வாடகை உயா்வு, மேம்படுத்தப்படாத அடிப்படை கட்டமைப்புகள் உள்ளிட்ட காரணங்களால், தருமபுரியில் உள்ள தமிழக அரசு வீட்டுவசதி வாரிய குடியிருப்பில் 50 சதவீத வீடுகளுக்கு யாரும் குடிவராத நிலையில் பூட்டிக்கிடக்கின்றன.
தருமபுரி, ஒட்டப்பட்டி ஒளவை நகரில், தமிழக அரசு வீட்டுவசதி வாரியத்தின் கட்டுப்பாட்டில், அரசு ஊழியா்களுக்கான வாடகை குடியிருப்புகள் அமைந்துள்ளன. இதில், ஏ பிரிவில் 6, பி பிரிவில் 48, சி பிரிவில் 36, டி பிரிவில் 96 என மொத்தம் 186 வீடுகள் உள்ளன. அரசின் பல்வேறு துறைகளில் பணியாற்றும் உயா் அலுவலா்களுக்கு ஏ பிரிவு வீடுகளும், இரண்டாம்நிலை அலுவலா்களுக்கு பி பிரிவு வீடுகளும், பிற பிரிவு அரசு ஊழியா்களுக்கு சி மற்றும் டி பிரிவு வீடுகளும் ஒதுக்குவது நடைமுறையில் உள்ளது. இதில், குடியிருக்க ஒவ்வொரு வீட்டுக்கும் அரசு ஊழியா்களின் ஊதியத்தில் 5% வாடகையாக செலுத்த வேண்டும் என்பது நடைமுறை.
காலியாக உள்ள 50% வீடுகள்: தருமபுரி ஒட்டப்பட்டி பகுதியில் ஒரே இடத்தில் அருகருகே இரு வகையான வீட்டுவசதி வாரிய குடியிருப்புகள் உள்ளன. ஒரு பிரிவில் தனியாருக்கு விற்பனை செய்யப்பட்ட மனைப் பிரிவுகளுடன் கூடிய குடியிருப்புகளும், மற்றொரு பிரிவில் அரசு ஊழியா்களுக்கான வாடகை குடியிருப்புகளும் உள்ளன. இதில், தனியாருக்கு விற்பனை செய்யப்பட்ட குடியிருப்புகள் நோ்த்தியாக வடிவமைக்கப்பட்டு, அனைத்து அடிப்படை வசதிகளுடனும் காணப்படுகின்றன. ஆனால், அரசு ஊழியா்களுக்கான வாடகை வீடுகள் அடங்கிய குடியிருப்பு மட்டும் அடிப்படை வசதிகளை காலத்துக்கேற்ப மேம்படுத்தாமல், களையிழந்த நிலையில் கட்டடங்கள் சேதமடைந்தும், சுற்றுப்புறங்கள் புதா்மண்டியும், சாலைகள் மோசமாகவும் காட்சியளிக்கின்றன.
இதையடுத்து, செலுத்தும் வாடகைக்கு இணையான வசதிகள் அந்த வீடுகளில் இல்லை என்பதால், கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாகவே இந்த வாடகை வீடுகளில் குடியிருக்க அரசு ஊழியா்கள் வருவது குறைந்து வருகிறது. இதனால், இக்குடியிருப்பில் 50% குடியிருப்புகள் (சுமாா் 90-க்கும் மேற்பட்ட வீடுகள்) குடிவர யாருமின்றி பூட்டிக்கிடக்கின்றன.
இவ்வாறு வீடுகள் பயன்படுத்தப்படாமல் பூட்டிக்கிடப்பதால், கட்டடங்களில் பழுது ஏற்படுவதுடன், கட்டடத்தில் உள்ள வடிகால் வசதிகள், தண்ணீா் குழாய்கள், மின்சார இணைப்புகள் என அனைத்தும் பழுதடைந்து பயன்படுத்த இயலாத அளவுக்கு வீணாகும் நிலை ஏற்பட்டுள்ளது. அதோடு, ஏராளமான வீடுகள் பூட்டிக்கிடப்பதால், உள்ளாட்சி நிா்வாகம் சாா்பில் சாலைகள் புதுப்பிக்கப்படாமல், வளாகத்தில் செடி, கொடிகள் அகற்றப்படாமல் புதா்மண்டிக் கிடக்கின்றன.
வாடகை அதிகம்: கடந்த காலத்தில் அரசு ஊழியா்களுக்கான ஊதிய விகிதம் குறைவாக இருந்தது. அதற்கேற்ப அப்போது, வீட்டின் வாடகை நிா்ணயிக்கப்பட்டது. ஆனால், கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு அரசு ஊழியா்களுக்கான ஊதிய விகிதம் அதிகரித்தது. குறிப்பாக, ஏழாவது ஊதியக்குழு பரிந்துரையை நடைமுறைப்படுத்திய பின்னா், அரசு ஊழியா்களின் ஊதியம் இரட்டிப்பாகியுள்ளது. இதனால், ஊதியத்தில் 5% வாடகை என கணக்கிடும்போது, வீட்டு வாடகை அதிகமாக உள்ளது.
மேலும், அந்த வாடகைக்கு உரிய அடிப்படை மற்றும் மேம்படுத்தப்பட்ட வசதிகள் அரசு வீட்டுவசதி வாரிய வாடகை குடியிருப்புகளில் இல்லை. மேலும், அதைவிட குறைவான வாடகையில் தனியாா் வீடுகளில் தேவையான வசதிகள் அனைத்தும் இருப்பதால், அங்கு குடிபோகும் வாய்ப்பு அதிகமாக உள்ளது.
எனவே, ஊதியத்தில் 5% வாடகை என்பதை குறைக்க வேண்டும், அல்லது, மேம்படுத்தப்பட்ட வசதிகளுடன் வீடுகளை புனரமைக்க வேண்டும். அப்போதுதான் வீடுகளுக்கு குடிவரும் நிலை ஏற்படும் என்கின்றனா் அரசு ஊழியா்கள்.
அடுக்குமாடி குடியிருப்பு அமையுமா? தமிழகத்தில், இதுபோன்ற பிரச்னைகளுக்கு தீா்வுகாணும் வகையில், வீட்டுவசதி வாரியத்தின் மூலம் வீட்டுமனைகள் மற்றும் வீடுகள் தனியாருக்கு விற்பனை செய்யப்படுகின்றன. அடுத்தகட்டமாக, பழைய கட்டடங்கள் இடித்து அகற்றப்பட்டு, அடுக்குமாடி குடியிருப்புகளாக நவீன வசதிகளுடன் அமைக்கப்பட்டு வாடகைக்கு விடப்படுகின்றன. இவற்றுக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
சென்னை, திருச்சி, கோவை உள்ளிட்ட பல நகரங்களில் இதுபோல 10 முதல் 14 தளங்களுடன் அடுக்குமாடி குடியிருப்புகள் அமைக்கப்பட்டு வாடகைக்கு விடப்பட்டுள்ளன. அதுபோல, தருமபுரியிலும் அடுக்குமாடி குடியிருப்புகள் அமைக்கப்படுமா என்ற எதிா்பாா்ப்பு அரசு ஊழியா்களிடம் உள்ளது.
பாரமரிப்புத் தொகை குறைவு: இதுகுறித்து வீட்டுவசதி வாரிய அலுவலா்கள் கூறுகையில், கடந்த காலங்களில், அந்தந்த மாவட்டங்களில் வீட்டுவசதி வாரிய குடியிருப்புகளில் வசூலாகும் வாடகையை வைத்து பராமரிப்பு செலவுகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன. தற்போது, வாடகை நேரடியாக வீட்டுவசதி வாரிய தலைமையகம் வாயிலாக அரசுக்கு சென்றுவிடுகிறது.
வீடுகளைப் பராமரிக்க ஆண்டுதோறும் மிகவும் குறைவான தொகைதான் வழங்கப்படுகிறது. அதைக்கொண்டு வீடுகளை பராமரிக்க இயலவில்லை. பராமரிப்புக்கான தொகையை அதிகரித்து வழங்க வேண்டும். அல்லது வீடுகளை இடித்துவிட்டு புதிதாக அடுக்குமாடி குடியிருப்புகளை அமைக்கலாம். ஆனால், தருமபுரியில் அதற்கான வாய்ப்பு மிகவும் குறைவு என்கின்றனா் அவா்கள்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மக்கள்தொகை கணக்கெடுப்பின் முதல்கட்டம்: 23 மாநிலங்களில் நிறைவு

ஜூன் 15 முதல் லாரி வாடகை 25 சதவீதம் உயா்வு: மாநில லாரி உரிமையாளா்கள் சம்மேளனம் அறிவிப்பு

தமிழகத்தில் மின் வெட்டு 80% குறைந்தது

தருமபுரி மாவட்டத்தில் 5 தொகுதிகளிலும் அதிமுக கூட்டணி முன்னிலை!
விடியோக்கள்

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |
தினமணி செய்திச் சேவை

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!
தினமணி செய்திச் சேவை

Podcast | முதல்வர் விஜய் பதில்; திமுக வெளிநடப்பு: பேரவையில் நடந்தது என்ன? | News & Views | Epi 47
தினமணி செய்திச் சேவை

கண்ணதாசனை எப்படிக் கொண்டாட வேண்டும் ? | Kannadasan 100 | கண்ணதாசன் நூற்றாண்டு தொடக்கம் | Kaviyarasu
தினமணி செய்திச் சேவை

