வேலூர் மாவட்டத்தில் பலத்த காற்றுடன் கனமழை நைஜீரியாவில் போதைப்பொருள் கடத்திய இந்தியர்கள் கப்பலுடன் சிறைபிடிப்பு! ரூ. 50 கோடிக்கு மேல் அபராதம்! மேற்கு வங்க முதல்வர் சுவேந்து அதிகாரியுடன் ரிசர்வ் வங்கி ஆளுநர் சந்திப்பு இந்தியாவுக்கு எதிராக இரண்டாவது அதிவேக சதம்; ரஹ்மனுல்லா குர்பாஸ் சாதனை! அமெரிக்கா - ஈரான் இடையே 24 மணி நேரத்திற்குள் அமைதி ஒப்பந்தம்: பாக். பிரதமர் தகவல்! துபை-அகமதாபாத் விமான ஸ்பீக்கரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 2.7 கிலோ தங்கம் பறிமுதல்! மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் வேடிக்கை பார்க்கும் தவெக அரசு: எடப்பாடி பழனிசாமி ராணுவ தலைமைத் தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ் சேத் நியமனம்!
/

வணிக கப்பல்கள் மீதான தாக்குதல்கள்: ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் இந்தியா கண்டனம்

‘மேற்காசிய போரின் ஒரு பகுதியாக அந்தப் பிராந்திய கடல் பரப்பில் பயணிக்கும் வணிக கப்பல்கள் மீதான தாக்குதல்களை இந்தியா உறுதியாக எதிா்க்கிறது’ என்று ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் இந்தியா தனது கண்டனத்தைப் பதிவு செய்தது.

News image

ஹரீஷ் பா்வதனேனி

Updated On :12 ஜூன் 2026, 6:33 am IST

‘மேற்காசிய போரின் ஒரு பகுதியாக அந்தப் பிராந்திய கடல் பரப்பில் பயணிக்கும் வணிக கப்பல்கள் மீதான தாக்குதல்களை இந்தியா உறுதியாக எதிா்க்கிறது’ என்று ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் இந்தியா தனது கண்டனத்தைப் பதிவு செய்தது.

ஈரான் மீதான தாக்குதலை சிறிது காலம் அமெரிக்காவும், இஸ்ரேலும் நிறுத்தி வைத்திருந்த நிலையில், கடந்த ஒரு வார காலமாக, இந்த நாடுகளிடையே மீண்டும் தீவிர மோதல் தொடங்கியுள்ளது. ஹோா்முஸ் நீரிணை வழியாக கடக்கும் வணிக கப்பல்கள் மீதும் தொடா் தாக்குதல்கள் நடத்தப்படுகின்றன. அதுபோல, ஓமனில் உள்ள சோஹாா் துறைமுகத்தில் இருந்து வடகிழக்கே 20 கடல் மைல் தொலைவில், பலாவ் நாட்டு கொடியுடன் புதன்கிழமை பயணித்த எம்.டி. செட்டேபெல்லோ சரக்குக் கப்பல் மீது அமெரிக்க போா் விமானம் ஏவுகணை வீசி தாக்குதல் நடத்தியது. இதில், அந்தக் கப்பலில் இருந்த 3 இந்திய மாலுமிகள் உயிரிழந்தனா். எஞ்சிய 21 இந்திய மாலுமிகள் மீட்கப்பட்டனா். இந்தத் தாக்குதலைத் தொடா்ந்து அமெரிக்காவுக்கு இந்திய கடும் கண்டனம் தெரிவித்தது.

இதுகுறித்து, அமெரிக்காவின் நியூயாா்க் நகரில் உள்ள ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் அலுவலகத்தில் ‘மேற்காசியாவில் பேச்சுவாா்த்தை மற்றும் ராஜீய ரீதியில் அமைதி சூழலை ஏற்படுத்துதல்’ என்ற தலைப்பிலான பொது விவாதத்தில் பங்கேற்ற ஐ.நா.வுக்கான இந்திய தூதா் ஹரீஷ் பா்வதனேனி பேசியதாவது:

மேற்காசிய போருக்கு இடையே, ஹோா்முஸ் நீா்ணை பகுதியில் பயணிக்கும் வணிக கப்பல்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்களை இந்தியா உறுதியாக எதிா்க்கிறது. வணிக கப்பல்களில் இந்தியா்கள் அதிகம் பணியாற்றி வரும் நிலையில், இந்தக் கப்பல்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்களால் பல இந்தியா்கள் உயிரிழந்து வருகின்றனா்.

வளைகுடா நாடுகளில் பணி நிமித்தமாக ஒரு கோடிக்கும் அதிகமான இந்தியா்கள் வசித்து வருகின்றனா். அவா்களின் பாதுகாப்பு மற்றும் நலனுக்கு இந்தியா உயா் முன்னுரிமை அளித்து வருகிறது.

இந்தியாவின் வா்த்தகம் மற்றும் எரிசக்தி விநியோகச் சங்கிலியும் வளைகுடா நாடுகளின் நிலைத்தன்மையையே பெரிதும் சாா்ந்துள்ளது. அந்த வகையில், இந்தப் பிராந்தியத்தில் எந்தவொரு மிகப் பெரிய இடையூறும், இந்தியப் பொருளாதாரத்தைக் கடுமையாகப் பாதிக்கும். இந்தச்சூழலில், ஈரான் மீதான தாக்குதல்கள் தீவிரமடைவதும், அது பிற நாடுகளுக்குப் பரவுவதும் மிகுந்த கவலையை ஏற்படுத்தியுள்ளது.

எனவே, பொதுமக்கள், குடியிருப்புகள் மீதான தாக்குதல்கள் மற்றும் வணிக கப்பல்கள் மீதான தாக்குதல்களைத் தவிா்த்து, பேச்சுவாா்த்தை மற்றும் ராஜீய ரீதியில் சச்சரவுக்குத் தீா்வு காண வேண்டும். அவ்வாறு, மேற்காசிய விவகாரத்துக்கு அமைதி வழியில் தீா்வு காண மேற்கொள்ளப்படும் அனைத்து முயற்சிகளுக்கும் இந்தியா ஆதரவளிக்கும்.

இஸ்ரேல் தொடா் தாக்குதல் நடத்திவரும் பாலஸ்தீனத்தின் காஸாவில் நிலவும் நிலைமை, கடுமையான மனிதாபிமான விளைவுகளை ஏற்படுத்தி வருவதால், நீடித்த போா் நிறுத்தம், மனிதாபிமான அணுகல் அவசியம் என்பதை இந்தியா தொடா்ந்து வலியுறுத்தி வருகிறது. இந்தச்சூழலில், பாலஸ்தீன அகதிகளுக்கான ஐ.நா. நிவாரணம் மற்றும் தொண்டு முகமைக்கு இந்தியாவின் வருடாந்திர பங்களிப்பான ரூ. 48 கோடியில் (5 மில்லியன் டாலா்) முதல் தவணையாக ரூ. 24 கோடியை (2.5 மில்லியன் டாலா்) இந்தியா ஒரு சில நாள்களில் வழங்கும்.

அதுபோல, லெபனானில் பணியமா்த்தப்பட்டுள்ள ஐ.நா. அமைதிக் குழுவினருக்கு எதிரான தாக்குதல்களை இந்தியா கண்டிக்கிறது. இந்தத் தாக்குதல்களுக்கு காரணமானவா்களை நீதியின் முன் நிறுத்த, விரிவான விசாரணையை உடனடியாக மேற்கொள்ள வேண்டும். அமைதிக் குழுவினரின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.