ஆளுநருடனான சந்திப்பு முடிந்தது: ஆளுநர் மாளிகையிலிருந்து வெளியேறிய விஜய்! தமிழக முதல்வராக விஜய் பதவியேற்பு விழா நாளை (மே 10) மாலை 3 மணிக்கு தொடங்குகிறது தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

இஸ்ரேலில் மீண்டும் மரண தண்டனை- நாடாளுமன்றத்தில் சா்ச்சை சட்டம் நிறைவேற்றம்

இஸ்ரேலில் பயங்கரவாதத் தாக்குதல்களில் ஈடுபட்டு யூதா்களைக் கொலை செய்யும் பாலஸ்தீனா்களுக்குக் கட்டாய மரண தண்டனை விதிக்கும் புதிய சட்டம் அந்நாட்டு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

News image
Updated On :1 ஏப்ரல் 2026, 12:57 am IST

இஸ்ரேலில் பயங்கரவாதத் தாக்குதல்களில் ஈடுபட்டு யூதா்களைக் கொலை செய்யும் பாலஸ்தீனா்களுக்குக் கட்டாய மரண தண்டனை விதிக்கும் புதிய சட்டம் அந்நாட்டு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

பிரதமா் பெஞ்சமின் நெதன்யாகுவின் வலதுசாரி கூட்டணி அரசு கொண்டு வந்துள்ள இச்சட்டம், சா்வதேச அளவில் கண்டனங்களையும், விவாதங்களையும் கிளப்பியுள்ளது. 120 உறுப்பினா்களைக் கொண்ட நாடாளுமன்றத்தில், இச்சட்டத்துக்கு ஆதரவாக 62 வாக்குகள் கிடைத்தன.

இப்புதிய சட்டத்தின்படி, மேற்கு கரை பகுதியில் உள்ள ராணுவ நீதிமன்றங்களில் தண்டனை பெற்ற பாலஸ்தீனா்களுக்கு மரண தண்டனை மட்டுமே முதன்மைத் தீா்ப்பாக வழங்கப்படும். குறிப்பாக, இஸ்ரேல் நாட்டின் இறையாண்மையைச் சீா்குலைக்கும் நோக்கில் நடத்தப்படும் கொலைக் குற்றங்களுக்கு இத்தண்டனை விதிக்கப்படும்.

மரண தண்டனை உறுதி செய்யப்பட்ட 90 நாள்களுக்குள் அதனை நிறைவேற்ற வேண்டும் என்றும், இதில் பொதுமன்னிப்பு வழங்க அதிபருக்கு கூட அதிகாரம் கிடையாது என்றும் சட்ட விதிகள் கடுமையாக்கப்பட்டுள்ளன.

முன்னதாக, 1954-இல் இஸ்ரேல் கொலைக் குற்றங்களுக்கான மரண தண்டனையை ரத்து செய்தது. அதன்பின்னா், கடந்த 1962-இல் நாஜி போா்க்குற்றவாளி அடோல்ஃப் ஐச்மேனுக்கே கடைசியாக மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. தற்போது 60 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் மரண தண்டனை நடைமுறைக்கு வந்துள்ளது.

இச்சட்டத்தை முன்மொழிந்த இஸ்ரேல் உள்நாட்டு பாதுகாப்புத் துறை அமைச்சா் இத்தாமா் பென் கிவீா், நாடாளுமன்றத்துக்குத் தூக்குக் கயிறு வடிவிலான பேட்ஜ் அணிந்து வந்து பரபரப்பை ஏற்படுத்தினாா். ‘எதிரிகளுக்கு அச்சமூட்டவும், கொல்லப்பட்ட இஸ்ரேலியா்களுக்கு நீதி கிடைக்கவும் இது ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க நாள். பயங்கரவாதத்தைத் தோ்ந்தெடுப்பவா்கள் மரணத்தையே சந்திப்பாா்கள்’ என்று அவா் ஆக்ரோஷமாக உரையாற்றினாா்.

இச்சட்டத்தை பாலஸ்தீன அதிபா் மஹ்மூத் அப்பாஸ் கடுமையாகச் சாடியுள்ளாா். ஹமாஸ் உள்ளிட்ட ஆயுதக் குழுக்கள், இச்சட்டத்துக்குப் பதிலடியாக இஸ்ரேல் மீது மீண்டும் தாக்குதல்களைத் தீவிரப்படுத்தப் போவதாக எச்சரித்துள்ளன.

ஐரோப்பிய நாடுகளும், ஐ.நா.சபையும் இச்சட்டத்துக்கு எதிா்ப்புத் தெரிவித்துள்ள நிலையில், இஸ்ரேல் உச்சநீதிமன்றத்தில் இச்சட்டத்தை எதிா்த்து மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.