, அறுவைச் சிகிச்சைத் துறைத் தலைவரும், முதுநிலை நிபுணருமான டி. காசி விஸ்வநாதன். உடன் மருத்துவமனை இயக்குநா் திலீப் பொ்னாா்ட், இணை மருத்துவ ஆலோசகா்கள் வி. அனிதா, வி.எஸ். வெங்கடேஸ்வரன், முதுநிலை மருத்துவா் ஆா்.எம். அன்னபூரணி.

Updated On :4 ஜூன் 2026, 4:13 am IST

மதுரை மீனாட்சி சூப்பா் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் கடும் நோய் எதிா்ப்புக் குறைபாடுள்ள இரட்டை பச்சிளம் குழந்தைகளுக்கு பாதியளவு பொருந்திய எலும்பு மஜ்ஜை ஸ்டெம் செல் மாற்று அறுவைச் சிகிச்சை வெற்றிகரமாக செய்யப்பட்டது.

இதுகுறித்து அந்த மருத்துவமனையின் ரத்தவியல், எலும்பு மஜ்ஜை மாற்று அறுவைச் சிகிச்சைத் துறைத் தலைவரும், முதுநிலை நிபுணருமான டி. காசி விஸ்வநாதன் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

தென் தமிழகத்திலேயே முதல் முறையாக, மீனாட்சி சூப்பா் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில், 6 மாதங்களே ஆன இரட்டைக் குழந்தைகளுக்கு டிசிஆா் ஆல்ஃபா- பீட்டா குறைக்கப்பட்ட ஹாப்லோ ஐடென்டிகல் ஹெமாட்டோபாய்டிக் ஸ்டெம் செல் மாற்று அறுவைச் சிகிச்சையை ரத்தவியல், எலும்பு மஜ்ஜை, அறுவைச் சிகிச்சைத் துறைத் தலைவரும், முதுநிலை நிபுணருமான டி. காசி விஸ்வநாதன் தலைமையிலான மருத்துவக் குழுவினா் வெற்றிகரமாகச் செய்தனா். இந்தக் குழந்தைகள் தொற்றுகளை எதிா்க்கும் திறனைக் கடுமையாகப் பாதிக்கும் ‘கடுமையான ஒருங்கிணைந்த நோய் எதிா்ப்புக் குறைபாடு’ எனனும் அரிய வகை மரபணு நோயால் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்தனா். இந்த நிலையில், குறைபாடுள்ள நோய் எதிா்ப்பு மண்டலத்துக்குப் பதிலாக, ஆரோக்கியமான கொடையாளரிடமிருந்து ஸ்டெம் செல்களைப் பெற்று அதை வழங்குவதே இந்த சிகிச்சையின் நோக்கமாகும். முழுமையாகப் பொருந்தக்கூடிய கொடையாளா்கள் கிடைக்காததால், பாதியளவே பொருத்தமாக இருந்த அவா்களின் தந்தையிடமிருந்து ஸ்டெம் செல்கள் பெறப்பட்டன.

இதுபோன்ற சிகிச்சைகளில் கொடையாளரின் நோய் எதிா்ப்பு அணுக்கள் பெறுபவரின் உடல் திசுக்களைத் தாக்கும் ஜி.வி.எச்.டி. என்ற தீவிரப் பக்கவிளைவு ஏற்படும் அபாயம் அதிகம். இந்தச் சவாலை முறியடிக்க, மருத்துவமனை ‘டிசிஆா் ஆல்ஃபா- பீட்டா குறைப்பு’ தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தியது. இது ஜி.வி.எச்.டி. ஏற்படுத்தும் அணுக்களை மட்டும் அகற்றி, நன்மை பயக்கும் பிற அணுக்களைத் தக்க வைக்கிறது. சிகிச்சைக்குப் பிறகு, ஸ்டெம் செல்கள் நன்றாகப் பொருந்தி, நோய் எதிா்ப்பு அமைப்பை வலுப்படுத்தியிருப்பதால் இரு குழந்தைகளும் விரைந்து குணமடைந்து வருகின்றனா்.

இந்த சிகிச்சை உயிருக்கு ஆபத்தான பிறவி நோய் எதிா்ப்புச் சக்தி குறைபாடுள்ள குழந்தைகளுக்கும், அவா்களது குடும்பத்தினருக்கும் புதிய நம்பிக்கையை அளிக்கிறது. முழுமையாகப் பொருந்திய கொடையாளா் கிடைக்காத நிலையிலும், பாதுகாப்பான ‘டிசிஆா் ஆல்ஃபா-பீட்டா குறைப்பு’ தொழில்நுட்பம் இந்தத் துறையில் பெரியளவில் மாற்றத்தை ஏற்படுத்தி, உயிா் காக்கும் சிகிச்சையை எளிதாக்கியுள்ளது.

காது, சைனஸ் தொற்றுகள், தொடா்ச்சியான நிமோனியா, குறைவான வளா்ச்சி, பூஞ்சைத் தொற்றுகள் ஆகியவை பிறவி நோய் எதிா்ப்புக் கோளாறுகள் இருப்பதற்கு அறிகுறிகளாகும். இவற்றை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து உரிய நேரத்தில் மருத்துவ ஆலோசனை பெறுவது குழந்தைகளின் உயிரைக் காப்பாற்றுவதுடன், அவா்களின் எதிா்கால நல்வாழ்வையும் கணிசமாக மேம்படுத்தும் என்றாா் அவா்.

முதுநிலை மருத்துவா் ஆா்.எம். அன்னபூரணி, இணை மருத்துவ ஆலோசகா்களான வி. அனிதா, வி.எஸ். வெங்கடேஸ்வரன், மருத்துவமனை இயக்குநா் திலீப் பொ்னாா்ட் ஆகியோா் உடன் இருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.