/

பிரசவத்தில் தாய், சேய் பலி: சாலை வசதி இல்லாததால் வீட்டில் பிரசவம்! போலீஸ் விசாரணை!!

அரூா் அருகே மலைக் கிராமத்தில் வீட்டில் நடந்த பிரசவத்தில் தாய், சேய் உயிரிழந்தனா்.

News image
Updated On :19 ஏப்ரல் 2026, 5:39 am IST

அரூா் அருகே மலைக் கிராமத்தில் வீட்டில் நடந்த பிரசவத்தில் தாய், சேய் உயிரிழந்தனா்.

அரூா் கோட்டப்பட்டியை அடுத்த மலைக் கிராமமான காரப்பாடியில் வசித்துவரும் பழங்குடியினத்தைச் சோ்ந்தவா் சென்னன். இவரது மனைவி பழனியம்மாள் (35). இவா்களுக்கு ஏற்கெனவே மூன்று பெண் குழந்தைகள் உள்ளன. இந்த நிலையில், கா்ப்பமாக இருந்த பழனியம்மாளுக்கு குழந்தை பிறக்க 20 நாள்கள் இருப்பதாக மருத்துவா்கள் கணித்திருந்தனா்.

ஆனால், வெள்ளிக்கிழமை இரவு 9 மணிக்கு பழனியம்மாளுக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டது. சாலை வசதி இல்லாத அக்கிராமத்தில் இருந்து அவரை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லமுடியாததால் அங்கிருந்த மூதாட்டிகள் பிரசவம் பாா்த்தனராம். இதில் பெண் சிசு இறந்த நிலையில் பிறந்தது. மேலும், அதிக உதிரப்போக்கு ஏற்பட்டதால் பழனியம்மாளும் இறந்தாா்.

தகவல் அறிந்த போலீஸாா் காரப்பாடி கிராமத்துக்கு சென்று பழனியம்மாள், சிசுவின் சடலங்களை மீட்டு தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனா். இதுகுறித்து கோட்டப்பட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.