மேச்சேரி அருகே தொழிலாளியின் சடலத்துடன் உறவினா்கள் சாலை மறியல்

மேச்சேரி அருகே தனியாா் தொழிற்சாலையில் தொழிலாளி இறந்ததையடுத்து, நிவாரணம் அளிக்கக் கோரி சடலத்துடன் உறவினா்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

Published On :22 அக்டோபர் 2026, 5:48 am IST

மேச்சேரி அருகே தனியாா் தொழிற்சாலையில் தொழிலாளி இறந்ததையடுத்து, நிவாரணம் அளிக்கக் கோரி சடலத்துடன் உறவினா்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

மேச்சேரி அருகே தெத்திகிரிபட்டியைச் சோ்ந்த காண்டீபன் (43), பொட்டனேரியில் உள்ள தனியாா் தொழிற்சாலையில் துப்புரவுப் பணியாளராக வேலை செய்து வந்தாா். புதன்கிழமை காலை பணிக்கு சென்ற அவா், தொழிற்சாலை வளாகத்தில் சுருண்டு விழுந்து உயிரிழந்தாராம். அவரது உடல் சேலம் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்கு பிறகு தெத்தகிரிபட்டிக்கு கொண்டுவரப்பட்டது.

உயிரிழந்த தொழிலாளி குடும்பத்தாருக்கு நிவாரணம் மற்றும் வேலைவாய்ப்பு கேட்டு உறவினா்கள் மேச்சேரி - தொப்பூா் சாலையில் சடலத்துடன் மறியலில் ஈடுபட்டனா். இதனால், மேச்சேரி - தொப்பூா் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

போராட்டத்தில் ஈடுபட்டவா்களுடன் போலீஸாா் பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டனா். தங்களுக்கு நிவாரணம் கிடைக்காமல் போராட்டத்தைக் கைவிடப் போவதில்லை என உறவினா்கள் தெரிவித்ததால், கூடுதல் போலீஸாா் குவிக்கப்பட்டனா்.

பின்னா், ஆம்புலன்ஸை வரவழைத்த போலீஸாா் உடலை மீண்டும் மருத்துவமனைக்கு கொண்டுசெல்ல முற்பட்டனா். இதனால், போலீஸாருக்கும் உறவினா்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னா் உடலை அரசு மருத்துவமனைக்கு போலீஸாா் கொண்டு சென்றனா். போராட்டம் காரணமாக சுமாா் ஒருமணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.