தமிழக முதல்வராக விஜய் பதவியேற்பு விழா நாளை (மே 10) மாலை 3 மணிக்கு தொடங்குகிறது தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

மடலல்லது இல்லை வலி

ஆண்மகன் ஒருவன் தான் விரும்பிய பெண்ணை மணப்பதற்காக மேற்கொள்ளும் வழிமுறைகளில் மடலேறுதலும் ஒன்றாகும்.

News image

கோப்புப் படம்

Updated On :8 பிப்ரவரி 2026, 5:56 pm IST

ஆண்மகன் ஒருவன் தான் விரும்பிய பெண்ணை மணப்பதற்காக மேற்கொள்ளும் வழிமுறைகளில் மடலேறுதலும் ஒன்றாகும்.

ஏறிய மடல் திறம் இளமை தீர்திறம்

தேறுதல் ஒழிந்த காமத்து மிகுதிறம்

மிக்க காமத்து மிடலொடு தொகைஇச்

செப்பிய நான்கும் பெருந்திணைக் குறிப்பே

(தொல். பொருளதிகாரம், அகத்-54)

தொல்காப்பியத்தில் மடலேறுதல் நிகழ்வைப் பற்றி தொல்காப்பியர் எடுத்துரைத்துள்ளார்.

திருமணத்துக்கு இசைவு தெரிவிக்காத பெற்றோரைச் சம்மதிக்க வைக்கவும், தன் பெற்றோர் சொல்லும் ஆண் மகனையே திருமணம் செய்து கொள்வேன் எனக்கூறும் காதலியை அடிபணிய வைக்கவும், காதலி சம்மதம் தெரிவித்தும் அவர்தம் பெற்றோர் இசைவு தெரிவிக்காதபோதும் தலைவன் செய்யத் துணிந்த செயல்தான் மடலேறுதல்.

பனைமரத்தின் மட்டையின் அடிப்பகுதியில் தடித்து முட்கள் போன்ற அமைப்புடன் காணப்படும் பகுதியைக் கொண்டு குதிரை போன்ற ஒரு வடிவத்தை உருவாக்குவர். அதன் மீது காதலியைக் கைப்பிடிக்க நினைக்கும் ஆண் மகனை அமர்த்தி, அவனது உடலெங்கும் சாம்பலைப் பூசி பூவிளைப்பூ, எருக்கம்பூ, ஆவாரம்பூ ஆகியவற்றால் தொடுக்கப்பட்ட மாலை அணிவிக்கப்படும்.

குதிரை வடிவிலான மடலின் கீழ் நகரும் அளவுக்கு உருளைகள் பொருத்தப்பட்டிருக்கும். ஊரார் சேர்ந்து அந்தக் குதிரை அமைப்பை இழுத்துவர, அதன்மேல் அமர்ந்திருக்கும் ஆண்மகன் தன் காதலியின் உருவம் வரைந்த துணியைப் பிடித்தவாறு அவளைப்பற்றி பாடிக்கொண்டே தெருவைச் சுற்றி வருவான்.

இதன்மூலம் தன் காதலை ஊராருக்கும், காதலிக்கும் வெளிப்படையாக தெரிவிப்பதாக ஆண்மகன் நம்பினான். அவ்வாறு மடலேறிய பின்பும் காதலி இசைவு தெரிவிக்காத நிலையில் மறுமுறையும் அந்த ஆண்மகன் மடலேறி தன் வாழ்க்கையை முடித்துக்கொள்வான். பனை மடல்களால் செய்யப்பட்ட இந்த மடலை 'நன்மா', 'பெண்ணை மடல்' என நற்றிணையும், 'பனைபடு கலிமா', 'பெண்ணை மாமடல்' என குறுந்தொகையும் குறிப்பிடுகின்றன.

காதலர்களாக விளங்கும் தலைவன், தலைவியைப் பற்றிய தகவல் வீட்டார்க்கும், ஊரார்க்கும் தெரிய வருகிறது. தலைவி வெளியில் செல்லவும், தலைவனைச் சந்திக்கவும் தடை விதிக்கப்படுகிறது.

இதையறியாமல் தலைவியைச் சந்திக்க வரும் தலைவன் அங்குள்ள நிலையறிந்து அவளது தோழியிடம், 'எங்கள் காதல் புனிதமானது. அதைப் பெற மடலேறவும் தயங்க மாட்டேன். அவ்வாறு செய்த பின்னர் இப்போது எங்களைத் தூற்றும் இந்த ஊர் இவனைப் போல் ஒருவன் உண்டோ என பாராட்டுவார்கள்' என சூளுரைக்கிறான்.

கண்டவி ரெல்லாங் கதுமென வந்தாங்கே

.....

அடர்பொன் அவிரேய்க்கும் ஆவிரங் கண்ணி

(கலித்-140:1-7)

'நான் ஏறி வருவது மடலன்று, குதிரை என்று அறியுங்கள். நான் அணிந்திருப்பது பொன்நகை அன்று, பூளை, உழிஞை, பீலி முதலியவற்றை நூலிலே மணியுடன் சேர்த்துக்கட்டி பொன்னிறமுடைய ஆவிரம் பூவையும் சேர்த்து நானே தொடுத்து அணிந்துள்ள மலர்க்கண்ணி என்றுணருங்கள்' என ஊராரைப் பார்த்துக் கூறுகிறான்.

தலைவன் மடலேறுதலால் என்ன பயன்?

காமம் உழந்து வருந்தினார்க்கு ஏமம்

மடல்அல்லது இல்லை வலி. (குறள்-1131)

காதலியின் அன்பு பெறாமல் காமத்தால்

துன்புற்று வருந்துவோர்க்கு மடலேறுதல் அல்லாமல் வலிமையான துணை வேறொன்றுமில்லை என்கிறார் திருவள்ளுவர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.