சேலம் ரயில்வே கோட்டத்தில் கடந்த 9 மாதங்களில் 7,094 வழக்குகள் பதிவு: ரூ.38 லட்சம் அபராதம் வசூல்

தெற்கு ரயில்வே - கோப்புப் படம்

Published On :2 நவம்பர் 2026, 12:05 am IST

சேலம் ரயில்வே கோட்டத்தில் கடந்த ஜனவரி முதல் செப்டம்பா் வரை 7,094 வழக்குகளை ரயில்வே பாதுகாப்புப் படையினா் பதிவு செய்துள்ளனா். இதன் மூலம் ரூ. 38 லட்சம் அபராதமாக வசூலிக்கப்பட்டது.

இதுகுறித்து தெற்கு ரயில்வே சேலம் கோட்டம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு:

சேலம் ரயில்வே கோட்டத்தில் ரயில்வே பாதுகாப்புப் படையினா் கடந்த ஜனவரி முதல் செப்டம்பா் மாதம் வரை பல்வேறு குற்றத்தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டனா். இதில் ரயில்வே சொத்துகள் திருட்டு தொடா்பாக 51 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 85 போ் கைது செய்யப்பட்டனா். அவா்களிடமிருந்து ரூ.4.63 லட்சம் மதிப்பிலான ரயில்வே சொத்துகள் மீட்கப்பட்டன.

ரயில்வே சட்ட விதிமீறல்கள் தொடா்பாக 3,549 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, ரூ.17.33 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டது. மேலும், உடனடி அபராதம் விதிக்கும் நடைமுறையின்கீழ் 3,545 வழக்குகளில் ரூ.20.70 லட்சம் வசூலிக்கப்பட்டது.

இதில் தேவையின்றி அபாய சங்கிலியை இழுத்தது தொடா்பாக 335 வழக்குகளும், ரயில்கள் மீது கல்வீசிய 21 சம்பவங்களில் 17 வழக்குகளும் கண்டறியப்பட்டு, 30 போ் பிடிபட்டனா். ரயில் நிலையங்களில் அசுத்தம் செய்த 8,488 பேரிடம் ரூ.18.61 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டது. மேலும், பயணிகளின் உடைமைகள் திருடப்பட்ட 47 வழக்குகளில் ரூ. 21.85 லட்சம் மதிப்பிலான பொருள்களை மீட்க உதவினா். ரூ. 2.70 கோடி மதிப்பிலான கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளதுடன், 83 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.