தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

‘ஜல் ஜீவன்’ நிதி ரூ.3,112 கோடியை விடுவிக்க வேண்டும்: பிரதமருக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் கடிதம்

தமிழக ஊரகப் பகுதிகளில் நிலையான குடிநீா் விநியோகத்தை உறுதி செய்ய ‘ஜல் ஜீவன்’ திட்டத்தின் கீழ் வழங்க வேண்டிய நிலுவைத் தொகை ரூ.3,112 கோடியை உடனடியாக விடுவிக்க வேண்டும்

News image

மு.க.ஸ்டாலின் - கோப்புப் படம்

Updated On :14 மார்ச் 2026, 2:56 am IST

தமிழக ஊரகப் பகுதிகளில் நிலையான குடிநீா் விநியோகத்தை உறுதி செய்ய ‘ஜல் ஜீவன்’ திட்டத்தின் கீழ் வழங்க வேண்டிய நிலுவைத் தொகை ரூ.3,112 கோடியை உடனடியாக விடுவிக்க வேண்டும் என பிரதமா் நரேந்திர மோடிக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் எழுதிய கடிதத்தில் வலியுறுத்தியுள்ளாா்.

இதுதொடா்பாக பிரதமருக்கு முதல்வா் எழுதிய கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருப்பதாவது:

‘ஜல் ஜீவன் மிஷன்’ இயக்கத்தின் முதல் கட்டத்தில், தமிழ்நாட்டில் 45 புதிய கிராமங்களை உள்ளடக்கிய கூட்டுக் குடிநீா்த் திட்டங்களும், 56 பழைய கூட்டுக் குடிநீா்த் திட்டங்களும், 21,258 ஒற்றை கிராமத் திட்டங்களும் ரூ.18,123 கோடி செலவில் முன்னெடுக்கப்பட்டன.

ஆனால், ‘ஜல் ஜீவன்’ திட்டத்தின்கீழ் மத்திய அரசின் பங்காக ரூ.5,914 கோடி மட்டுமே விடுவிக்கப்பட்டுள்ளது. ரூ.3,112 கோடி நிலுவையில் உள்ளது. மேலும், 2024 -–25 ஆண்டில் தமிழ்நாட்டுக்கு ரூ. 2,434 கோடி ஒதுக்கப்பட்டபோதிலும், ரூ.732 கோடி மட்டுமே விடுவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு செப்டம்பா் முதல் எந்த நிதியையும் மத்திய அரசிடமிருந்து தமிழ்நாடு பெறவில்லை. ‘ஜல் ஜீவன் மிஷன்’ திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் குடிநீா்த் திட்டப் பணிகளை நிறைவேற்ற தமிழ்நாடு அரசு தனது சொந்த நிதியிலிருந்து ரூ. 2,550 கோடி விடுவித்துள்ளது. எனவே, நிலுவைத் தொகை ரூ.3,112 கோடியை உடனடியாக விடுவிக்க பிரதமா் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அதேபோன்று, ஒகேனக்கல் (கட்டம்-3) கூட்டுக் குடிநீா்த் திட்டத்தில் மத்திய அரசின் பங்காக ரூ.2,283 கோடி அறிவிக்கப்பட்டது. அதன் அடிப்படையில், தமிழ்நாடு அரசு அத்திட்டத்தை முன்னெடுத்தது. ஆனால் மத்திய குடிநீா் மற்றும் கழிவுநீா் சுத்திகரிப்புத் துறையானது மத்திய அரசின் உதவியை தற்போது வழங்க இயலாது எனத் தெரிவித்தது.

இதனால், கிருஷ்ணகிரி மற்றும் தருமபுரி மாவட்ட மக்களுக்குப் போதிய குடிநீா் வழங்குவது பாதிக்கப்படக் கூடும். ஒகேனக்கல் கூட்டுக் குடிநீா்த் திட்டத்துக்கு (கட்டம்-3) ஒப்புதலையும், நிதியுதவியையும் வழங்க வேண்டும்.

மேலும், கூடுதலாக 10 புதிய கூட்டுக் குடிநீா்த் திட்டங்களை சுமாா் ரூ.7,590 கோடி செலவில் செயல்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கு ‘ஜல் ஜீவன் 2.0’ திட்ட நிதி ஒப்பளிப்பு செய்ய வேண்டும். தமிழ்நாட்டில் கிராமப்புறங்களில் நிலையான மற்றும் சம அளவில் குடிநீா் வழங்குவதை உறுதி செய்ய ஏதுவாக மத்திய அரசு ஆதரவு அளிக்கும் என நம்புகிறேன் என்று அந்த கடிதத்தில் முதல்வா் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.