பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

ஒரே வகுப்பில் தாயும் மகனும்!

பொறியியல் கல்லூரியில் 2-ஆம் ஆண்டு கணினி அறிவியல் படிப்பில் தாய் சத்யாவும், மகன் கவியரசுவும் ஒரே வகுப்பில் படித்துவருகின்றனர் என்றால் ஆச்சரியம்தானே!

Published On :25 அக்டோபர் 2026, 4:01 am IST

பொறியியல் கல்லூரியில் 2-ஆம் ஆண்டு கணினி அறிவியல் படிப்பில் தாய் சத்யாவும், மகன் கவியரசுவும் ஒரே வகுப்பில் படித்துவருகின்றனர் என்றால் ஆச்சரியம்தானே!

'காலையில் எழுந்து சமையல் உள்பட அனைத்து வீட்டு வேலைகளையும் முடித்து விட்டு எனக்கும் மகனுக்கும் சாப்பாடு எடுத்துக் கொண்டு கல்லூரிக்குப் புறப்படுவோம். எங்கள் இருவரையும் கணவர் கும்பகோணம் பேருந்து நிலையத்தில் கொண்டு வந்துவிடுவார்' என்கிறார் சத்யா.

'அம்மாவுக்குப் படிக்க வேண்டும் என்ற ஆசையிருப்பது கல்வியில் எனக்கு கூடுதல் உற்சாகத்தை அளிக்கிறது. சக மாணவர்களும் ஊக்கம் அளிக்கின்றனர்' என்கிறார் கவியரசு.

திருவாரூர் மாவட்டம், மாளிகை நத்தம் கிராமத்தைச் சேர்ந்தவர் சத்யா (36). பத்தாம் வகுப்பில் சத்யா 395 மதிப்பெண்கள் பெற்று சிறந்த மாணவியாகத் திகழ்ந்தார். குடும்ப வறுமை காரணமாக மேல் படிப்பைத் தொடர முடியாமல் போனது. சத்யாவுக்குத் திருமணம் செய்து வைக்க குடும்பத்தினர் முடிவு செய்தனர்.

கும்பகோணம் அருகேயுள்ள பவுண்டரீகபுரத்தைச் சேர்ந்த முறை மாமாவான உத்தண்டராயனுக்குத் திருமணம் செய்து கொடுத்தனர். விவசாயியான உத்தண்டராயனும் மனைவி சத்யா படிக்க வேண்டும் என ஆசைப்பட்டார்.

சத்யாவின் மகன் கவியரசு பத்தாம் வகுப்பு படித்து முடித்தவுடன் தொழிற்பயிற்சிக் கல்லூரியில் கணினி அறிவியல் படிக்க முடிவு செய்தார். அப்போது சத்யா, மகனுடன் சேர்ந்து படிக்க வேண்டும் என்ற தனது விருப்பத்தை கணவரிடம் தெரிவித்தார். கணவரும் அதற்கு ஒப்புதல் அளித்தார்.

அதேசமயம் சத்யாவுக்கு கல்வியில் 17 வருடங்கள் இடைவெளி ஏற்பட்டு விட்டது. சத்யாவால் படிக்க முடியுமா என்ற கேள்வி எழுந்தது. படிப்புக்கு வயது தடையில்லை என்பதால் தொழிற்கல்வி கல்லூரியில் சேர சத்யா தயாரானார்.

வலங்கைமான் அரசினர் பாலிடெக்னிக்கில் கணினி அறிவியல் வகுப்பில் தாய், மகன் இருவரும் ஒரே வகுப்பில் படித்துத் தேர்ச்சி பெற்றனர். தாய் சத்யா 85 சதவிகித மதிப்பெண்ணும், மகன் கவியரசு 71 சதவிகித மதிப்பெண்ணும் பெற்று தேர்ச்சி பெற்றனர். இதனையடுத்து இருவரும் பொறியியல் கல்வி படிக்க விரும்பினர்.

திருவாரூர் மாவட்டத்துக்கு உள்பட்ட நீடாமங்கலம் அருகேயுள்ள கோவில்வெண்ணி அஞ்சலையம்மாள் மகாலிங்கம் பொறியியல் கல்லூரியில் இரண்டாமாண்டு கணினி அறிவியல் பாடப்பிரிவில் இருவரும் ஒரே வகுப்பில் சேர்ந்து படித்து வருகின்றனர்.

பாலிடெக்னிக் படிப்பில் தேர்ச்சி பெற்றிருந்ததால் இருவரும் நேரடி இரண்டாமாண்டு வகுப்பில் சேர முடிந்தது.

'கல்லூரியில் ஆர்வமுடன் படிக்கும் எங்களுக்கு சக மாணவர்கள் ஊக்கம் அளிக்கின்றனர். ஆசிரியர்கள் ஆர்வமுடன் கற்றுத்தருகின்றனர்.' என்கிறார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.