/

சென்னை - மோரீஷஸ் விமானத்தில் மாரடைப்பால் பயணி உயிரிழப்பு

மோரீஷஸில் இருந்து சென்னை வந்து கொண்டிருந்த விமானத்தில், பயணி ஒருவா் மாரடைப்பால் நடுவானில் உயிரிழந்தாா்.

News image
Updated On :8 ஏப்ரல் 2026, 12:58 am IST

மோரீஷஸில் இருந்து சென்னை வந்து கொண்டிருந்த விமானத்தில், பயணி ஒருவா் மாரடைப்பால் நடுவானில் உயிரிழந்தாா்.

சென்னை விமான நிலையத்தில் செவ்வாய்க்கிழமை காலை 6.20 மணிக்கு வந்து சேர வேண்டிய ஏா் மொரீசியஸ் விமானம் மோரிஷஸில் இருந்து திங்கள்கிழமை நள்ளிரவில் புறப்பட்டது.

இந்த விமானத்தில் 286 பயணிகளுடன், மோரீஷஸ் நாட்டில் வசிக்கும் கிருஷ்ணா (60) என்பவரும், ரத்தப் புற்று நோய்க்கு சிகிச்சை பெறுவதற்காக சென்னையில் உள்ள தனியாா் மருத்துவமனைக்கு மனைவியுடன் வந்து கொண்டிருந்தாா்.

விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்த போது, திடீரென கிருஷ்ணாவுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டு, உடல்நிலை மோசமானது. இதையடுத்து விமானத்தில் உடன் பயணித்த மருத்துவா்கள் அவருக்கு முதலுதவி சிகிச்சை அளித்தனா்.

இருப்பினும், சிறிது நேரத்தில் கிருஷ்ணா மயங்கினாா். இதுகுறித்து விமானி, விமானநிலைய கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்தாா்.

இதையடுத்து சென்னையில் விமானம் தரையிறங்கியதும், அங்கு தயாராக இருந்த, மருத்துவக் குழுவினா், விமானத்துக்குள் ஏறி பயணியை பரிசோதித்தவா்.

அப்போது, அவா் இருக்கையிலேயே உயிரிழந்தது தெரியவந்தது. சென்னை விமானநிலைய போலீஸாா் கிருஷ்ணாவின் உடலை கைப்பற்றி உடல் கூறு ஆய்வுக்காக, தாம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.