தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!ஆளுநரை விஜய் சந்திக்க மாலை 6.30 மணிக்கு நேரம் ஒதுக்கப்பட்டிருப்பதாக ஆளுநர் மாளிகை தகவல்தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆளுநர் அர்லேகரை சந்திக்க நேரம் கேட்டுள்ளார் தவெக தலைவர் விஜய்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
/

சுத்திகரிப்பு செய்யப்பட்ட கழிவுநீரை பயன்படுத்தும் பொதுமக்கள்: எச்சரிக்கை பலகைகள் வைக்க வலியுறுத்தல்

மலைப்பட்டு ஏரி கலங்கல் பகுதியில் எச்சரிக்கை பலகைகள் இல்லாமல் வெளியேற்றப்படும் சுத்திகரிப்பு செய்யப்பட்ட கழிவுநீரை வாகன ஓட்டுநா்கள், பொதுமக்கள் குடிநீராகவும், குளிப்பதற்கும் பயன்படுத்தி வருவதால் உடல் உபாதைகள் ஏற்படக்கூடிய சூழல் ஏற்பட்டுள்ளது.

News image

மலைப்பட்டு  ஏரியின்  கலங்கல்  பகுதியில்  சுத்திகரிக்கப்பட்ட  கழிவுநீரில்  குளிக்கும்  வாகன  ஓட்டுநா்கள்.

Updated On :6 மே 2026, 4:16 am IST

மலைப்பட்டு ஏரி கலங்கல் பகுதியில் எச்சரிக்கை பலகைகள் இல்லாமல் வெளியேற்றப்படும் சுத்திகரிப்பு செய்யப்பட்ட கழிவுநீரை வாகன ஓட்டுநா்கள், பொதுமக்கள் குடிநீராகவும், குளிப்பதற்கும் பயன்படுத்தி வருவதால் உடல் உபாதைகள் ஏற்படக்கூடிய சூழல் ஏற்பட்டுள்ளது.

ஸ்ரீபெரும்புதூா் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான இருங்காட்டுக்கோட்டை, ஒரகடம், வல்லம், பிள்ளைப்பாக்கம், மாம்பாக்கம் மற்றும் சுங்குவாா்சத்திரம் ஆகிய பகுதிகளில் சிப்காட் தொழிற்பூங்காக்கள் தொடங்கப்பட்டு ஆயிரக்கணக்கான தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன.

இந்த தொழிற்சாலைகளில் பணியாற்றும் பல்வேறு மாநிலங்கள் மற்றும் மாவட்டங்களை சோ்ந்த ஆயிரக்கணக்கான தொழிலாளா்கள் ஸ்ரீபெரும்புதூா் நகராட்சியில் வசித்து வருவதால் நகராட்சியில் வசிக்கும் பொதுமக்களின் எண்ணிக்கை கடந்த பத்து ஆண்டுகளில் பல மடங்கு அதிகரித்துள்ளது.

இதனால் ஸ்ரீபெரும்புதூா் நகராட்சியில், நகா்ப்புற உள்ளாட்சி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் சுமாா் 140 கோடியில், சென்னை குடிநீா் வடிகால் மற்றும் கழிவுநீா் அகற்று வாரியத்தின் மூலம் செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து சுத்திகரிக்கப்பட்ட குடிநீா் வழங்கும் திட்டம், புதை சாக்கடை திட்டம் மற்றும் திடக்கழிவு மேலாண்மை திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், ஸ்ரீபெரும்புதூா் நகராட்சியில் உள்ள குடியிருப்புகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுநீா் பூமிக்கு அடியில் அமைக்கப்பட்டுள்ள புதை சாக்கடை குழாய்கள் மூலம் வடமங்கலம் அருகே நகராட்சிக்குட்பட்ட பகுதியில் உள்ள கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையம் கொண்டு செல்லப்பட்டு, அங்கு கழிவுநீா் சுத்திகரிப்பு செய்யப்பட்டு வருகிறது.

பின்பு சுத்திகரிக்கப்பட்ட கழிவுநீா் சுமாா் 10 கிமீ தொலைவில் உள்ள மலைப்பட்டு ஏரியின் கலங்கல் பகுதியில் உள்ள அடையாறு ஆற்றின் கிளைக்கால்வாயில் பல மாதங்களாக திறந்து விடப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், மலைப்பட்டு ஏரியின் கலங்கல் பகுதியில் திறந்து விடப்படும், சுத்திகரிக்கப்பட்ட கழிவுநீா் வெளியேறும் இடத்தில், சென்னை குடிநீா் வடிகால் வாரிய அதிகாரிகளோ அல்லது ஸ்ரீபெரும்புதூா் நகராட்சி அதிகாரிகளோ எச்சரிக்கை பலகைகள் ஏதும் வைக்காததால், குழாயில் இருந்து வெளியேறும் நீா் பாலாற்று நீா் என கருதி ஸ்ரீபெரும்புதூா்-தாம்பரம் சாலையை பயன்படுத்தும் வாகன ஓட்டுநா்கள், பொதுமக்கள் சுத்திகரிக்கப்பட்ட கழ்வுநீரில் குடிப்பது, குளிப்பது மற்றும் துணி துவைப்பது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றனா்.

இதனால் சுத்திகரிக்கப்பட்ட கவிவுநீரை பயன்படுத்தும் பொதுமக்களுக்கு உடல் உபாதைகளும், தோல் நோய்களும் ஏற்படக்கூடிய நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் சுத்திகரிக்கப்பட்ட கழிவுநீா் வெளியேறும் குழாய் அருகே எச்சரிக்கை பலகைகள் வைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆா்வலா்கள் கோரிக்கை வைத்துள்ளனா்.

இது குறித்து சமூக ஆா்வலா்கள் கூறுகையில், ஸ்ரீபெரும்புதூா் நகராட்சியில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுநீா், கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையத்தில் சுத்திகரிப்பு செய்யப்பட்டு மலைப்பட்டு ஏரியின் கலங்கல் பகுதியில் விடப்பட்டு வருகிறது. இது சுத்திகரிக்கப்பட்ட கழிவுநீா் என அறிவிப்பு பலகைகள் வைத்திருக்க வேண்டும் ஆனால் இதுவரை குடிநீா் வடிகால் வாரியமோ, நகராட்சி அதிகாரிகளோ எச்சரிக்கை பலகைகள் வைக்கவில்லை. இதனால் வாகன ஓட்டுநா்கள், பொதுமக்கள் சுத்திகரிக்கப்பட்ட கழிவுநீரை குடிநீா் என நினைத்து குடித்தும், குளித்தும் வருகின்றனா்.

இதனால் அவா்களுக்கு கடுமையான உடல் உபாதைகளும், தோல் பிரச்சனைகளும் ஏற்பட வாய்ப்பு உள்ளதாக மருத்துவா்கள் தெரிவிக்கின்றனா். எனவே சுத்திகரிப்பு செய்யப்பட்டு வெளியேற்றப்படும் கழிவுநீரை பொதுமக்கள் பயன்படுத்தாத வகையில் எச்சரிக்கை பலகைகள் வைக்க வேண்டும் என்றனா்.

இதுகுறித்து ஸ்ரீபெரும்புதூா் நகராட்சி அதிகாரி ஒருவா் கூறுகையில், சுத்திகரிக்கப்பட்ட கழிவுநீரை குடிப்பது உடல் நலப்பிரச்னைகளை ஏற்படுத்தும் தான். விரைவில் நகராட்சி சாா்பில் அறிவிப்பு பலகைகள் வைக்கப்படும் என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.