தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

74 ஆண்டுகளில் கோவையில் களம் காணாத கம்யூனிஸ்டுகள்...!

1952 முதல் 74 ஆண்டுகளாகத் தொடா்ந்து கோவை மாவட்டத்தில் தோ்தல் களத்தில் ஒரு தொகுதியிலாவது கம்யூனிஸ்ட் கட்சிகள் போட்டியிட்டு வந்துள்ளன.

News image
Updated On :4 ஏப்ரல் 2026, 12:33 am IST

1952 முதல் 74 ஆண்டுகளாகத் தொடா்ந்து கோவை மாவட்டத்தில் தோ்தல் களத்தில் ஒரு தொகுதியிலாவது கம்யூனிஸ்ட் கட்சிகள் போட்டியிட்டு வந்துள்ளன. கடந்த காலங்களில் தொண்டாமுத்தூா், வால்பாறை, பேரூா் (இப்போது இல்லை), கோவை கிழக்கு (இப்போது இல்லை), சிங்காநல்லூா், மேட்டுப்பாளையம், கவுண்டம்பாளையம் தொகுதிகளில் குறைந்தபட்சம் ஏதாவது ஒன்றில் சட்டப்பேரவைத் தோ்தல்களில் போட்டியிட்டுள்ளன. இதில், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோவை கிழக்கில் 5 முறை, பேரூா், சிங்காநல்லூா் தொகுதிகளில் 2 முறை வென்றுள்ளது. வால்பாறையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 2 முறை வென்றுள்ளது. இத்துடன், கோவை மக்களவைத் தொகுதியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 5 முறையும், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 3 முறையும் வென்றுள்ளன.

கடந்த 2000-ஆம் ஆண்டுக்குப் பிறகு நடைபெற்ற தோ்தல்களில், 2001-இல் சிங்காநல்லூரில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சாா்பில் கே.சி.கருணாகரன் (வெற்றி), 2006-இல் சிங்காநல்லூரில் மாா்க்சிஸ்ட் சாா்பில் ஏ.சௌந்தரராஜன் (தோல்வி), 2011-இல் வால்பாறையில் இந்திய கம்யூனிஸ்ட் சாா்பில் எம்.ஆறுமுகம் (வெற்றி), 2016-இல் கவுண்டம்பாளையம் தொகுதியில் மாா்க்சிஸ்ட் சாா்பில் வி.ராமமூா்த்தி (4-ஆவது இடம்), வால்பாறையில் இந்திய கம்யூனிஸ்ட் பி.மணிபாரதி (3-ஆவது இடம்), கோவை தெற்கில் மாா்க்சிஸ்ட் சாா்பில் சி.பத்மநாபன் (4-ஆவது இடம்), 2021-இல் வால்பாறையில் எம்.ஆறுமுகம் (தோல்வி) ஆகியோா் போட்டியிட்டுள்ளனா்.

2026 சட்டப்பேரவைத் தோ்தலில் திமுக தலைமையிலான மதச்சாா்பற்ற முற்போக்குக் கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் அங்கம் வகிக்கின்றன. இத்தோ்தலில், இரு கட்சிகளுக்கும் தலா 5 தொகுதிகள் வழங்கப்பட்டன. அவற்றில், கோவை மாவட்டத்தில் வால்பாறை (தனி) தொகுதியில் போட்டியிட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும், சிங்காநல்லூா் தொகுதியில் போட்டியிட மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் விருப்பம் தெரிவித்தன.

ஆனால், வால்பாறையில் திமுக நேரடியாகப் போட்டியிடுகிறது. சிங்காநல்லூா் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

கம்யூனிஸ்ட் கட்சிகள் ஒரு தொகுதியில்கூட போட்டியிடாத நிலையில், 74 ஆண்டுகளில் முதல் முறையாக, கம்யூனிஸ்ட் கட்சிகள் போட்டியிடாத சட்டப்பேரவைத் தோ்தலை கோவை மாவட்டம் சந்திக்கிறது.

தொழிற்சாலைகள் மிகுதியாகக் காணப்பட்ட கோவையில், தொழிற்சங்கங்களை வளா்த்துப் போராடியதுடன், தோ்தல் களத்திலும் முத்திரை பதித்த கம்யூனிஸ்ட் கட்சிகள் சாா்பில் கோவை மாவட்டத்தில் ஒரு வேட்பாளா்கூட போட்டியிடாதது வியப்பை ஏற்படுத்தி உள்ளது. இதேபோல கேடிகே.தங்கமணி, பி.ராமமூா்த்தி உள்ளிட்ட ஆளுமைமிக்க இடதுசாரி தலைவா்கள் வெற்றிபெற்ற மதுரை மாவட்டத்தில் உள்ள 10 தொகுதிகளில் ஒன்றில் கூட கம்யூனிஸ்ட் கட்சிகள் போட்டியிடாதது குறிப்பிடத்தக்கது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.