
ஓமன் கடற்பகுதியில் இந்திய வணிகக் கப்பல் மீது தாக்குதல்: குஜராத்தைச் சேர்ந்த மாலுமி பலி!
ஓமன் கடற்பகுதியில் இந்திய வணிகக் கப்பல் மீது நடத்தப்பட்டத் தாக்குதலில் குஜராத்தைச் சேர்ந்த மாலுமி ஒருவர் பலியானார்.

தாக்குதலுக்குள்ளான இந்திய வணிகக் கப்பல் (எம்.எஸ்.வி. அல் யூசுஃபி)
ஓமன் கடற்பகுதியில் இந்திய வணிகக் கப்பல் மீது நடத்தப்பட்டத் தாக்குதலில் குஜராத்தைச் சேர்ந்த மாலுமி ஒருவர் பலியானார்.
ஓமன் கடற்பகுதியில் இந்திய வணிகக் கப்பல் (எம்.எஸ்.வி. அல் யூசுஃபி) மீது வான்வழித் தாக்குதல் நடைபெற்றுள்ளது. கப்பலில் 14 பணியாளர்கள் இருந்த நிலையில் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இதில், கந்தர் நஹீம் அஜிஜ் என்கிற குஜராத்தைச் சேர்ந்த மாலுமி ஒருவர் பலியானதாகத் மத்திய கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சர் சர்பானந்த சோனோவால் தெரிவித்தார்.
கப்பலில் இருந்த ஊழியர்கள் 13 பேர் ஓமன் கடலோரக் காவல்படையினரால் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர்.
பலியான மாலுமியின் குடும்பத்திற்கு இரங்கல் தெரிவித்த அமைச்சர் சர்பானந்த், ஓமனில் உள்ள இந்தியத் தூதரகத்துடன் இணைந்து, மீட்கப்பட்டவர்களுக்கு உடனடி உதவி வழங்கவும் பலியான மாலுமியின் உடலை விரைவில் தாயகம் கொண்டு வரவும் ஓமனில் உள்ள அதிகாரிகளுடன் ஒருங்கிணைந்து செயல்படுவதாகக் கூறினார்.
இந்தத் தாக்குதலுக்கு இந்திய சார்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய வெளியுறவுத் துறை சார்பில் வெளியிடப்பட்ட கண்டன அறிக்கையில், “இந்திய வணிகக் கப்பல் மீது நடத்தப்பட்ட தாக்குதலை வன்மையாகக் கண்டிக்கிறோம். கப்பலில் இருந்த பணியாளர்கள் 14 பேரில், ஒரு மாலுமி பலியான நிலையில், 13 பேர் மீட்கப்பட்டுள்ளானர். பலியான மாலுமிக்கு எங்களது ஆழந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், “இந்தப் பகுதியில் தொடர்ந்து வணிகக் கப்பல்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்கள் கவலையளிக்கிறது. பிராந்தியத்தில் அமைதியும் நிலைத்தன்மையும் திரும்பவும், பதட்டங்களைத் தணிக்கவும் மத்தியஸ்தம் மூலம் தீர்வுகாணவும், பேச்சுவார்த்தைகளை முடிவுக்குக் கொண்டுவரவும் நாங்கள் மீண்டும் அழைப்பு விடுக்கிறோம்.
வணிகக் கப்பல்கள் மற்றும் குடியிருப்புகள் போன்றவற்றின் மீது நடத்தப்படும் தாக்குதல்கள் முடிவுக்குக் கொண்டுவரப்பட வேண்டும். அதேநேரம், சர்வதேச சட்டத்திற்கு இணங்க, இப்பகுதியில் உள்ள சர்வதேச நீர்வழிகள் வழியே சுதந்திரமான மற்றும் தடையற்ற கப்பல் போக்குவரத்தும் வர்த்தகமும் கூடிய விரைவில் மீட்டெடுக்கப்பட வேண்டும்” என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Summary
Attack on an Indian merchant vessel off the coast of Oman: Sailor from Gujarat killed!
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





