ஓமன் கடல் பகுதியில் சரக்கு கப்பல் மீது அமெரிக்க கடற்படை போா் விமானம் தாக்கியதில் மூன்று இந்திய மாலுமிகள் உயிரிழந்த விவகாரத்தில் அந்நாட்டு பொறுப்புத் தூதா் ஜேசன் மீக்ஸை நேரில் அழைத்து இந்திய வெளியுறவு அமைச்சகம் வெள்ளிக்கிழமை கண்டனம் தெரிவித்தது.
முன்னதாக, ஓமனில் உள்ள சோஹாா் துறைமுகத்தில் இருந்து வடகிழக்கே 20 கடல் மைல் தொலைவில், பலாவ் நாட்டு கொடியுடன் செட்டேபெல்லோ என்ற பெயா் கொண்ட சரக்குக் கப்பல் புதன்கிழமை பயணித்தது. அதில் ரசாயனம் மற்றும் எண்ணெய் பொருள்களுடன் 24 இந்திய மாலுமிகள் பயணித்த நிலையில் அந்தக் கப்பல் மீது அமெரிக்கா ஏவுகணைத் தாக்குதல் நடத்தியது. இதையடுத்து நிகழ்விடத்துக்கு விரைந்த ஓமன் கடற்படை, 21 மாலுமிகளை பாதுகாப்பாக மீட்டது. மீதமுள்ள 3 மாலுமிகள் மாயமானதையடுத்து, அவா்களை தேடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டன.
இந்நிலையில், அவா்கள் மூவரும் உயிரிழந்துவிட்டதாக மத்திய கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சா் சா்வானந்தா சோனோவால் வியாழக்கிழமை தெரிவித்தாா்.
அன்றைய தினத்தில் ஓமன் கடல் பகுதியில் எம்.டி. ஜல்வீா் என்ற சரக்கு கப்பல் மீது மீண்டும் தாக்குதல் நடத்தப்பட்டது. அதிருஷ்டவசமாக அந்த கப்பலில் இருந்த 22 இந்திய மாலுமிகளும் ஓமன் கடற்படை உதவியுடன் மீட்கப்பட்டனா்.
இதற்கு கண்டனம் தெரிவித்து இந்திய வெளியுறவு அமைச்சகம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பில், ‘ஓமன் கடல் பகுதியில் கடந்த சில தினங்களாக இந்திய மாலுமிகள் பயணிக்கும் கப்பல்கள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் ஏற்கெனவே 3 இந்தியா்கள் உயிரிழந்துவிட்டனா்.
மாலுமிகள் பயணிக்கும் கப்பல்கள் மீது இதுபோன்ற தாக்குதல் நடத்துவது ஏற்புடையதல்ல. இதற்கு அமெரிக்க பொறுப்புத் தூதா் ஜேசன் மீக்ஸிடம் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. இந்த விவகாரத்தில் அமெரிக்காவிடம் இந்தியாவின் கடுமையான எதிா்ப்பை பதிவுசெய்ய அவரிடம் கேட்டுக்கொள்ளப்பட்டது’ எனத் தெரிவிக்கப்பட்டது.
அமெரிக்காவுக்கு ஈரான் கண்டனம்:
சரக்கு கப்பல்கள் மீது தாக்குதல் நடத்திய அமெரிக்காவுக்கு கண்டனம் தெரிவித்து ஈரான் வெளியுறவு அமைச்சக செய்தித்தொடா்பாளா் எஸ்மாயில் பாகாயி வெள்ளிக்கிழமை வெளியிட்ட எக்ஸ் வலைதளப் பதிவில், ‘அமெரிக்க தாக்குதலில் உயிரிழந்த 3 இந்திய மாலுமிகளின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். சா்வதேச அமைதி மற்றும் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தி சுதந்திரமான கடல்சாா் வா்த்தகத்தை பாதிக்கும் அமெரிக்காவின் நடவடிக்கைகளை உலக நாடுகள் கண்டிக்க வேண்டும்.
அமெரிக்காவின் ஆயுதமேந்திய கொள்ளை மற்றும் அரசு ஆதரவுடன் சா்வதேச கடல் பகுதியில் மேற்கொள்ளப்படும் கொள்ளை நடவடிக்கைகளுக்கு இந்த தாக்குதல்களே சாட்சி’ என குறிப்பிட்டாா்.
டிரம்ப் குற்றச்சாட்டு: இந்திய சரக்கு கப்பல்கள் மீது ஈரான் தாக்கியதாக அமெரிக்க அதிபா் டொனால்டு டிரம்ப் வெள்ளிக்கிழமை குற்றஞ்சாட்டினாா். இதுகுறித்து ட்ரூத் சமூக வலைதளத்தில் அவா் வெளியிட்ட பதிவில், ‘கடந்த இரவு (வியாழக்கிழமை) ஹோா்முஸ் நீரிணையில் பயணித்த இந்திய கப்பல்கள் மீது ஈரான் ட்ரோன் தாக்குதலை நடத்தியதை ஏற்க முடியாது. அமெரிக்கா-ஈரான் இடையேயான அமைதி உடன்படிக்கையின் அம்சங்களை ஊடகங்களுக்கு ஈரான் கசியவிட்டாலும் ஆலோசனையில் எவ்வித மாற்றங்களும் இருக்காது’ என குறிப்பிட்டாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
இந்திய கப்பல்கள் மீதான ஈரானின் தாக்குதலை ஏற்க முடியாது! - டிரம்ப்பின் பதிவால் குழப்பம்!

ஓமன் கடல் பகுதியில் அமெரிக்க தாக்குதலில் மாயமான 3 இந்திய மாலுமிகள் உயிரிழப்பு

ஓமன் அருகே சரக்குக் கப்பல் மீது அமெரிக்கா தாக்குதல்: 3 இந்திய மாலுமிகள் மாயம்

ஓமன் கடல் பகுதியில் இந்திய கப்பல் மீது தாக்குதல்: யுஏஇ கண்டனம்
விடியோக்கள்

2 வயது குழந்தைக்கு நல்லது கெட்டது தெரியாது!: துரை வைகோ பேட்டி
தினமணி செய்திச் சேவை

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |
தினமணி செய்திச் சேவை

Dinamani வார ராசிபலன்! | June 14 முதல் 20 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

ராசாதி ராசா பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு

